Published:Updated:

21 வயதுப் பெண்ணுக்கு நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி! சென்னையில் சிக்கிய 17 வயது சிறுவன்

Representational Image
Representational Image

வடசென்னையில் மெடிக்கல் கடையில் வேலைபார்த்து விட்டு தனியாக நடந்து சென்ற இளம்பெண்ணிடம் 17 வயது சிறுவன் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. பிற்பகல் 2 மணிக்கு மேல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மெடிக்கல், மருத்துவமனை என அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர். தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்துவருகின்றனர். மேலும், மாவட்ட எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

Representational Image
Representational Image

இந்த நிலையில் மக்கள் நடமாட்டம் இல்லாத சூழலில் வடசென்னையில் 21 வயதுடைய இளம்பெண், தனியாக நேற்று மாலை நடந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். இவர் அந்தப்பகுதியில் உள்ள மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம்பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த சிறுவன் ஒருவன் திடீரென, அந்தப் பெண்ணின் கைகளைப் பிடித்து இழுத்தான்.

சிறுவனின் செயலால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், யாருடா நீ என்று அவனுடன் போராடினார். ஆனால் சிறுவன், இளம்பெண்ணைப் பிடித்து இழுத்தபடி அருகில் இருந்த ரயில்வே தண்டவாள பகுதிக்குச் சென்றிருக்கிறான். இளம்பெண், காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டார். ஆனால், அவளின் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. ரயில்வே தண்டவாள பகுதிக்கு சென்றபிறகு இளம்பெண்ணிடம் அந்தச் சிறுவன் தவறாக நடக்க முயன்றிருக்கிறான். .

Representational Image
Representational Image
`மனைவி இறந்த 3-வது நாள்!' - தற்கொலை முடிவெடுத்த மீஞ்சூர் போலீஸ் ஏட்டு

இதனால் இளம்பெண், அந்தச் சிறுவனுடன் கடுமையாகப் போராடி அங்கிருந்து தப்பி ஓடி மெயின் ரோட்டுக்கு வந்தார். அந்தச் சிறுவனும் பின்னால் அவரை துரத்தியுள்ளான். சிறுவனிடம் சிக்காத இளம்பெண், வீட்டுக்கு வந்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் அம்மா, எண்ணூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இளம்பெண்ணிடம் விசாரணை நடத்திய போலீஸார், மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கும்படி கூறினர்.

இதையடுத்து, இளம்பெண் தரப்பில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸார் சென்றனர். அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது இளம்பெண் கூறியது போல சிறுவன், அவரின் கையைப் பிடித்து வலுகட்டாயமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சிறுவன் குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்தனர்.

Representational Image
Representational Image

போலீஸாரின் விசாரணையில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றது 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. அந்தச் சிறுவன் மீது ஏற்கெனவே செல்போன் பறிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து, அந்தச் சிறுவனை போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்ததால் அப்படி நடந்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று இளம்பெண்ணிடமும் போலீஸாரிடமும் சிறுவன் கெஞ்சியுள்ளான். ஆனால், அவன் மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.

இந்தச் சம்பவம் வடசென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு