13,573 முந்திரி மூட்டைகள்; ரூ.21.31 கோடி! - ஆந்திர வங்கியை அதிரவைத்த மோசடி

ஆந்திராவைச் சேர்ந்த முந்திரி நிறுவனம் ஒன்று பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.21.31 கோடி மோசடி செய்ததாக சி.பி.ஐ வழக்கு பதிந்திருக்கிறது.
ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியில் `சூர்யாஸ்ரீ கேஷ்யூ புராடக்ட்ஸ்’ நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனம் முந்திரி பொருள்களை ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டுவருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான சூர்யா ரெட்டி, பத்ரவதி ஆகியோர் கடந்த 2011-ல் ராஜமுந்திரி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.4 கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள்.

பின்னர் இந்தக் கடனை ரூ.7.45 கோடியாக அதிகரித்திருக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நிறுவனத்தின் பெயரில் இருக்கும் குடோன், அவற்றில் சேமித்துவைக்கப்பட்டிருந்த பொருள்களை ஈடாகக் காட்டி, கடன் தொகை ரூ.20 கோடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் குடோனில் வங்கி அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோதுதான் இதில் மோசடி நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
அந்த ஆய்வின் போது 13,573 முந்திரி மூட்டைகள் ரகசியமாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த மூட்டைகளை ஆய்வு செய்தபோது அவற்றில் முந்திரிக்கு பதிலாக முந்திரித் தோல் மட்டுமே இருந்ததைப் பார்த்து வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். அந்தக் குறிப்பிட்ட மூட்டைகளில் இருந்த முந்திரி உட்பட குடோனில் இருந்த பொருள்களை ஈடாகக் காட்டியே வங்கியில் அந்த நிறுவனம் கடன் பெற்றிருக்கிறது.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் புகாரின்பேரில் சூர்யாஸ்ரீ கேஷ்யூ புராடக்ட்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சி.பி.ஐ வழக்கு பதிந்திருக்கிறது. அந்த நிறுவனத்தின் சூர்யா ரெட்டி, பத்ரவதி, சுதாகர் ரெட்டி, மத்திய அரசின் தேசிய மொத்தக் கையாளுதல் நிறுவனத்தின் (National Bulk handling corporation) தலைவர் விஜய் கெல்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்திருக்கிறது சி.பி.ஐ. மத்திய அரசு அதிகாரிகளின் உதவியுடனேயே 13,573 மூட்டைகளில் இருந்த முந்திரிகளுக்கு பதிலாக முந்திரியின் தோலைவைத்து ஏமாற்றியதாக சி.பி.ஐ விசாரணையில் தெரியவந்திருக்கிறது.