செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில் உள்ள பஜார் தெருவில் அடகுக்கடை நடத்தி வருபவர் பத்தேசந்த் (74). இவரின் மனைவி பிரேம்கன்வர் (70). இந்த தம்பதியினருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். முதல் மகன் கணபதி லால் சென்னையில் குடும்பத்துடன் வசித்துவரும் நிலையில், மற்ற மூன்று மகன்களும் பெற்றோர்களுடன் தான் வசித்து வருகின்றார்கள். இவர்களின் கடைசி மகன் கமலேஷ் குமார் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை.

வழக்கம் போலக் கடைக்குச் சென்று வீடு திரும்பிய பத்தேசந்த் வீட்டின் மாடியில் தனது மனைவி பிரேம்கன்வர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாகத் திருக்கழுக்குன்றம் பகுதி காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார் பிரேம் கன்வரின் உடலைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும்போது தான், பிரேம்கன்வரின் மூன்றாவது மருமகள் சுஜாதா மாடியிலிருந்து கீழே விழுந்து காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து சுஜாதாவிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். முதலில் சிலர் வீட்டுக்குள் புகுந்து தன் மாமியாரைக் கொலை செய்துவிட்டுத் தப்பித்துச் சென்றுவிட்டனர். அவர்களைப் பிடிக்க முயற்சி செய்யும்போது கீழே விழுந்து கால் உடைந்து விட்டதாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
எனினும் காவல்துறையின் கேள்விகளுக்குச் சுஜாதா முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளிக்கவும், சந்தேகம் வலுப்பெற்றது. சுஜாதாவிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தவும், தான் மாமியாரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது, ``பிரேம்கன்வர் எப்போதும் என்னைத் திட்டிக்கொண்டே இருப்பார். அடித்து சித்திரவதை செய்வர். முதல் இரண்டு மருமகள்களோடு ஒப்பிட்டுப் பேசுவார். சமீப காலமாக அவரின் கொடுமை அதிகரித்துக்கொண்டே சென்றது. இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.
பிரேம்கன்வரை கொலை செய்வதற்காகப் பீகாரில் வசிக்கும் தனது உறவினர்கள் சுமித் மற்றும் தீபக்கை வரவழைத்து சுஜாதா வீட்டில் கடந்த சில தினங்களாகத் தங்க வைத்திருக்கின்றார். வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து பிரேம்கன்வரை கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளனர். கொலை செய்துவிட்டுத் தப்பித்துச் செல்லும்போது மாடியிலிருந்து கீழே விழுந்து சுஜாதாவின் கால் உடைந்துள்ளது. மாமியாரைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சுஜாதாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தப்பித்துச் சென்ற சுஜாதாவின் உறவினர் இருவரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்றார்கள்.