Published:Updated:

உதித்சூர்யாவின் தாய் திடீர் விடுவிப்பு!- சி.பி.சி.ஐ.டி விசாரணையில் நடந்தது என்ன?

சென்னையிலிருந்து உதித்சூர்யாவுடன் சேர்த்து அழைத்துவரப்பட்ட அவரின் தாய் கயல்விழி எங்கே என சி.பி.சி.ஐ.டி தரப்பில் விசாரித்தோம்.

Kayalvizhi
Kayalvizhi

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வெற்றிபெற்று தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படிப்பதாக சென்னை மாணவன் உதித்சூர்யா மீது புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, உதித்சூர்யா தன் பெற்றோருடன் மாயமானார். இந்நிலையில், தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் திருப்பதி மலையடிவாரத்தில் உதிசூர்யா மற்றும் அவரின் தந்தை வெங்கடேசன், தாய் கயல்விழி ஆகியோரைப் பிடித்தனர்.

உதித்சூர்யா
உதித்சூர்யா
`தேனிக்கு அழைத்துவரப்பட்ட உதித்சூர்யா!’ -`நீட் ஆள்மாறாட்டம்’ வழக்கில் வேகம் காட்டும் சி.பி.சி.ஐ.டி

கைது செய்யப்பட்ட மூவரும் சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், வேன் மூலமாக தேனி சி.பி.சி.ஐ.டி அலுலகத்துக்கு நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் கொண்டுவரப்பட்டனர். ஒரு நாள் முழுவதும் நடந்த விசாரணையில், உதித்சூர்யாவும், அவரின் தந்தை வெங்கடேசனும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை ஒப்புக்கொண்டனர். அதை வாக்குமூலமாகப் பதிவு செய்துகொண்டனர் சி.பி.சி.ஐ.டி. போலீஸார்.

KayalVizhi
KayalVizhi

பின்னர், நேற்று இரவு, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேனி சிறைக்குக் கொண்டுசென்று, பின்னர் மதுரை சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், சென்னையிலிருந்து உதித்சூர்யாவுடன் சேர்த்து அழைத்துவரப்பட்ட அவரின் தாய் கயல்விழி எங்கே என சி.பி.சி.ஐ.டி தரப்பில் விசாரித்தோம்.

நீட் ஆள்மாறாட்ட வழக்கு - உதித்சூர்யா மற்றும் தந்தை வெங்கடேசனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

``உதித்சூர்யாவும் அவரின் தந்தை வெங்கடேசனும் செய்த தவறுகள், ஊடகங்கள் வெளியான பின்னரே கயல்விழிக்கு தெரிந்திருக்கிறது. முன்னதாக அவருக்கு எதுவும் தெரியவில்லை. விசாரணையில் அதை உறுதி செய்தோம். அதனால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. உறவினர்கள் யாரையாவது வரச்சொல்லுங்கள். அவர்களுடன் உங்களை அனுப்பிவிடுகிறோம் எனக் கூறினோம். அதன் அடிப்படையில், கயல்விழியின் அண்ணன் தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்துக்கு வந்தார். முறையாக அவரிடம் கயல்விழியை ஒப்படைத்து அனுப்பிவிட்டோம்” என்றனர்.

Udith Surya & Venkadesan
Udith Surya & Venkadesan

இதே போல, உதித்சூர்யாவின் தங்கையும் விசாரணை வளையத்தில் இருந்ததாகவும், அவருக்கும் இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரியவந்ததால் அவரை தொந்தரவு செய்யவில்லை எனவும் சி.பி.சி.ஐ.டி தரப்பு தெரிவிக்கிறது.