Published:Updated:

`செல்போனில் பேசியபடி செல்லும் பெண்கள்தான் இலக்கு!' - வடசென்னை கொள்ளையனின் அதிர்ச்சி வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

சென்னையில் இரவு நேரத்தில் செல்போனில் பேசியபடி தனியாக நடந்து செல்லும் பெண்களை முதலில் நோட்டமிட்டு, பிறகு பைக்கில் சென்று அவர்களின் செயின், செல்போன்களைப் பறிக்கும் கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.

CCTV Footage
CCTV Footage

சென்னை திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இதுகுறித்த புகார்களின் பேரில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். மேலும் சம்பவம் நடந்த இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, ஒரே நபர்தான் இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதை போலீஸார் கண்டறிந்தனர்.

karthick
karthick

இதையடுத்து தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், கொள்ளையனைத் தேடிவந்த நிலையில் அவரை மடக்கிப் பிடித்தனர். போலீஸ் விசாரணையில் அவரின் பெயர் கார்த்திக் என்றும் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை புதுவண்ணாரப்பேட்டை சேனி அம்மன் கோயில் தெரு பகுதியில் கடந்த 8-ம் தேதி இரவு நேரத்தில் தனியாக நடந்து சென்ற கல்யாணி என்பவரிடமிருந்து 3 சவரன் தங்கச் செயின் வழிப்பறி செய்யப்பட்டது. இதுதொடர்பான புகாரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கல்யாணியைப் பின்தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர் கைவரிசை காட்டியது தெரியவந்தது.

karthick
karthick

கடந்த 20-ம் தேதி திருவொற்றியூர் பகுதியில் மேரி என்பவரிடம் செல்போன் பறித்துச் செல்லும் நபரும் கல்யாணியிடம் செயின் பறித்த நபரும் ஒருவர்தான் என்பதை கண்டறிந்தோம். இதுதொடர்பாக விசாரணை நடத்தி கார்த்திக் என்பவரை கைது செய்துள்ளோம். அவரிடமிருந்து செயின், செல்போன்களை பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

கார்த்திக் அளித்த வாக்குமூலத்தில், ``இரவு நேரத்தில் தனியாகச் செல்லும் பெண்களை முதலில் பைக்கில் சென்று நோட்டமிடுவேன். பிறகு அவர்கள் நடந்து செல்லும்போது பின்னால் சென்று செயின் அல்லது செல்போன்களைப் பறித்துவிட்டு தப்பிச் செல்வேன். குறிப்பாக செல்போனில் பேசியபடி நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வது எளிது. ஏனெனில் அவர்களின் கவனம் பேசுவதில் இருக்கும். மேலும் வழிப்பறி செய்த ஸ்மார்ட் செல்போன்களை விற்பேன். அந்தப்பணத்தில் ஆடம்பரமாகவும் விருப்பம் போல வாழ்வேன்" என்று கூறியுள்ளார்.

`மனம்போல வாழ விரும்பினேன்!’ - செல்போன் திருட்டில் சிக்கிய  சென்னைக் கல்லூரி மாணவியின் வாக்குமூலம்

இதையடுத்து கார்த்திக், வேறு யாரிடமாவது வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபட்டாரா.. என்று தனிப்படை போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் கார்த்திக், வழிப்பறி செய்தவர்களில் சிலர் காவல் நிலையங்களில் புகார் கொடுக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. கார்த்திக் கூறிய தகவலின்படி அந்த இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.