Published:Updated:

`கள்ளச்சந்தையில் மது விற்பனை; சி.பி.ஐ வளையத்தில் பார் உரிமையாளர்கள்!’ - கிரண் பேடி அதிரடி

சி.பி.ஐ
சி.பி.ஐ

ஊரடங்கு காலத்தில் கள்ளச்சந்தையில் மது விற்கப்பட்ட விவகாரத்தை சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது என்று புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண் பேடி தெரிவித்திருப்பது, மதுக்கடை உரிமையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் புதுச்சேரியில் மார்ச் 24-ம் தேதி முதல் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு மற்றும் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசியக் கடைகளைத் தவிர வேறு எந்தக் கடைகளையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

மதுக்கடைகள்
மதுக்கடைகள்

குறிப்பாக, மதுக்கடைகள் திறக்கப்படாததால் தடுமாறிப் போனார்கள் புதுச்சேரி `குடி’மகன்கள். அதைப் பயன்படுத்திக்கொண்ட பல மதுக்கடை உரிமையாளர்கள், சரக்கின் விலையை பன்மடங்கு உயர்த்தி கள்ளச்சந்தையில் லாபம் பார்க்க ஆரம்பித்தனர். ரூ.350 விலையுள்ள ஒரு பாட்டில் ரூ.3,500 முதல் ரூ.5,000 வரை விற்கப்பட்டது.

போதைக்கு அடிமையான இளைஞர்களும் பெரியவர்களும் வேறுவழியில்லாமல் கள்ளச்சந்தை மதுவால் தங்கள் பணத்தை இழந்துகொண்டிருந்தனர். சமூக வலைதளத்தில் அதுகுறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மதுக்கடைகளுக்கும் சீல் வைத்தது கலால்துறை. அப்படியும் பின் வாசல் வழியாகக் கள்ளச்சந்தையைத் திறந்துவிட்டனர் மதுக்கடை உரிமையாளர்கள். இதுகுறித்து நமது ஜூ.வி இதழில் விரிவாகக் கட்டுரையை வெளியிட்டிருந்தோம். தொடர்ந்து கள்ளச்சந்தை மூலம் விற்கப்படும் மது குறித்து புதுச்சேரி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான அன்பழகன், கவர்னர் கிரண் பேடியிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதையடுத்து அனைத்து மதுபானக் கடைகளிலும் ஸ்டாக் லிஸ்ட்டை எடுக்கும்படி உத்தரவிட்டார் கவர்னர் கிரண் பேடி.

துணைநிலை கவர்னர் கிரண் பேடி
துணைநிலை கவர்னர் கிரண் பேடி

ஆனால், ஆய்வுக்குச் சென்ற அதிகாரிகள் கடைகளில் இருந்து மதுபாட்டில்களை அள்ளிச் சென்றதாக வந்த புகாரின் அடிப்படையில், தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்ட அவரது குழுவினர் மற்றும் போலீஸார் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து பல்வேறு காவல்துறை உயரதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதையடுத்து தாசில்தார் கார்த்திகேயன் போலீஸ் விசாரணையில் தாக்கப்பட்டதாகப் புகார்கள் வந்ததால் அதுதொடர்பாக விசாரித்து மே 6-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் அருணுக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில், கலால் விவகாரம் தொடர்பாக கவர்னர் கிரண்பேடி இன்று வெளியிட்டிருக்கும் தகவலில், ``ஊரடங்கின்போது ஒருசில கலால்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துணையுடன் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றது. அது தொடர்பாகத் தற்போது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.

`மகளுக்காக மருத்துவ சீட் வாங்கினாரா கிரண் பேடி? -அமைச்சரின் குற்றச்சாட்டால் அதிர்ந்த ஆளுநர் மாளிகை

தொடர்ந்து புதுச்சேரி மக்களுக்கு வேண்டுகோள் என்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``ஊரடங்கு காலத்தில் கலால் சட்ட விதிகளை மீறியது தொடர்பாக 236 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் சில கலால் மற்றும் போலீஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டதுடன், பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர். சிலர் பணியிட மாற்றங்களும் செய்யப்பட்டனர். முக்கியமாகத் துணை கலால்துறை ஆணையராக இருந்தவர் மாற்றப்பட்டு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டார். கள்ளச் சந்தையில் மது விற்பனை என்பது ஒருங்கிணைந்த குற்றம். இதனால் மாநிலத்துக்கு அதிகளவு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் நடந்த கள்ள மது விற்பனை தொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது.

கள்ளச்சந்தை மது விற்பனை
கள்ளச்சந்தை மது விற்பனை

அதனால், இவ்வழக்கில் ஏதேனும் தகவல் இருந்தால் சி.பி.ஐ--யிடம் தெரிவிக்கலாம். சி.பி.ஐயின் கிளை ஏற்கெனவே புதுச்சேரியில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல துணைநிலை ஆளுநர் அலுவலகத்தின் தலைமை குறைகேட்கும் அலுவலர் பாஸ்கரனிடமும் 95005 60001 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு