Published:Updated:

விழுப்புரம்: வர்க்கி வாங்கியதில் வாக்குவாதம்! -பெண் ஊழியரைத் தாக்கும் சிசிடிவி காட்சியால் பரபரப்பு!

விழுப்புரம் தாலுகா காவல் நிலையம்
News
விழுப்புரம் தாலுகா காவல் நிலையம் ( தே.சிலம்பரசன் )

வர்க்கி வாங்குவதில் வாடிக்கையாளர் பெண்ணுக்கும், கடை ஊழியர் பெண்ணுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் கைக்கலப்பு ஏற்பட்டு கடையின் பெண் ஊழியர் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலுள்ள கடை ஒன்றுக்கு நேற்று முன்தினம்(12.12.2021) காலை சென்ற வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்த சரோஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் அங்கு வர்க்கி கேட்டிருக்கிறார். வர்க்கி பாக்கெட்டை எடுத்த அவர், 100 ரூபாயைக் கடையில் இருந்த பெண் ஊழியரிடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த வர்க்கி பாக்கெட்டை பிரித்து அதிலிருந்து இரண்டு துண்டு வர்கிகளை எடுத்த சரோஜா, ஆடுகளுக்குக் கொடுத்தாராம். அந்த பாக்கெட்டில் இருந்த மீதி வர்க்கிகளை கடையிலேயே வைத்துவிட்டு, இரண்டு வர்க்கி துண்டுகள் போக மீதித் தொகையை தரும்படி கடையில் இருந்த பெண் ஊழியரிடம் கேட்டாராம் சரோஜா. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. "வர்க்கி பாக்கெட்டின் விலையே 20 ரூபாய்தான். நாங்கள் அதைத் தனித்தனித் துண்டுகளாகத் தருவதில்லை. பாக்கெட்டாகவே எடுத்துக்கொள்ளுங்கள். மீதித் தொகையைத் தருகிறேன்" என கடையில் இருந்த பெண் ஊழியர் தரப்பில் கூறப்பட்டதாகவும், அதற்கு சரோஜா மறுப்பு தெரிவித்ததால் அந்தப் பெண் ஊழியர் சரோஜாவைத் தள்ளியதாகவும் சொல்லப்படுகிறது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்
தே.சிலம்பரசன்

இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றியநிலையில், வழுதரெட்டிக்குச் சென்று தனது உறவினர்களை அழைத்து வந்த வாடிக்கையாளர் சரோஜா, கடையில் இருந்த பெண் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த சரோஜாவும், அவரின் உறவினர்களும் கடையில் இருந்த பெண் ஊழியரைத் தாக்கியுள்ளனர். சரோஜாவுடன் வந்த ஆண் ஒருவரும், அந்தப் பெண் ஊழியரைத் தாக்கியிருக்கிறார். இந்தச் சம்பவம் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதன் தொடர்ச்சியாக, 'இரண்டு வர்க்கி கேட்டதற்கு, பாக்கெட்டாக வாங்கக் கூறி கடையின் பெண் ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக' சரோஜா தரப்பிலும்; 'சரோஜா அவருடைய உறவினர்களுடன் வந்து, கடையில் விற்பனைப் பணியில் இருந்த தனது இரண்டு ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்துள்ளதாக' கடையின் உரிமையாளர் தரப்பிலும் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பெண் ஊழியர் தாக்கப்படும் சிசிடிவி காட்சி
பெண் ஊழியர் தாக்கப்படும் சிசிடிவி காட்சி

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கேட்டபோது, "இரு தரப்பினர் கொடுத்துள்ள வெவ்வேறு புகார்களின்படி இரு தரப்பின் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இரண்டு வர்க்கி கேட்டதற்கு பாக்கெட்டாக வாங்கக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சரோஜா தரப்பினர் கொடுத்த புகாரின்படி 294B, 323 ஆகிய பிரிவுகளிலும்; தகாத வார்த்தைகளால் திட்டி, ஊழியரை தாக்கியுள்ளதாக கடையின் உரிமையாளர் தரப்பில் அளித்த புகாரின்படி143, 448, 294B, 323, 506(1) மற்றும் ஒரு பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறது" என்றனர்.