Published:Updated:

`ஒரே பொண்ணை இழந்துட்டோம்'; கதறும் விமானப் பணிப்பெண் குடும்பம் - திருமணமான 31-வது நாளில் சோகம்!

தற்கொலை ( Representational Image )

சென்னையில் திருமணமான 31-வது நாளில் விமானப் பணிப்பெண், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`ஒரே பொண்ணை இழந்துட்டோம்'; கதறும் விமானப் பணிப்பெண் குடும்பம் - திருமணமான 31-வது நாளில் சோகம்!

சென்னையில் திருமணமான 31-வது நாளில் விமானப் பணிப்பெண், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
தற்கொலை ( Representational Image )

சென்னை, மீனம்பாக்கம் ஏர்-இந்தியா குடியிருப்பில் வசிப்பவர் சரண்குமார் (30). இவர், கப்பல் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணியாற்றிவருகிறார். இவருக்கும் அன்பரசிக்கும் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருமணம் நடந்தது. அன்பரசி, விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவந்தார். இவர்களின் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தொடங்கியநிலையில் சரண்குமார், சாப்பாடு வாங்க ஹோட்டலுக்குச் சென்றார். வேலைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தார் அன்பரசி. சாப்பாடு பார்சலை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்த சரண்குமார், கதவைத் தட்டியிருக்கிறார். ஆனால் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.

தற்கொலை
தற்கொலை
Representational Image

நீண்டநேரமாகத் தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தார். அப்போது தூக்கில் அன்பரசி தொங்கிக்கொண்டிருந்தார். அதைப் பார்த்து சரண்குமார் அதிர்ச்சியடைந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்றார். அன்பரசியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மீனம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அன்பரசியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அன்பரசியின் மரணம் குறித்து சரண்குமாரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, `சில தினங்களுக்கு முன்னர் எனக்கும் மனைவிக்கும் சண்டை ஏற்பட்டது. அதனால் சம்பவத்தன்று அன்பரசி வீட்டில் சமைக்கவில்லை. எனவே, ஹோட்டலுக்குச் சென்று சாப்பாடு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அதற்குள் அன்பரசி தற்கொலை செய்துகொண்டார்’ என்று கூறியிருக்கிறார். அதன்அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருமணமாகி 32 நாள்களே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆர்.டி.ஓ அளிக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர்.

அன்பரசி
அன்பரசி

அன்பரசி, தற்கொலை செய்துகொள்வதற்கு என்ன காரணம் என இதுவரை தெரியவில்லை. அதனால் அவரின் செல்போனை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர். அதில் தற்கொலை தொடர்பாக ஏதாவது தகவல் இருக்கிறதா என போலீஸார் தேடிவருகின்றனர். இதுவரை எந்த் தகவலும் கிடைக்கவில்லை என மீனம்பாக்கம் போலீஸார் தெரிவித்தனர். மேலும், அன்பரசி தற்கொலை செய்துகொண்ட அறையிலிருந்தும் எந்தவிதக் கடிதமும் கிடைக்கவில்லை என போலீஸார் கூறுகின்றனர். அதனால், விமானப் பணிப்பெண் அன்பரசியின் மரணத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறை முன் அன்பரசியின் குடும்பத்தினரும், சரண்குமார் மற்றும் அவரின் குடும்பத்தினரும் சோகத்தோடு காத்திருந்தனர். அவர்களிடம் அன்பரசிக்கு என்ன நடந்தது என்று கேட்டபோது, அவர்களிடமிருந்து கண்ணீரே பதிலாக வந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அன்பரசியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், ``மாப்பிள்ளை சரண்குமார், தங்கமான பையன். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறான். அன்பரசியிடம் அன்பாக இருப்பார். இரண்டு பேரும் நல்ல வேலையில் இருந்தார்கள். அதனால் எந்தப் பிரச்னையும் கிடையாது. அன்பரசி, சில நேரங்களில் கோபப்படுவாள். அதுதான் அவளின் இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகமாக இருக்கிறது" என்றார்.

தற்கொலை
தற்கொலை
representational image

அடுத்து அன்பரசியின் உறவுக்காரப் பெண் ஒருவர்,``எங்க சொந்த ஊரு சேலம். பெங்களூருவில் அன்பரசி படிச்சா. சென்னையிலுள்ள நட்சத்திர ஹோட்டல்ல சில வருஷம் வேலை பார்த்தா. பிறகுதான் விமானப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சேர்ந்து மாதம் 70,000 ரூபாய்க்கு மேல் சம்பாதித்துவந்தா. ஒரே மகள் என்பதால் செல்லமாக வளர்த்தோம். இப்போ ஒரே பொண்ணை இழந்து தவிச்சிட்டிருக்கோம்" என்றார் கண்ணீர் மல்க.