செங்கல்பட்டு மாவட்டம், வேப்பஞ்சேரி பகுதியில் பாலாறு ஓடுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு பெண் சடலம் ஆற்றில் மிதந்து வந்திருக்கிறது. இதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், இது குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவமறிந்து வந்த போலீஸார் அந்தப் பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றினர். அந்தச் சடலம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலிருந்தது.
அதையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில் உயிரிழந்த பெண், நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்த சாந்தி (50) என்பது தெரியவந்தது. விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியதில் பல அதிர்ச்சிகர தகவல்கள் தெரியவந்தன.
உயிரிழந்த சாந்தி கடைசியாக திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். அதைத் தொடர்ந்து, மரக்காணத்தில் வசித்துவரும் தன்னுடைய பேரப்பிள்ளைகளைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்.
சாந்தியின் மகள் உயிரிழந்துவிட்ட நிலையில், குழந்தைகளை சாந்தியின் மருமகன் ஆனந்தன் வளர்த்துவருகிறார். சாந்தி கடைசியாக மருமகனின் வீட்டுக்குச் சென்றிருந்ததால், அவரின் மருமகன் ஆனந்தனிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசவே... சந்தேகமடைந்த போலீஸார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். கடைசியில் ஆனந்தன் தன்னுடைய மாமியாரைக் கொலைசெய்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும் ஆனந்தன் போலீஸாரிடம், ``சாந்தியின் பெயரிலுள்ள சொத்துகளை என்னுடைய மகன்களின் பெயரில் எழுதிவைக்கச் சொன்னேன். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரத்தில் சாந்தியைக் கழுத்தை நெரித்துக் கொலைசெய்துவிட்டேன். பின்னர், உறவினர் சிறுவன் ஒருவனின் உதவியுடன் உடலை காரில் எடுத்துச் சென்று யாரும் பார்க்காதபோது, பாலாற்றில் வீசிவிட்டேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
இதையடுத்து, அந்தச் சிறுவனை சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்த போலீஸார், ஆனந்தனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சொத்துக்காக மருமகன், மாமியாரைக் கொலைசெய்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.