Published:Updated:

போலி இ-பாஸ்; அதிர்ச்சி கொடுத்த 5 பயணிகள்! -மாற்றுப் பாதை யோசனையால் சிக்கிய செங்கல்பட்டு டிரைவர்

போலி இ-பாஸுடன் வந்த டிரைவர் விக்னேஷ்
போலி இ-பாஸுடன் வந்த டிரைவர் விக்னேஷ்

ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் இ-பாஸ் ஸ்கேன் செய்து பார்க்கப்படுவதாக அந்த கார் டிரைவருக்கு தெரியவந்ததால் அங்கிருந்து மாற்றுப்பாதை வழியாக, குமரி மாவட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு சென்னை, செங்கல்பட்டு உட்பட நான்கு மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுவதால், அங்கிருந்து சொந்த ஊர்களுக்குத் திரும்பும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிலும் இப்போது இ-பாஸ் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் முழுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. வாகனங்களின் டிரைவர் மற்றும் பயணிகள் விவரங்கள் சேகரிக்கப்படுவதோடு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. அதுவரை அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்படுகின்றனர். மேலும், அவர்களின் இ-பாஸ் மிகவும் நுட்பமாக கண்காணிக்கப்படுகிறது. அனைத்து இ-பாஸ்களிலும் பார் கோட் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் உண்மைத்தன்மை உறுதி செய்யப்பட்டுவருகிறது.

போலி இ-பாஸ்
போலி இ-பாஸ்

கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் பிரகாஷ் என்பவர் போலி இ-பாஸ் மூலம் கன்னியாகுமரி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரைக் கைது செய்ததுடன் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் போலி இ-பாஸ் தயாரித்துக் கொடுக்க பயணிகளிடம் நான்காயிரம் ரூபாய் கூடுதலாக வாங்கியதும் விசாரணையில் தெரியவந்தது. இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் பொதுமக்கள் இ-பாஸ் எடுப்பதற்காக கார் ஓட்டுநர்களை அணுகும் சம்பவம் அதிகரித்துள்ளது.

இதனால் டிரைவர்கள் போலியாக இ-பாஸ் தயாரித்து பயணிகளை அழைத்துச் செல்லும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்துவருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து நேற்று ஐந்து பயணிகளை அழைத்துக்கொண்டு கன்னியாகுமரி மாவட்டம் காட்டாத்துறை பகுதிக்குச் செல்லும் வகையில் இ-பாஸுடன் ஒரு கார் வந்தது. ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் இ-பாஸ் ஸ்கேன் செய்து பார்க்கப்படுவதாக அந்த கார் டிரைவருக்கு தெரியவந்ததால் அங்கிருந்து மாற்றுப்பாதை வழியாக அஞ்சுகிராமம் பகுதி சென்று, அங்கிருந்து குமரி மாவட்டத்துக்குள் நுழைய முயன்றுள்ளார்.

பறிமுதல்செய்யப்பட்ட கார்
பறிமுதல்செய்யப்பட்ட கார்

அஞ்சுகிராமம் சோதனைச்சாவடியிலும் இ-பாஸ் ஸ்கேன் செய்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் அந்த பாஸ் போலியாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. பயணிகளிடம் நடத்திய விசாரணையில் பாஸ் எடுத்து தருவதாக கார் டிரைவர் பணம் வாங்கியது தெரியவந்தது.

இதையடுத்து கார் டிரைவரான செங்கல்பட்டு, எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (28) கைது செய்யப்பட்டார். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் வந்த ஐந்து பயணிகள் மற்றும் டிரைவர் விக்னேஷ் ஆகியோர் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு