Published:Updated:

விருதுநகர்: கிசான் ரேஷன் ஷாப்; மத்திய அரசின் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி - உ.பி வரை நீண்ட விசாரணை

ஜெயகணேஷ்

மத்திய அரசின் பெயரைப் பயன்படுத்தி, பருப்பு கொள்முதலில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த நபர்களை குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

விருதுநகர்: கிசான் ரேஷன் ஷாப்; மத்திய அரசின் பெயரில் கோடிக்கணக்கில் மோசடி - உ.பி வரை நீண்ட விசாரணை

மத்திய அரசின் பெயரைப் பயன்படுத்தி, பருப்பு கொள்முதலில் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி செய்த நபர்களை குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
ஜெயகணேஷ்

விருதுநகரில், மத்திய அரசின் பெயரைப் பயன்படுத்தி கோடிக்கணக்கான ரூபாய்க்கு பருப்பு கொள்முதல் செய்து மோசடியில் ஈடுபட்டவர்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கைதுசெய்துள்ளனர். விருதுநகரில் ஆரம்பித்து உத்தரப்பிரதேசம் வரை நீண்டு முடிந்திருக்கும் இந்தப் பரபரப்பு சம்பவம் குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் நேரில் பேசினோம்.

``விருதுநகரை அடுத்த ரோசல்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரின் மனைவி தனலட்சுமி. ரோசல்பட்டியில் `தனலட்சுமி டிரேடர்ஸ்’ எனும் பெயரில் பருப்பு மொத்த கொள்முதல் வியாபாரம் செய்துவருகிறார். ராஜ்குமாருக்குச் சொந்தமாக விருதுநகரில் நான்கு பருப்பு அரவை மில்கள் உள்ளன. இந்நிலையில், கடந்த 18.03.2021 அன்று, விருதுநகரைச் சேர்ந்த பருப்பு வியாபாரிகளான முருகேசன், ஹரிஹரன் ஆகியோர் ராஜ்குமார்-தனலட்சுமி தம்பதியரைச் சந்தித்துள்ளனர். அப்போது பேசியவர்கள், தாங்கள் மத்திய அரசின் கீழ் செயல்படும்‌ 'கிசான் ரேஷன் ஷாப்' நிறுவன பர்ச்சேஸ் இன்சார்ஜ்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டனர். தொடர்ந்து, அரசு இலச்சினை கொண்ட அடையாள அட்டைகளைக் காண்பித்து அவர்களை நம்பவைத்துள்ளனர்.

ஜெயகணேஷ்
ஜெயகணேஷ்

``பருப்பு மொத்த கொள்முதல் வியாபாரிகளிடமிருந்து மானிய விலைக்கு பருப்பு கொள்முதல் செய்து, அதை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கிசான் ரேஷன் ஷாப் வழியாக பொதுமக்களுக்குச் சரியான விலையில் வழங்கும் திட்டத்தைப் பற்றிச் சொல்லவந்திருக்கிறோம். உங்களிடம் கொள்முதல் செய்யும் பாசிப் பருப்பு, பாசிப்பயறு, பட்டாணிப் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்டவற்றுக்கு இரண்டொரு நாளில் பில் கிளியரன்ஸ் கொடுத்து பணத்தை செட்டில்மென்ட் செய்கிறோம். இதில் உங்களுக்குச் சம்மதம் என்றால் எங்கள் நிறுவனர் மற்றும் மேலாளர்களை நேரடியாகப் பேச அழைத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளனர்‌.

இதை நம்பிய ராஜ்குமார்-தனலட்சுமி தம்பதியர், 'கிசான் ரேஷன் ஷாப்' நிறுவனர் மற்றும் மேலாளரைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து, 20.03.2021-அன்று கிசான் ரேஷன் ஷாப் சேர்மன் என கோவை மாவட்டம், பொள்ளாச்சியைச் சேர்ந்த ஜெயகணேஷ் என்பவரும், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகாவை அடுத்துள்ள ஓடைப்பட்டியைச் சேர்ந்த பாண்டியராஜன்‌ மேனேஜிங் டைரக்டர் எனவும் ராஜ்குமார் தம்பதியைச் சந்தித்து அறிமுகமாகியுள்ளனர். தொடர்ந்து, கிசான் ரேஷன் ஷாப் திட்டம் பற்றி பல்வேறு ஆங்கில நாளேடுகளில் வெளிவந்த பேப்பர் கட்டிங்குகள், விளம்பரங்கள், தமிழகத்தில் மற்ற பகுதிகளில் பருப்பு மொத்த வியாபாரியிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆவணங்கள், செட்டில்மென்ட் கணக்கு விவரங்கள், அலுவலகத் தொடர்பு விவரங்கள், குடோன், சரக்கு சப்ளை என அவர்களை நம்பவைக்கும்விதமாக அனைத்தையும் காட்டியுள்ளனர்.

டெண்டர் பத்திரம்
டெண்டர் பத்திரம்

இதை முழுதாக நம்பிய ராஜ்குமார் தம்பதியர், கிசான் ரேஷன் ஷாப் திட்டத்தில் சேர்ந்து தொழில் செய்ய விருப்பம் தெரிவித்து டெண்டர் போட்டுள்ளனர். அதன்படி, 28.03.2021-ல் 50 கிலோ மூடைகளாக 400 மூட்டைகளில் ரூ.19 லட்சத்து 30ஆயிரம் மதிப்புள்ள பாசிப் பருப்பு, பாசிப் பயறு ஆகியவற்றை ஜெயகணேஷ் கொடுத்த பொள்ளாச்சி கிசான் ரேஷன் ஷாப் குடோன் முகவரிக்கு ராஜ்குமார் அனுப்பிவைத்திருக்கிறார். இதையடுத்து 29.03.2021-ல் 300 மூட்டைகளில் ரூ.14 லட்சத்து 35 ஆயிரம் மதிப்புள்ள பருப்புகளை கள்ளிக்குடி குடோனுக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.

போலி அடையாள அட்டை
போலி அடையாள அட்டை

இப்படியாக, 28.03.2021 முதல் 30.06.2021 வரை ரூ.5 கோடியே 1 லட்சத்து 7 ஆயிரத்து 400 மதிப்புள்ள பருப்பு மூட்டைகள் தேவையின் அடிப்படையில் ஜெயகணேஷ் கொடுத்த முகவரிக்கு ராஜ்குமார் தம்பதியர் அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் இவை எதற்கும் பில் பாஸ் செய்து பணம் கொடுக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ராஜ்குமார் இது குறித்து, ஜெயகணேஷ், பாண்டியராஜனிடம் கேட்டிருக்கிறார். அப்போது, ``பில்கள் அனைத்தும் கையெழுத்துக்காக கோப்பில் வைக்கப்பட்டிருக்கின்றன. சீக்கிரமாக செட்டில்மென்ட் ஆகிவிடும். நீங்கள் மேலும் சரக்குகளை அனுப்பிவையுங்கள். கட்டாயம் அதற்கும் சேர்த்து பணம் தந்துவிடுவோம்” என ராஜ்குமாரைச் சமாதானப்படுத்தியுள்ளனர். ஆனால் இதை நம்ப மறுத்து, `பணம் வந்தால்தான் இனி கிசான் ரேஷன் ஷாப் நிறுவனத்துக்கு சரக்குகள் அனுப்புவேன்’ என ராஜ்குமார் கூறியிருக்கிறார்.

இதனால் திகைத்துப்போன அவர்கள், ராஜ்குமாரை நம்ப வைப்பதற்காக பாண்டியராஜனின் வங்கிக் கணக்கு மற்றும் அவருக்கு சொந்தமான ஜெயா டிரேடர்ஸ் நிறுவனக் கணக்கு மூலமாக 2 கோடியே 15 லட்ச ரூபாயை செட்டில்மென்ட் தொகையாக கொடுத்துள்ளனர். மீதி 2 கோடியே 86 லட்சத்து 7 ஆயிரத்து 400-ஐ பிறகு தருவதாகச் சமாளித்துள்ளனர். இருப்பினும் சந்தேகம் தீராத ராஜ்குமார், அவர்களைப் பற்றி தனியே விசாரித்திருக்கிறார். இதில் அடுத்த சில நாள்களிலேயே, தன்னிடம் கொள்முதல் செய்த பருப்பை விருதுநகர் மார்க்கெட்டிலுள்ள கே.ஆர்.டிரேடர்ஸ், கார்த்திகா ஸ்ரீ டிரேடர்ஸ், வி.வி.டி.கோகுல் அண்ட் கோ ஆகிய நிறுவனங்களுக்கு கிசான் ரேஷன் ஷாப் நிறுவனத்தினர் கள்ளச்சந்தையில் குறைந்த விலைக்கு உடனுக்குடன் விற்று பணம் சம்பாதித்திருப்பதைத் தெரிந்துகொண்டார்.

கள்ளச்சந்தையில் பருப்பு மொத்த விற்பனைக்கு வாங்குவோருக்கு குறைவான விலையும், அதே பருப்பை கடைகளில் ரீ-சேல் பாயின்ட்டுக்கு பாக்கெட்டுகளில் அடைத்து அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதித்திருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதன் மூலம், தான் மோசடி செய்யப்பட்டதற்கு நியாயம் கேட்டும், பருப்பு கொள்முதலுக்கான மீதத்தொகையை செட்டில்மென்ட் செய்யச் சொல்லிக் கேட்டும் ராஜ்குமார் தம்பதியர் உறவினருடன் பாண்டியராஜனைச் சந்தித்துள்ளனர்.

போலி விண்ணப்பம்
போலி விண்ணப்பம்

அப்போது பாண்டிராஜன், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் பயந்துபோன அவர்கள், பருப்பு கொள்முதல் மோசடி குறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் தனலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்கள்.

விளம்பரம்
விளம்பரம்

போலீஸாரின் விசாரணையில், ஜெயகணேஷ், பாண்டியராஜன் சேர்ந்து தமிழ்நாட்டில் சென்னை, சேலம், கோவை, திருச்சி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இது போன்று மோசடிகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. சென்னையைச் சேர்ந்த பருப்பு வியாபாரி பாலாஜி என்பவரை ஏமாற்றி 3 கோடியே 65 லட்சத்து 42 ஆயிரத்து 920 ரூபாய் மோசடி செய்துள்ளனர். இது தொடர்பாக ஏற்கெனவே சென்னை பெருநகர குற்றப்பிரிவு போலீஸும் வழக்கு பதிவுசெய்து ஜெயகணேஷைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில் அவர், உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்படி, அங்கு சென்ற போலீஸார் ஜெயகணேஷைக் கைதுசெய்தனர். அதைத் தொடர்ந்து, பாண்டியராஜனும் சென்னை போலீஸால் கைதுசெய்யப்பட்டு தற்போது இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டவர்களில் ஜெயகணேஷ் பா.ஜ.க.கட்சிப் பிரமுகர். அவர், உத்தரப்பிரதேசத்தில் அரசியல் பின்புலத்திலுள்ள ஒருவரின் பாதுகாப்பிலேயே பதுங்கியிருந்திருக்கிறார்.

பாஜக கட்சியினருடன்
பாஜக கட்சியினருடன்

அதையெல்லாம் தாண்டித்தான் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின்படி, இந்தப் பண மோசடியில் ஜெயகணேஷின் தந்தை ராஜேந்திரன், பாண்டியராஜனின் மனைவி உமா, விருதுநகரில் கள்ளச்சந்தையில் பருப்பு வாங்கியவர்களான வி.வி.டி.கோகுல் அண்ட் கோ உரிமையாளர் விக்னேஷ் என்ற விக்கி, கார்த்திகா டிரேடர்ஸ் உரிமையாளர் கருமாரிக்கனி ஆகியோருக்கும் பங்கிருப்பது தெரியவந்தது. எனவே, அவர்கள் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதில் விக்னேஷ் என்ற விக்கி, கருமாரிக்கனி ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருக்கும் மற்றவர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.

அடிப்படைத் தேவையான உணவுப்பொருளில் நடக்கும் இந்த மோசடியை இன்னும் தீர ஆராய்ந்து அரசு தடுக்க வேண்டும்!