Published:Updated:

சாத்தான்குளம்: `ஊர் ஊராக இடம் மாறிய ஆய்வாளர் ஸ்ரீதர்’ -நள்ளிரவில் நடந்த சேஸிங்!

கைதான ரகுகணேஷ்
கைதான ரகுகணேஷ்

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் இருவரையும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த வழக்கில் 24 மணி நேரத்தில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 5 பேரைக் கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து தொடங்கியுள்ளது. கோவில்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணையை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை தமிழகஅரசு, மதுரை உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் சி.பி.ஐ வசம் ஒப்படைத்தது. சி.பி.ஐ இவ்வழக்கை கையில் எடுக்கும் வரை சி.பி.சி.ஐ.டிக்கு விசாரணை மாற்றப்பட்டது. இதையடுத்து, ஆய்வாளர் ஸ்ரீதர் மீது சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் எப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

ஜெயராஜின் வீட்டில் விசாரணை!

இந்நிலையில், 2 டி.எஸ்.பிக்கள், 10 ஆய்வாளர்கள், 15 காவலர்கள் உட்பட 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி போலீஸார் சாத்தான்குளத்தில் நேற்று விசாரணையைத் தொடங்கினர். சி.பி.சி.ஐ.டி., டி.எஸ்.பி., அனில்குமார் தலைமையிலான குழுவினர், ஜெயராஜின் வீட்டில் ஜெயராஜின் மனைவி செல்வராணி, மூன்று மகள்கள் ஆகியோரிடம் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்.

"உங்க கணவர் ஜெயராஜ், மகனுக்கு நடந்ததைப் பயப்படாமச் சொல்லுங்க" என போலீஸார் முதலிலேயே தைரியம் கொடுத்ததும், முதலில் செல்வராணி பேசினார். அன்று இரவு கணவரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றது, அப்பாவைத்தேடி மகன் பென்னிக்ஸ் போலீஸ் ஸ்டேஷன் சென்றது முதல் மறுநாள் காலை வரை நடந்த சம்பவம் பற்றிக் கண்ணீருடன் கூறினார். மூத்த மகள் பெர்சி, "போலீஸாரின் முரணான எப்.ஐ.ஆர் பதிவு, பிரேதப் பரிசோதனைக்கு முன்பான இருவரது உடல்களில் தென்பட்ட காயங்களின் தன்மை, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு இரவில், இருவரது உடல்களைப் பெற்றுச் செல்லுமாறு இரண்டு மருமகன்களையும் போலீஸார் மிரட்டியது குறித்து விளக்கியுள்ளார்.

ஐ.ஜி., சங்கர்
ஐ.ஜி., சங்கர்

இதுதவிர குடும்பத்தினரின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து, மதியம் 3 மணிக்கு சி.பி.சி.ஐ.டி., ஐ.ஜி சங்கர், எஸ்.பி., விஜயகுமார் ஆகியோர் ஜெயராஜின் இல்லத்திற்குச் சென்று, ’உங்க கணவர், மகன் உயிரிழப்பு வழக்கை நாங்க விசாரணைக்கு எடுத்திருக்கோம். விசாரணை நல்லமுறையில் சென்றுகொண்டிருக்கிறது. கவலைப்படாதீங்கம்மா’ எனச் சொன்னார்.

அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘இவ்வழக்கை இன்றுதான் தொடங்கியிருக்கோம். இன்று இரவுக்குள் பல அதிரடி நடவடிக்கைகள் உங்களுக்கே தெரியவரும்’ எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவர் சொன்னதுபோலவே, இரவு 7 மணிக்கு எஸ்.ஐ ரகுகணேஷை விசாரணைக்கு அழைத்து, விசாரணையின் இறுதியில் கைது செய்தது. இரவு 11.30 மணிக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், பேரூரணி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

மகன், தந்தை
மகன், தந்தை

நள்ளிரவு சேஸிங்?

5-ம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. அதைத்தொடர்ந்து, எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக் காவலர் முருகன், முத்துராஜா ஆகியோரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இன்று காலை 11 மணிக்கு மேல் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதில், ஸ்ரீதர் தன்னைக் கைது செய்யப் போவதாகத் தகவல் கிடைத்ததும், நள்ளிரவில் இடம் மாறிமாறிச் சென்றதாகவும் அவரை சிபிசிஐடி போலீஸார் விரட்டிச் சென்று பிடித்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை நெல்லையில் கைது செய்யும்போது தப்பிக்க முயன்றதாவும், சிபிசிஐடி போலீஸார் மடக்கிப் பிடித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சாத்தான்குளம் விவகாரத்தில் காவலர்கள் கைது செய்யப்பட்தை அறிந்த சாத்தான்குளம் மக்கள் பட்டாசு வெடித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு