Published:Updated:

`தவறிவிழுந்தாரா... தள்ளிவிடப்பட்டாரா?!' -செங்கல்பட்டு கல்லூரி மாணவி மரணத்தில் எழும் சந்தேகம்

கடந்த 13-ம் தேதி மாலை கல்லூரி வகுப்புகள் முடிந்த நிலையில், வீட்டுக்குச் செல்லாமல் அங்கேயே இருந்துள்ளார். மாலை சுமார் 5.30 மணியளவில் இரண்டாவது மாடியிலிருந்து மர்மமான முறையில் விழுந்துள்ளார்.

மரணமடைந்த மாணவி
மரணமடைந்த மாணவி

செங்கல்பட்டு கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் மாடியிலிருந்து விழுந்து இறந்த சம்பவத்தால், அவரின் பெற்றோர்கள் இரண்டாவது நாளாக மாணவியின் உடலை வாங்க மறுத்துப் போராடி வருகிறார்கள்.

செங்கல்பட்டு, வேதநாராயணபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்று. இந்தக் கல்லூரியில் கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் அதிகளவில் படித்துவருகிறார்கள். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்கள், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கிப் படித்துவருகின்றனர். இந்தக் கல்லூரியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கிருஷ்ணபிரியா மூன்றாம் ஆண்டு கணிதவியல் பிரிவில் படித்துவந்தார்.

வித்யாசாகர் கல்லூரி
வித்யாசாகர் கல்லூரி

கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கிப் படித்து வந்ததால் தினமும் பேருந்திலேயே கல்லூரிக்குச் சென்றுவருவார். கடந்த 13-ம் தேதி மாலை கல்லூரி வகுப்புகள் முடிந்த நிலையில் வீட்டுக்குச் செல்லாமல் அங்கேயே இருந்துள்ளார். மாலை சுமார் 5.30 மணியளவில் இரண்டாவது மாடியிலிருந்து மர்மமான முறையில் விழுந்துள்ளார். சகமாணவிகள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு அங்கு முதலுதவியைச் செய்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி மாணவி உயிரிழந்தார்.

Vikatan

தகவல் அறிந்து கல்லூரிக்கு செங்கல்பட்டு காவல்துறையினர் விரைந்தனர். ஆனால், அங்கிருந்த காவலாளிகள் அவர்களை கல்லூரிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதனால் காவல்துறையினர் கல்லூரி நிர்வாகத்தினரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றனர். கல்லூரி நிர்வாகத்தினர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்ததால் காவல்துறையினர் கொதிப்படைந்தனர். இரவு முழுவதும் முயன்றும் மாணவியின் பெயர் மற்றும் விவரங்களை காவல்துறையினரால் பெறமுடியவில்லை.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

மீண்டும் காலையில் காவல்துறை அதிகாரிகள், கல்லூரி நிர்வாகத்தினரை தொடர்புகொண்டு சத்தம் போட்டுள்ளனர். கல்லூரி மாணவி மாடியிலிருந்து விழுந்த சம்பவத்தைக் காவல்துறைக்கு தெரிவிக்காததும், மாணவி விழுந்தவுடன் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதும், கல்லூரி நிர்வாகிகள் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்ததும் பொதுமக்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

` மாணவி மரணத்தில் வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா... அந்தநேரத்தில் 2-வது மாடியில் இருந்தவர்கள் யார்?' என்கின்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி மரணம் குறித்து விளக்கம் அறிய கல்லூரி முதல்வரைத் தொடர்பு கொண்டோம். அவர் சார்பாக, நம்மிடம் பேசிய கல்லூரி கண்காணிப்பாளர் கல்பனா, ` நிர்வாகத்தினரிடம் பேசிவிட்டுத் தொடர்பு கொள்கிறேன்" என்றதோடு முடித்துக் கொண்டார்.

பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் மாணவர்கள் மர்மமான முறையில் மாடியிலிருந்து தொடர்ந்து விழுந்து இறப்பதால், அந்தத் தற்கொலை வழக்குகள் அனைத்தும் சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதுபோல், `மாணவி கிருஷ்ணபிரியா வழக்கையும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்' எனக் கோரிக்கை வைக்கின்றனர் சக மாணவர்கள்.