Published:Updated:

நாமக்கல்: `சிறார் வதை வீடியோ பதிவுகள்; 9 மணி நேரம் நீடித்த சி.பி.ஐ ரெய்டு, விசாரணை!'

நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் பத்து மணி நேரத்துக்கு மேலாக சி.பி.ஐ விசாரணை நடத்தியிருக்கிறது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை, சிறார் வதை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்படுவது அண்மையில் அதிகரித்திருக்கிறது. அதனால், கடந்த சில தினங்களாகத் தமிழகத்தில் ஆறு இடங்களில் சி.பி.ஐ இது தொடர்பாகச் சோதனை நடத்தியது. அந்த வகையில், கடந்த 14-ம் தேதி குழந்தைகள் தினத்தன்று, சிறார் வதை வீடியோக்கள் குறித்து சி.பி.ஐ-க்கு புகார் வந்திருக்கிறது. 'குழந்தைகள் வதை வீடியோக்கள் மட்டும்' என்று ஆங்கிலப் பெயரில் வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து, அதன் மூலம் சிறார் வதை வீடியோக்களைப் பலரும் பகிர்ந்ததாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, சி.பி.ஐ போலீஸார், சிறார் வதை வீடியோக்களைப் பகிர்பவர்களின் பட்டியலைத் தயாரித்ததாகச் சொல்லப்படுகிறது.

அந்தப் பட்டியலின் அடிப்படையில், 14 மாநிலங்களைச் சேர்ந்த 83 பேர் மீது, டெல்லி சி.பி.ஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஆறு இடங்களில் சி.பி.ஐ இது தொடர்பாக ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. அப்போது, நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த அத்தனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடம், பத்து மணி நேரத்துக்கும் மேலாக சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

சி.பி.ஐ சோதனை
சி.பி.ஐ சோதனை

அந்த நபர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை விவகாரத்தில் ஈடுபட்டதாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து, டெல்லி மற்றும் தமிழக சி.பி.ஐ அதிகாரிகள் ஐந்து பேர், காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை ராசிபுரத்திலுள்ள அவர் வீட்டில் தீவிர விசாரணை நடத்தினர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ``இது சிறார் வதை விவகாரம் என்பதால் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்களை உடனடியாக வழங்க முடியாது. விசாரணை நடைபெற்றுவருகிறது. குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், பத்திரிகைச் செய்தியாக வழங்கப்படும்" என்றனர்.

ஆனால், இது தொடர்பாக உள்ளூர் காவலர்களிடம் விசாரித்தபோது, ``அந்த நபரின் வீட்டில் சோதனை நடந்தது கடைசிவரை எங்களுக்குத் தெரியாது. தகவல் சொல்லப்படவில்லை. அவர், சிறார் வதை வீடியோக்களை, பதிவிறக்கும் செய்து, சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தியிருக்கிறது. மேற்கொண்டு இது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது" என்றனர்.

திண்டுக்கல்: சிறார் வதை வீடியோ பதிவுகள்... சுமார் 9 மணி நேரம் நீடித்த சி.பி.ஐ ரெய்டு, விசாரணை!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு