Election bannerElection banner
Published:Updated:

``காரில் கடத்தி கொல்லப் பார்த்தார்கள்!’’- செங்கல்பட்டு இருளர் இளைஞர்கள் கண்ணீர்

இருளர்கள்
இருளர்கள்

இருளர்களின் சாதிச் சான்றிதழைப் பயன்படுத்தி, பல்வேறு மோசடிகளைச் செய்து, அதிலிருந்து தப்பிப்பதற்காக அந்த இருளர்களையே கொல்லத் துணிந்திருக்கிறார்கள்.

செங்கல்பட்டு அருகே உள்ளது, அத்திமனம் கிராமம். அப்பகுதியில் அமரன், கண்ணன் என்ற இருளர் இளைர்கள் வசித்துவருகின்றனர். அதே கிராமத்தைச் சேர்ந்த வேதகிரி மற்றும் அவரின் உறவினர்கள், அவர்களின் இருளர் சான்றுகளைப் பயன்படுத்தி அரசின் சலுகைகளை முறைகேடாக அனுபவித்திருக்கிறார்கள். மத்திய அரசு திட்டத்தின் கீழ் பல்வேறு ஒப்பந்தங்கள் இவர்கள் பெயரில் எடுக்கப்பட்டு, அவர்களுக்குத் தெரியாமலேயே வங்கிக் கணக்குகளும் பராமரிக்கப்பட்டிருக்கின்றன.

பாதிக்கப்பட்ட இருளர்கள்
பாதிக்கப்பட்ட இருளர்கள்

வருமான வரி, ஜிஎஸ்டி, வங்கிக் கடன் எனத் தொழிலதிபர்களைப் போல கணக்கு காட்டி வந்திருக்கிறார்கள். கையெழுத்து போடச் சொல்லும் இடங்களில் கையெழுத்து போடுவதுதான் இவர்களின் வேலை. அதற்கு, அற்ப சம்பளமாக சில ஆயிரம் கொடுத்து சரிகட்டிவிடுவார்கள். 36 லாரிகள், இருசக்கர வாகனங்கள், வங்கிக் கடன் எனப் பல கோடி சொத்துகள் இவர்கள் பெயரில் சுருட்டப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சட்டவிரோதச் செயல்களும் இந்த அப்பாவி இருளர் இளைஞர்கள் பெயரில் நடந்துள்ளன. இவ்வளவு பணத்தையும் ஏப்பம் விட்டுவிட்டு, தொழிலையும் நட்டத்தில் காட்டிவிட்டு, கடைசியில் அந்த இளைஞர்களையே கொல்லத் துணிந்திருக்கிறார்கள், ஈவு இரக்கமற்ற அந்த மனிதர்கள்.

அத்திமனம் கிராமத்திற்குச் சென்றோம். ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருளர்களின் குடியிருப்பு இருந்தது. ஒழுகும் ஓலைக் குடிசைகளும் ஓட்டைப் பாத்திரங்களும் மட்டுமே அந்த `கோடீஸ்வர’ இருளர்களின் சொத்தாக இருந்தது. என்ன நடந்தது என அவர்களிடம் பேசினோம். மெல்ல பேசத் தொடங்கினார் அமரன். “கூலி வேலைக்குப் போனால்தான் எங்களுக்கு சோறு. எங்க ஊரில் உள்ள வேதகிரி என்பவரின் உறவினர் சங்கரநாராயணன், சென்னையில் உள்ளார். அடிக்கடி இங்கு வந்துசெல்வார்.

இருளர் குடியிருப்பு
இருளர் குடியிருப்பு

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இங்கே வந்த சங்கரநாராயணன், “இங்கே தங்கி கஷ்டப்பட வேண்டாம், என்னுடன் சென்னைக்கு வந்தால் மாதம் ஐயாயிரம் தருகிறேன்’ என கண்ணனை சென்னைக்கு அழைச்சிட்டுப் போனார். உன்னோட பெயரில் தொழில் தொடங்கலாம் எனச் சொல்லி, அவனுடைய சர்ட்டிபிகேட், போட்டோ எல்லாவற்றையும் வாங்கினாங்க. கண்ணன் பெயரில் லாரி ஓடுவது எங்களுக்குத் தெரியும். கண்ணனிடம் அடிக்கடி செக் புக்கில் கையெழுத்து வாங்கிக்குவாங்க. ஆனா, கண்ணனுக்கு கணக்கு வழக்கு ஒன்றுமே தெரியாது. இந்த நிலையில சில வருஷம் கழிச்சு சங்கரநாராயணனின் மகன் சந்தோஷ் எனக்கு போன் செய்தார். உன்னுடைய பெயரில் ஏதாவது சர்ட்டிபிகேட் இருக்கான்னு கேட்டார். என்னோட ஓட்டர் ஐடி, போட்டோ எல்லாவற்றையும் வாங்கிட்டுப் போனார். என்னோட பெயரிலேயும் லாரியை வாங்கி இருப்பதாகச் சொன்னார். அடிக்கடி கையெழுத்து வாங்கிக்குவாங்க. எப்பவாவது ரெண்டாயிரம், ஐயாயிரம் பணம் கொடுப்பாங்க.

கடந்த 4-ம் தேதி, சங்கரநாராயணனின் மகன் கார்த்தி எனக்கு போன் செய்து, அவசரமாக கரூர் போகவேண்டும் எனச் சொன்னார். எனக்கு உடம்பு சரியில்லன்னு சொன்னேன். கரூர்ல இருக்குற லாரிக்கு சின்ன பிரச்னையாயிடுச்சு. நீ கையெழுத்து போட்டாதான் அந்த லாரி போகும். நீ உடனே கிளம்பு என அவசரப்படுத்தினார். இதனால் நானும் கண்ணனும் கரூருக்குக் கிளம்பினோம். கரூர் சென்று கார்த்திக்குப் போன் செய்தோம். கார்த்தி அவருடைய மேனேஜரை அனுப்பினார். அவர், எங்களுக்கு ஒரு ரூம் எடுத்துக்கொடுத்து தங்கவைத்தார். அங்கிருந்து எங்களை காரில் ஏற்றி நாமக்கல் நோக்கி போனாங்க. தெரிஞ்ச டிராவல்ஸ்ல உங்களை ஏத்தி அனுப்புறோம்னு சொன்னாங்க.

அமரன் மற்றும் கண்ணன்
அமரன் மற்றும் கண்ணன்

ஒரு டீக்கடையில் நிறுத்தி டீ வாங்கிக் கொடுத்தாங்க. அங்கே சங்கரநாராயணன் வந்து நின்னார். எங்களுக்கு இவர் எப்படி இங்க வந்தார்னு ஆச்சர்யமா இருந்துச்சு. எங்களுக்கு ஒன்னுமே புரியல. மேனேஜர் என் செல்போனை வாங்கி, அதை நொறுக்கி பாக்கெட்டில் போட்டுக்கிட்டு, என் பக்கத்தில உட்கார்ந்து கொண்டார். கண்ணனைப் பார்த்து உன் வண்டிங்க எல்லாம் பிரச்னையா இருக்கு. கோர்ட்ல கேஸ் போடலாமான்னு கேட்டார். கண்ணனும் வீட்டுல கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டான்.

சேலத்திலிருந்து வேலூருக்கு போற வழியில காரில் அழைச்சுகிட்டு போனாங்க. அப்போது நரநரவென பல்லைக் கடிச்சார் சங்கரநாராயணன். எங்களுக்குத் தெரியாத வழியெல்லாம் வண்டி போச்சு. ஒரு ஹோட்டலில் நிறுத்தி சாப்பாடு வாங்கிக் கொடுத்தாங்க. திரும்பவும் காரில் ஏற்றிக் கொண்டு போனாங்க. காரை ஒரு இடத்தில் நிறுத்தினாங்க அப்போ, மேனேஜர் திடீர்னு என் கழுத்தை கயிற்றால் இறுக்கினார். இதைக் கண்டு கண்ணன் உயிருக்கு பயந்து தப்பிச்சு ஓடினான். நானும் ஒருவழியா தள்ளிவிட்டுட்டு தப்பிச்சு ஓடினேன்.

அமரன் கழுத்தில் காயம்
அமரன் கழுத்தில் காயம்

இருவரும் இரவில் ஒரு கோழிப்பண்ணையில் தங்கிட்டோம். ராத்திரி முழுவதும் எங்களைத் தேடினாங்க. பிறகு, அங்கிருந்து தப்பிச்சு வேலூர் போற பஸ்ல ஏறினோம். அங்க ஒரு போலீஸ்காரர் இருந்தார். இவங்க திருடங்களைப் போல இருக்காங்கன்னு சொல்லி புடிச்சுக் கொடுத்துட்டு கிளம்பிட்டார். ஆம்பூர் போலீஸ்காரங்களிடம் எங்க ஓட்டு கார்டை கொடுத்து விவரத்தைச் சொன்னதும், எங்களை போகச் சொல்லிட்டாங்க. ஒருவழியா உயிர்பிழைச்சு வந்துசேர்ந்தோம்.” என்கிறார் மிரட்சியாக.

இவரைத் தொடர்ந்து பேசிய கண்ணன், “இங்கே வந்ததும் ஊர்ல இருக்குறவங்களோட பேசி, படாளம் போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்தோம். சம்பவம் வேறு இடத்தில் நடந்திருக்குன்னு சொல்லி அவங்க புகார் வாங்கவில்லை. எந்த ஊரில் சம்பவம் நடந்ததுன்ற விவரம்கூட எங்களுக்குத் தெரியாது. எங்க உயிருக்கு அவங்களால ஆபத்து இருக்கு. அது மட்டும் உண்மை” என்கிறார்

சீனுவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
சீனுவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் மதுராந்தகம் ஒன்றியச் செயலாளர் சீனுவாசன், “கிராமத்தில் உள்ளவர்களிடம் பேசினோம். பாதிக்கப்பட்டவர்கள் இருளர் என்பதால் கிராமத்தில் உள்ளவங்களும் இவங்களுக்கு ஆதரவான முடிவில்தான் இருக்கிறார்கள். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஐான் லூயிஸ் அவர்களிடம் மனு கொடுத்தோம். அவர் படித்துவிட்டு நடவடிக்கை எடுக்கச் சொல்லி டிஎஸ்பி-யிடம் தெரிவித்தார். இதில் சங்கரநாராணன் குடும்பம் மட்டுமில்லாமல் வங்கி, பெட்ரோல் நிறுவனங்களும் உடந்தையாக இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை என்னவென்பது தெரியவரும்“ என்றார்.

சமூக செயல்பாட்டு இயக்கத்தின் (SAM) மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் “சேலம், திருநெல்வேலி, கரூர், சங்கங்கிரி, மதுரை என ஐந்து இடங்களில் இவர்கள் பெயரில் பெட்ரோல் லாரிகள் ஓடுகின்றன. கண்ணன் டிரான்ஸ்போர்ட், எஸ்.கே. டிரான்ஸ்போர்ட் என இருவர் பெயரிலும் லாரிகள் இருக்கின்றன. இவர்கள் பெயரில் எத்தனை லாரிகள் உள்ளன என்ற விவரம் கூட சரியாகத் தெரியாது.

தங்கவேல், சமூக செயல்பாட்டு இயக்கம்
தங்கவேல், சமூக செயல்பாட்டு இயக்கம்

தவணையை ஒழுங்காகச் செலுத்தாததால், இவர்களுக்கு அடிக்கடி வங்கிகளில் இருந்து நோட்டீஸ் அனுப்பிவிடுவார்கள். இவர்களும் அந்த நோட்டீஸை எடுத்துக்கொண்டு சென்றால், இது சின்ன விஷயம்தான் எனச் சொல்லி அந்த நோட்டீஸை வாங்கி வைத்துக்கொள்வார்கள். இப்படியே சென்றுகொண்டிருந்தது. இந்த நிலையில், வெற்றுப் பத்திரத்திலும் இவர்களிடம் கையெழுத்து வாங்கி பல்வேறு மோசடிகளைச் செய்திருக்கிறார்கள்” என்றார்.

வேதகிரியைச் சந்தித்துப் பேசினோம். “என்னுடைய தங்கை வீட்டில் நான்கு லாரிகள் இருக்கின்றன. இருளர் யாராவது இருந்தால், அவங்களுக்கும் ஒரு லாரி வாங்கி கொடுத்து கூடுதலாக வண்டி ஓட்டலாம்னு சொன்னாங்க. கண்ணன் வேலை இல்லாமல் இருந்ததால், அப்போது கண்ணனை அறிமுகப்படுத்தி வைத்தேன். கண்ணனுக்கும் அமரனுக்கும் சாதிச்சான்று கிடையாதுனு என்னிடம் வந்து நின்னாங்க.

வேதகிரி
வேதகிரி

அவங்களுக்கு உதவினேன். ஆனா, சங்கரநாராயணனும் அவங்களும் சேர்ந்து என்ன செய்தாங்கன்னு எனக்குத் தெரியாது. ஆரம்பத்துல சில வருஷம் மட்டுமே எங்களுக்கு பழக்கம் இருந்தது. அப்போது இருந்த கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்திருக்கிறோம். மற்றபடி இப்போது என்ன நடந்தது என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. வழக்கு வந்தால் எங்களிடம் இருக்கும் நியாயத்தை சொல்லத் தயாராக இருக்கிறோம்.” என்கிறார்.

இப்படிப்பட்ட மனிதர்களை என்னவென்று சொல்வது?

Vikatan
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு