Published:Updated:

அடுத்தடுத்து கொலைகள்... அதிர்ந்துகொண்டிருக்கும் புதுச்சேரி!

CRIME SCENE DO NOT CROSS

பிரீமியம் ஸ்டோரி

குற்றப் பின்னணியுள்ளவர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்வதால் நிகழும் கொலை சம்பவங்களால் அதிர்ச்சியில் உறைந்துகிடக்கிறது புதுச்சேரி!

அமைதிக்கும் அழகிய வீதிகளுக்கும் பெயர்பெற்ற புதுச்சேரியில் சமீபகாலமாகக் குற்றங்களும், கூலிப்படைகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கி ன்றன. நகர்ப்புறத்தில் நான்கு தெருவுக்கு ஒரு காவல் நிலையம் இருந்தும், ரௌடிகளுக்குள் அரங்கேறும் பழிக்குப் பழி கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அரசியல்வாதிகளும் காவல் துறையினரும் ரௌடிகளுடன் கொண்டிருக்கும் ரகசிய உடன்படிக்கைகளால் மாநிலத்தில் கொடிகட்டிப் பறக்கிறது ரௌடிகளின் ராஜ்ஜியம்.

முன்விரோதத்தால் கொல்லப்பட்ட தேவமணி!

காரைக்கால் பா.ம.க மாவட்டச் செயலாளராக இருந்தவர் தேவமணி. அக்டோபர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலின் பிரதான வீதியிலுள்ள பா.ம.க அலுவலகத்தில் நண்பர்களுடன் பேசிவிட்டு, உதவியாளர் செல்வகுமாரின் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். வீட்டை அடைவதற்கு நூறு மீட்டர் தூரம் இருந்த நிலையில், அரிவாள்களுடன் இரு சக்கர வாகனங்கள் மூன்றில் வந்த ஆறு மர்ம நபர்கள், அவரின் வாகனத்தை மோதி நிறுத்தினார்கள். விபரீதம் நடக்கப்போவதை உணர்ந்த தேவமணியும், அவரின் உதவியாளரும் இரு சக்கர வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு ஓட்டமெடுத்தார்கள். தேவமணியைத் துரத்திச் சென்று சுற்றிவளைத்த அந்தக் கும்பல், அவரின் தலையைக் குறிவைத்து அரிவாள்களைச் சரமாரியாக வீசியது. ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து தேவமணி சரிய, சாவகாசமாக தாங்கள் வந்த இரு சக்கர வாகனங்களிலேயே திரும்பிச் சென்றது அந்தக் கும்பல்.

தேவமணி, அந்தோணி,  ‘பாம்’ ரவி
தேவமணி, அந்தோணி, ‘பாம்’ ரவி

இந்தச் சம்பவம் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ‘‘அடிதடி, ஆக்கிரமிப்பு என தேவமணி மீது 62 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. பிரச்னையுள்ள இடங்களை வாங்குவது, சொத்துத் தகராறுகளுடன் தன்னிடம் வரும் நபர்களின் நிலங்களைக் கட்டப்பஞ்சாயத்து செய்து தனது ஆக்கிரமிப்பில் வைத்துக்கொள்வது இவரின் வழக்கம். அப்படி ஆக்கிரமிக்கப்பட்ட ஓர் இடத்தைத்தான் தன்னுடன் இருந்த மணிமாறனுக்கு டீக்கடை வைப்பதற்குக் கொடுத்திருக்கிறார். அந்த இடத்தில் டீக்கடை வைத்துக்கொண்டதுடன், தனது குடும்பத்துடனும் அங்கு வசித்துவந்தார் மணிமாறன். சமீபகாலமாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டுவந்தார் மணிமாறன். இடத்தைக் காலிசெய்யும்படி தேவமணி கூறிய போது, ‘இது உன் இடம் கிடையாது. ஆனாலும், வாடகை தருகிறேன். நான் ஏன் காலிசெய்ய வேண்டும்?’ என்று மறுத்தார் மணி மாறன். அவரைக் குடும்பத்துடன் அடித்து உதைத்து வெளியேற்றினார் தேவமணி. அப்போது நடந்த மோதலில் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவுசெய்தோம். அந்த முன்விரோதத்தால்தான் தேவமணி கொலை செய்யப்பட்டிருக்கிறார். மணிமாறன், கலியமூர்த்தி, அருண், ராமச்சந்திரன் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். வெளிப்படையாக எந்தத் தொழிலும் செய்யாத தேவமணி, கோடிக்கணக்கில் சேர்த்துவைத்திருக்கும் சொத்துகள்தான் அவரது கொலைக்கு சாட்சி’’ என்றார்கள்.

சிறைக்குள் இருந்தபடியே போடப்பட்ட ஸ்கெட்ச்!

புதுச்சேரி, வானரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடியான ‘பாம்’ ரவி மீது ஆறு கொலை வழக்குகள் உட்பட கொலை முயற்சி, அடிதடி, ஆள் கடத்தல் என மொத்தம் 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கில் சிறையிலிருந்து சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த ரவி, புதுச்சேரியில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சி கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட முடிவெடுத்தார். அதற்காகத் தனது பகுதியில் சொந்தச் செலவில் சாலைகள் சீரமைப்பு, வேகத்தடை அமைப்பது, கழிவுநீர் வாய்க்கால்களைச் சரிசெய்வது உள்ளிட்ட சிறு சிறு பணிகளைச் செய்துவந்திருக்கிறார்.

அக்டோபர் 24-ம் தேதி மாலை 3:30 மணிக்கு, தன் நண்பரான அந்தோணி (எ) பரேட் என்பவருடன் வானரப்பேட்டை பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென அவர்களை வழிமறித்த ஐந்து பேர்கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் பாம் ரவியின் தலையைக் குறிவைத்து நாட்டு வெடிகுண்டை வீசியது. ஆனால் அது, பின்னால் அமர்ந்திருந்த அந்தோணியின் தலையில் விழ, அப்படியே கீழே சுருண்டு விழுந்தார். அங்கிருந்து தப்பித்து ஓடிய ரவியைத் துரத்திச் சென்று வளைத்த அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியது. அவரின் தலையைக் குறிவைத்து வெட்டியதால் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார் ரவி. சாலையின் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த அந்தோணி, நீண்ட நேரம் உயிருக்குப் போராடி இறந்தார்.

அடுத்தடுத்து கொலைகள்... அதிர்ந்துகொண்டிருக்கும் புதுச்சேரி!
அடுத்தடுத்து கொலைகள்... அதிர்ந்துகொண்டிருக்கும் புதுச்சேரி!
அடுத்தடுத்து கொலைகள்... அதிர்ந்துகொண்டிருக்கும் புதுச்சேரி!

இந்த இரட்டைக் கொலைகள் குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ‘‘பாம் ரவிக்கும், முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரௌடி வினோத்துக்கும் இடையே யார் பெரிய ரௌடி என்பதில் நீண்டகாலமாகவே போட்டி நிலவிவந்தது. இந்நிலையில்தான், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாரானார் ‘பாம்’ ரவி. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால் அரசியல் பலத்துடன் ரவி தன்னைவிட பெரிய ஆளாகிவிடுவார் என்று நினைத்த வினோத், சிறைக்குள் இருந்துகொண்டே ஸ்கெட்ச் போட்டு, அவரை ஆள்வைத்து தீர்த்துக்கட்டியிருக்கிறார். ரவிக்கு வைக்கப்பட்ட குறி தவறியதால், அப்பாவியான அந்தோணியும் உயிரிழந்தார். குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வோம்’’ என்றார்கள்.

‘‘புதுச்சேரி காவல்துறையின் செயல் பாடின்மையும், அவர்களின் நடவடிக்கைகள்மீது குற்றவாளிகளுக்கு கொஞ்சமும் பயம் இல்லாததும் தான் இப்படியான தொடர் கொலைகளுக்குக் காரணம். கொலை செய்யப்படப்போவது யார் என்று காவல்துறைக்குத் தெரிந்தாலும், கண்டுகொள்வதில்லை. ரௌடிகளுக்குள் அடித்துக்கொண்டு சாகட்டும் என்று நினைக்கிறது காவல்துறை. ஆனால், பொதுமக்கள் இதனால் அடையும் பிரச்னைகளையும், அச்சத்தையும், உளவியல் பாதிப்புகளையும் குறித்து காவல்துறை கவலைப்படுவதில்லை” என்று ஆதங்கப்படுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு