Published:Updated:

`நீங்கள் இனி முதலாளிகள்; 100 நாளில் பணம் இரட்டிப்பாகும்'- கோடிகளைச் சுருட்டிய சென்னைக் குடும்பம்

`உங்களை முதலாளிகளாக்கிறோம்' என்று கூறி கோடிக்கணக்கில் ரூபாய்களை சுருட்டியவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கோடிகளைச் சுருட்டியதாகக் கூறப்படும்  நிறுவனம்
கோடிகளைச் சுருட்டியதாகக் கூறப்படும் நிறுவனம்

கடந்த சில மாதங்களுக்கு முன் வடபழனியில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் தினமும் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இன்று அந்த அலுவலகம் பூட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தை நடத்திய ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீது பொதுமக்கள் காவல் நிலையங்கள், கமிஷனர் அலுவலகம், டி.ஜி.பி. அலுவலகம் என தொடர்ந்து புகார்களை கொடுத்துவருகின்றனர்.

திருவொற்றியூர் உதவி கமிஷனர் அலுவலகம்
திருவொற்றியூர் உதவி கமிஷனர் அலுவலகம்

போரூரைச் சேர்ந்த ராஜாவிடம் பேசினோம். ``நான் மார்க்கெட்டிங் பிசினஸ் செய்துவருகிறேன். என்னுடைய வாட்ஸ்அப் குரூப்க்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், `நீங்கள் இனி முதலாளிகள். டெபாசிட் செய்யும் உங்களின் பணம் 100 நாளில் இரட்டிப்பாகும். - ட்ரீ இண்டியா' என்ற நிறுவனத்தில் பெயர் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதுதொடர்பாக நண்பர்களிடம் விசாரித்தேன். அப்போது அவர்களில் சிலர் பணத்தை டெபாசிட் செய்து தினமும் கமிஷன் தொகை கிடைப்பதாகக் கூறினர்.

அதை நம்பி நானும் 2 லட்சம் ரூபாயை 9.10.2019-ல் டெபாசிட் செய்தேன். ஆனால், அடுத்த நாள் அந்த நிறுவனத்தை மூடிவிட்டதாகக் கூறினார்கள். நான் செலுத்திய பணத்தை காவல்துறையினர் திரும்ப பெற்றுத் தர வேண்டும்" என்றார். அடுத்து பேசிய திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ஆனந்த்ராஜா, ``நான் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலைபார்த்து வருகிறேன். நண்பர் ஒருவர் மூலம் எனக்கு இந்த நிறுவனம் குறித்து தகவல் கிடைத்தது.

ராஜா
ராஜா

நண்பனை நம்பி நானும் இந்த நிறுவனத்தில் 8 லட்சம்வரை முதலீடு செய்தேன். அதில் எனக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை திரும்பக் கிடைத்தது. திடீரென அலுவலகத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். என்னைப் போல ஏராளமானவர்கள் இந்த நிறுவனத்தை நம்பி முதலீடு செய்துள்ளார்கள்" என்றார்

இதையடுத்து, பணம் இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்தவர்கள் கூறுகையில், ``சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் இந்த நிறுவனம் விளம்பரப்படுத்தப்பட்டது.

ஆனந்த் ராஜா
ஆனந்த் ராஜா

மேலும் இந்த நிறுவனத்துக்கென்று ஒவ்வொரு ஏரியாக்களுக்கும் லீடர் என்று சிலர் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் வீடு வீடாக மார்க்கெட்டிங் செய்து நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அந்த லீடர்களில் சிலர் தலைமறைவாகிவிட்டனர்.

காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காத்திருந்தவர்கள்
காவல் நிலையத்தில் புகார் கொடுக்க காத்திருந்தவர்கள்

சென்னையில் செயல்பட்ட அலுவலகம், கார்ப்பரேட் நிறுவனம் போல இருந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே முதலீடு செய்தவர்களை நூதனமாக மூளைச் சலவை செய்துள்ளது இப்போதுதான் தெரியவந்துள்ளது. அதில் ஒருவர் எம்.டி என்று எங்களிடம் நடித்தார். இன்னொருவர் அதிகளவில் முதலீடு செய்திருப்பதாகக் கூறினார். மற்றொருவர் பொது மேலாளர் என்று கூறினார். அவர்களையெல்லாம் நம்பிதான் 5,000 ரூபாயில் தொடங்கி பல லட்சம் ரூபாயை முதலீடு செய்தோம்.

பஸ் பயண வாரன்ட்... பல லட்சம் மோசடி! - அதிரவைக்கும் ரிப்போர்ட்

ஆரம்பத்தில் பணம் முதலீடு செய்தவர்களுக்கு தினமும் வரி பிடித்தம் போக வட்டி என பணம் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டு வந்தது. அதனால்தான் எல்லோரும் நம்பி பணத்தை முதலீடு செய்தோம். இந்த அலுவலகத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் அனைவரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். பணம் இரட்டிப்பு என்று எங்களிடம் கூறினாலும் ஆர்கானிக் பொருள்களை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துவதுதான் இந்த நிறுவனத்தில் நோக்கம் என்று அதை நடத்தியவர்கள் கூறினார்கள்.

அலுவலகத்தின் உள்தோற்றம்
அலுவலகத்தின் உள்தோற்றம்

பிரபலமான ஆர்கானிக் நிறுவனத்திலிருந்து நாங்கள் பிரிந்து வந்துவிட்டோம். அதற்குப் பங்குத் தொகையாக 2,500 கோடி ரூபாய் கையில் இருப்பதாகப் பணத்தை முதலீடு செய்தவர்களிடம் கூறினார்கள். அதற்கான வங்கி ஆவணங்களையும் மீட்டிங்கில் காண்பித்தார்கள். அதையெல்லாம் பார்த்துதான் நம்பி, நாங்கள் பணத்தை முதலீடு செய்தோம். முதலாளிகளாக்குவோம் என்று கூறி பணத்தை வாங்கினார்கள். ஆனால், எங்களை அந்தக் குடும்பத்தினர் ஏமாளிகளாக்கிவிட்டார்கள். முதலாளி என்று எங்களிடம் வசூல் செய்த பணத்தில் விலை உயர்ந்த கார்களை அந்தக் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். மேலும், தேசிய கட்சி ஒன்றில் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்" என்றனர்

இந்த நிலையில் பணம் இரட்டிப்பு, ஆர்கானிக் பொருள் விற்பனை எனக் கூறி ஏமாற்றிய கும்பலைச் சேர்ந்த ஒருவர், திருவொற்றியூர் வீட்டில் இருப்பதாக பணத்தை முதலீடு செய்த சிலருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக அந்த வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது திருவொற்றியூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து பணத்தை ஏமாந்தவர்களிடம், `ஏன் இப்படி பொதுமக்களுக்கு இடையூறு செய்கிறீர்கள்' என கேட்டுள்ளனர். அதற்குப் பணத்தைக் கொடுத்து ஏமாந்தவர்கள் விவரத்தைக் கூறியுள்ளனர். அதற்குள் வழக்கறிஞருடன் பணம் வாங்கி ஏமாற்றிய ஒருவர் காரில் தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

சேதமடைந்த கார்
சேதமடைந்த கார்

இதையடுத்து, அந்த காரை மடக்கி இருவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். போலீஸார் விசாரணை நடத்தியபோது, காவல்நிலையத்துக்கு வெளியில் பணம் கட்டியவர்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவரும் மீண்டும் காரில் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. உடனே, வெளியில் இருந்தவர்கள் காரை மடக்க முயன்றிருக்கிறார்கள். அப்போது நடந்த தகராறில் கார் சேதமடைந்துவிட்டதாக பணத்தை முதலீடு செய்தவர்கள் கூறினர். இந்தச் சம்பவம் குறித்த திருவொற்றியூர் சரக போலீஸார் கூறுகையில், ``கோடிக்கணக்கில் மோசடி நடந்திருப்பதாக புகார் வந்துள்ளது. இதனால் சென்னை மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் பொருளதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாரை அனுப்பியுள்ளோம்" என்றனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் கேட்டதற்கு ``விசாரணை நடந்துகொண்டிருக்கிறது" என்று மட்டும் கூறினர்.

சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பாக விளக்கம் கேட்க அதை நடத்தியவர்களைப் பலமுறை தொடர்புகொண்டோம். ஆனால், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்களின் விளக்கம் கொடுக்கும்பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப்பிறகு அதையும் வெளியிடத் தயாராக உள்ளோம்.