Published:Updated:

தீபாவளி ஷாப்பிங்கா... கவனம்..! திருச்சி திகில் கும்பல்

 செயின் பறிப்புக் கும்பல்
செயின் பறிப்புக் கும்பல்

`பெண்களிடம் பறிக்கும் நகையை விற்றுக் கிடைக்கும் பணத்தில், குடித்து சந்தோஷமாக இருப்பேன். பிறகு கொஞ்சம் பணத்தை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு போலீஸில் சரணடைவேன்.’

சாலையில் செல்லும் பெண்களைப் பின்தொடர்கிறது பைக். சட்டென பைக்கிலிருந்து ஒருவர் மட்டும் இறங்கி,பெண்ணின் பின்னந்தலையில் ஓங்கி அடிக்கிறார். தாக்குதலில் நிலை தடுமாறும் பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலிச்செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு சிட்டாய்ப் பறக்கிறார்கள்.

இதே பாணியில் தொடரும் செயின்பறிப்புச் சம்பவங்கள் திருச்சியைத் திகிலடையவைக்கின்றன.

திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர், இமாக்குலேட் எழிலரசி. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இரவு 9 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். ஆள் நடமாட்டம், போக்குவரத்து அதிகமுள்ள சாலை அது. அவரின் பின்னால் வந்த ஸ்கூட்டி ஒன்று ஸ்லோ ஆனது.

கவனம் : செயின் பறிப்பு கும்பல்
கவனம் : செயின் பறிப்பு கும்பல்

அதற்குப் பிறகு நடந்ததை விவரிக்கிறார், இமாக்குலேட் எழிலரசி. “பைக்கிலிருந்து இறங்கிய ஒருவன், ஏதோ வழிகேட்பதுபோல் என்னை நெருங்கி, சட்டென என் பின்னந்தலையில் ஓங்கி அடித்தான். அதில் நிலைதடுமாறிப்போனேன். நான் சுதாரிப்பதற்குள் என் தாலிச்சங்கிலியைப் பிடித்து இழுத்தான். நானும் விடாமல் போராடினேன். ஆத்திரமடைந்த அவன் என்னைப் பலமாகக் கீழேதள்ள, என் சங்கிலி அறுந்தது. சத்தம்போட்டேன். திரும்பிப் பார்ப்பதற்குள் தப்பித்துவிட்டார்கள். 9½ பவுன் செயின் போனதோடு, விழுந்ததில் என் கையில் காயம். அந்தப் பதற்றம் இப்போதுவரை நீங்கவில்லை” என்றார்.

சம்பவம் நடந்ததும் அவசர எண் 100-ஐத் தொடர்புகொண்டோம். போன் போகல. அடுத்து லோக்கல் ஸ்டேஷனைத் தொடர்புகொண்டோம். எல்லா போலீஸாரும் பந்தோபஸ்த்துக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள்

தொடர்ந்தவர், “சம்பவம் நடந்ததும் அவசர எண் 100-ஐத் தொடர்புகொண்டோம். போன் போகல. அடுத்து லோக்கல் ஸ்டேஷனைத் தொடர்புகொண்டபோது, "எல்லா போலீஸாரும் பந்தோபஸ்த்துக்கு போயிருக்காங்க" என்று சொல்லி, நேரில் புகார் கொடுக்கச் சொன்னார்கள். நேரில் புகார் கொடுத்த எங்களிடம், 5 பவுன் மட்டும் பறிபோனது எனப் புகார் கொடுக்கச் சொன்னார்கள். ஒருவழியாகப் பேசிமுடித்து 7½ பவுன் பறிபோனதாக மனு கொடுத்தோம். நடவடிக்கை இல்லை.

புஜி இம்ரான்
புஜி இம்ரான்

தளராமல், எங்க ஏரியாவில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டுபோய் போலீஸாரிடம் கொடுத்தோம். அதன்பிறகுதான் குற்றவாளிகளின் அடையாளம் தெரிந்தது. திருச்சி சீனிவாச நகரைச் சேர்ந்த புஜி இம்ரானும், அவனது கூட்டாளி காதர் என்பவரும் என் தாலிச்செயினைப் பறித்தது தெரியவந்தது.

தற்போது புஜி இம்ரானைக் கைதுசெய்த போலீஸார், அவனிடமிருந்த 2½பவுன் நகையைக் கைப்பற்றியுள்ளனர். மீதி நகை என்னாச்சு'னு தெரியல. காதர் குறித்து தகவல் இல்லை. ஆனால், எனது நகையை புஜிஇம்ரான் மட்டுமே பறித்ததாகவும், அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதெல்லாம் போலீஸார்மீது சந்தேகத்தை வரவழைக்கிறது” என்று கலங்கினார்.

போலீஸிலில் சிக்கியுள்ள புஜிஇம்ரானும் காதரும் சாலையில் நடந்துபோகும் பெண்களைப் பின்தொடர்ந்து, செயின் பறிப்பதில் கில்லாடிகளாம்.

கைதுசெய்யப்பட்ட புஜிஇம்ரான், “பெண்களிடம் பறிக்கும் நகையை விற்றுக் கிடைக்கும் பணத்தில், குடித்து சந்தோஷமாக இருப்பேன். பிறகு கொஞ்சம் பணத்தை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு போலீஸில் சரணடைவேன். நான் கொடுத்த பணத்தை வைத்து நண்பர்கள் ஜாமீன் எடுப்பார்கள். வெளியில் வந்து வழக்கம்போல தொழிலைப் பார்ப்பேன். என்மீது மட்டும் சுமார் 29 செயின்பறிப்பு வழக்குகள் இருக்கு. காதர் மீது ஏராளமான செயின்பறிப்பு மற்றும் போலீஸாரைக் கொலைசெய்ய முயன்ற வழக்கும் உள்ளது” என்றான்.

``நாங்க மட்டும் பொறுப்பல்ல... நீங்களும்..?!” - திருச்சி காவல்துறை

கருமண்டபம் ஆவணி தெருவைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில், “சில வாரங்களுக்கு முன்பு, வீட்டுவாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தேன். சாலையில் பைக்கில் வந்த ஒருவன், நான் கழுத்தில் அணிந்திருந்த செயினைப் பறித்துக்கொண்டு பறந்தான். அது கவரிங் நகை, அதனால் பெரிசுபண்ணல. அடுத்தநாள் வீட்டுவாசலில் பிள்ளைகளோடு பேசிக்கொண்டிருக்கும்போது, ஹெல்மெட் அணிந்தபடி பைக்கில் வந்தவன், தலையில் ஓங்கி அடித்ததுடன், கவரிங்நகையை என் முகத்தில் வீசிட்டு அசிங்கமா திட்டிட்டுப் போனான். வலியில் துடித்துப்போனேன். இதேபோல், சோழன் சாலையில் ஒருத்தங்க 15 பவுன் பறிகொடுத்தாக. போலீஸிடம் போனவர், பிறகு போலீஸாரின் அலைக்கழிப்புக்குப் பயந்து நகை தொலையவே இல்லை’னு எழுதிக்கொடுத்துட்டாங்க” என்றார்.

சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கல்லூரி மாணவர்கள் சிலர் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

கடந்த மாதம் 17-ம் தேதி, திருச்சி சோமரசம்பேட்டை பாரதி தெருவைச் சேர்ந்த சுகுமாரின் மனைவி உமா, தலைமைத் தபால் நிலைய சிக்னல் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து பைக்கில் வந்த நபர், உமாவின் ஆறரைப் பவுன் சங்கிலியைப் பறித்துச்சென்றார். அதேநாளில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, அப்பகுதியில் வசிக்கும் அமுதவல்லியின் தங்கச்சங்கிலியை, பின்னால் வந்த பைக் கொள்ளையன் பறிக்க முயன்றுள்ளான். சங்கிலி அறுபடாததால் பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் அமுதவல்லி படுகாயமடைந்தார்.

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், செயின் பறிப்பு கொள்ளையர்களுக்குக் கொண்டாட்டம்தான். கடந்த 15-ம் தேதி இரவு, பைக்கில் வந்த மூன்று பேர் கும்பல், திருச்சியையே பரபரப்புள்ளாக்கியது. திருச்சி தில்லைநகர், மற்றும் உழவர் சந்தை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் அந்தக் கும்பல் 5 பெண்களிடம் செயின் பறிக்க முயற்சி செய்துள்ளது.

செயின் பறிக்கமுடியாத நிலையில், திருச்சி நீதிமன்றம் அருகே நடந்துசென்ற 3 பேரிடம் செல்போன் பறித்த அந்தக் கும்பல், குழுமணி சாலை வழியாகத் தப்பிச்சென்றது. சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கல்லூரி மாணவர்கள் சிலர், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.

 திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்
திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ்

பாதிக்கப்பட்டவர்களுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜிடம் நேரில் முறையிட்டோம். புகாரை வாங்கிக் கொண்டு, "நகைகளை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்கிறேன். மேலும், நாங்களும் குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுத்துவருகிறோம். திருச்சி தீரன் நகர் ராஜேஸ்வரி என்பவரின் நகையைப் பறித்த மதுரையைச் சேர்ந்த வைரமுத்து என்பவரை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அடையாளம் கண்டு கைது செய்துள்ளோம். நிச்சயம் தீவிர நடவடிக்கை இருக்கும்” என உறுதியளித்தார்.

திருச்சி சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து தீபாவளி ஷாப்பிங்கிற்காக பொதுமக்கள் திருச்சிக்கு வந்துபோவதால் கூட்டம் களைகட்டுகிறது. இதனால், சுமார் 1,400 போலீஸார், திருச்சி மாநகரில் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தாலும், கொள்ளையர்களின் அட்டூழியம் தாங்க முடியவில்லை. போலீஸார் ஒருபக்கம் அவர்கள் கடமையைச் செய்தாலும், பொதுமக்களும் எச்சரிகையாக இருக்கவேண்டியது அவசியம்.

அடுத்த கட்டுரைக்கு