Published:Updated:

சிவசங்கர் பாபாவின் ஆசிரம அறைக்கு சீல்; ஹார்டு டிஸ்க் பறிமுதல்! - விசாரணை வளையத்தில் பக்தர்கள்

 சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபாவின் கேளம்பாக்கம் ஆசிரமத்துக்குச் சென்ற போலீஸார், அவரின் அறையில் சோதனை நடத்தி சிசிடிவி கேமரா பதிவின் ஹார்டு டிஸ்க்கைப் பறிமுதல் செய்தனர்.

சென்னை கேளம்பாக்கத்தில், `ராமராஜ்யம்’ என்ற பெயரில் 64 ஏக்கரில் பக்தர்கள் குடியிருப்பு ஆசிரமம், ஸ்கூல் ஆகியவற்றை நடத்திவருபவர் சிவசங்கரன் என்கிற சிவசங்கர் பாபா. 72 வயதான பாபா மீது அந்தப் பள்ளியில் பயின்ற மாணவிகள் பாலியல் புகார்களைக் கொடுத்தனர். அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவு செய்து பாபாவை டெல்லியில்வைத்து கைதுசெய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்குப் பிறகு பாபா, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் பாபாவால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகாரளிக்கலாம் எனத் தெரிவித்தனர்.

சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா

இந்தநிலையில், பாபாவுக்கு ஆதரவாக பள்ளி ஆசிரியைகள், நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். அப்போது `சிவசங்கர் பாபா நல்லவர். அவர் தவறான எண்ணத்தில் யாரையும் அணுகவில்லை’ என்று கூறினர். அப்போது நிருபர்களின் கேள்விகளை பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகள் சமாளிக்க முடியாமல் திணறினர். மேலும், `சிவசங்கர் பாபா இருக்கும் இடத்தை நாங்கள்தான் கூறினோம். ஆனால், செய்தியில் சிவசங்கர் பாபா தலைமறைவாக இருந்ததாகவும், நேபாளத்துக்குத் தப்பிச் செல்ல முயன்றதாகவும் தகவல்கள் வருகின்றன. இது முற்றிலும் பொய்’ எனக் கூறினர். ஆனால், அந்தத் தகவலை சி.பி.சி.ஐ.டி போலீஸார் மறுத்திருக்கின்றனர்.

சிவசங்கர் பாபா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவருக்கு இன்று திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக சிறையிலிருந்து அவரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்து சிகிச்சை அளித்துவருகின்றனர். சில தினங்களுக்கு முன் டேராடூனில் சிவசங்கர் பாபாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டிருப்பதால், அது தொடர்பான சிகிச்சை அளிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா

இந்த வழக்கில் இன்று கேளம்பாக்கம் ஆசிரமத்துக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீஸார் அங்கிருந்த மூன்று பக்தர்களிடம் விசாரணை நடத்தினர். அதன் பிறகு ஆசிரமத்துக்குள் இருக்கும் சிவசங்கர் பாபாவின் அறைக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது சிசிடிவி கேமராக்களின் ஹார்டு டிஸ்க்கை போலீஸார் எடுத்துச் சென்றனர். ஏற்கெனவே இரண்டு ஆசிரியைகள் சி.பி.சி.ஐ.டி போலீஸாரின் விசாரணை வளையத்துக்குள் உள்ள நிலையில் மூன்று பக்தர்களிடம் விசாரணை நடந்துவருகிறது. சிவசங்கர் பாபாவின் மீது சுமத்தப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகளையடுத்து அந்தப் பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் மாற்றுச் சான்றிதழ்களைக் கேட்டு விண்ணப்பித்துவருகின்றனர். மாணவ, மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் எனக் குவிந்துவருவதால் பள்ளியில் நுழைவு வாயில் மூடப்பட்டிருக்கிறது.

ஆசிரமத்தில் நடந்த சோதனை குறித்து சி.பி.சி.ஐ.டி போலீஸார் கூறுகையில், `` மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டவுடன், சிவசங்கர் பாபாவைத் தேடி வடமாநிலங்களுக்குச் சென்றுவிட்டோம். அதேநேரத்தில் மாணவிகளின் புகாரில் ஆசிரமத்துக்குள் தங்களுக்குப் பாலியல் தொல்லைகள் நடந்ததாகக் குறிப்பிட்டிருக்கின்றனர். அதனால்தான் ஆதாரங்களைச் சேகரிக்க இன்று ஆசிரமத்துக்குள் சென்றோம். பாபா தங்கியிருந்த தனியறைக்குச் சென்று சோதனை நடத்தியபோது, அங்கிருந்து வழக்குக்குத் தேவையான சில ஆதாரங்களைப் பறிமுதல் செய்திருக்கிறோம். ஆசிரமத்தின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்திருக்கிறோம். மேலும் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் மூன்று பக்தர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

சிவசங்கர் பாபா: பக்தர்கள் வேடத்தில் சிக்கவைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார்! - டெல்லியில் நடந்தது என்ன?
நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படும் சிவசங்கர் பாபா
நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படும் சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபாவுக்கு வயது முதிர்வு, உடல்நலக் குறைவு ஆகியவற்றின் காரணமாக அவரிடம் மாணவிகளின் புகார்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த முடியவில்லை. அதனால்தான் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறோம். சிவசங்கர் பாபா தலைமறைவாகவில்லை எனப் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள் கூறியிருக்கிறார்கள். டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிவசங்கர் பாபா, போலீஸார் அவர் மது வழக்கு பதிவு செய்ததும், டேராடூனிலிருந்து ஏன் ரகசியமாக டெல்லிக்குச் சென்றார், மேலும், அங்கிருந்து கார் மூலம் நேபாளத்துக்குச் செல்ல திட்டமிட்டது ஏன் போன்ற கேள்விகளுக்கு பள்ளி நிர்வாகம் பதிலளிக்கலாம். பெற்றோர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில்தான் சிவசங்கர் பாபா நடனமாடுவார் என்று நேற்று பேட்டியளித்த பள்ளி நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். அது தொடர்பாகத்தான் மாணவிகளும் புகாரளித்திருக்கின்றனர். இந்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு உதவியாக இருந்தவர்கள் மீதும் விரைவில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு