Published:Updated:

சென்னை: தொழிலதிபரை அடைத்து வைத்து போலீஸ் நடத்திய பல கோடி ரூபாய் டீலிங் - அதிரவைக்கும் புகார்!

கடத்தல்
கடத்தல் ( மாதிரி படம் )

சினிமாவை விஞ்சும் வகையில் தொழிலதிபரைக் குடும்பத்தோடு கடத்தி போலீஸாரின் உதவியோடு சொத்துக்களை கூலிப்படையினர் எழுதி வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னையைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர், சென்னை வடக்கு கூடுதல் கமிஷனர், போலீஸ் கமிஷனர், டி.ஜி.பி ஆகியோருக்கு கடந்த 2020-ம் ஆண்டு பரபரப்பான புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது. ``நான் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பி.எஸ்.சி அனிமேஷன் டெக்னாலஜி படித்தேன். படிப்பு முடிந்தபிறகு கால் சென்டர் நிறுவனத்தை தொடங்கலாம் என முடிவு செய்தேன். அந்த சமயத்தில் சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் எனக்கு அறிமுகமானார். அப்போது அவர் ஒரு கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். அந்தக் கம்பெனியிலிருந்து எனக்கு ப்ராஜட் தருவதாகவும் மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறினார். அதற்கு செக்யூரிட்டி தொகையாக 10 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

Kidnap
Kidnap

அதுதொடர்பாக என்னுடைய அம்மாவிடம் விவரத்தைக் கூறினேன். அம்மா, அரசு பள்ளி ஆசிரியை என்பதால் பணத்துக்கு ஏற்பாடு செய்தார். வெங்கடேஷ் கேட்ட பணத்தை வங்கி மூலம் அனுப்பி வைத்தேன். அதன்பிறகு சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலில் ஒரு கம்பெனியை ஆரம்பித்தேன். அதில் சுமார் 25 பேர் வேலைப்பார்த்தனர். 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை வெங்கடேஷ், என்னுடைய வங்கி கணக்கிற்கு ப்ராஜெக்டுக்கான சம்பளப் பணத்தை அனுப்பி வைத்தார். எல்லா பண பரிவர்த்தனைகளும் வங்கி மூலமாகவே நடந்து வந்தது. அதற்கு நான் வருமான வரி செலுத்தியிருக்கிறேன். 2014-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு மே மாதம் வரை நான் செய்த வேலைக்கு சரியான சம்பள பணத்தை வெங்கடேஷ் எனக்கு தரவில்லை. அதனால் பலரிடம் கடன் வாங்கி என்னிடம் வேலைப்பார்த்தவர்களுக்கு சம்பளம் கொடுத்து வந்தேன்.

கடன் பிரச்னையை சமாளிக்க முடியாமல் நான் என்னுடைய கம்பெனியை 2015-ம் ஆண்டு ஜுன் மாதம் மூடிவிட்டேன். எனக்கு தர வேண்டிய பணத்தை வெங்கடேஷிடம் கேட்டு வந்தேன். இந்தச் சமயத்தில் எனக்கு தர வேண்டிய 5.5 கோடி ரூபாயை தரவில்லை என்றால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வேன் என்று வெங்கடேஷிடம் நான் கூறினேன். இந்தச் சமயத்தில் வெங்கடேஷ், எனக்கு போன் செய்து தன்னுடைய கம்பெனியை சிவா என்பவருக்கு விற்கப் போவதாகவும் அவருக்கு விவரத்தைக் கூறும்படி என்னிடம் தெரிவித்தார். அந்த வகையில் சிவாவிடம் 4 தடவை செல்போனில் பேசினேன்.

Kidnapping
Kidnapping
Representation Image

அதன் பிறகு வெங்கடேஷ், எனக்கு தர வேண்டிய 5.5கோடி ரூபாயை 2016-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை கொஞ்சம் கொஞ்சமாக தந்தார். அதற்கும் வருமான வரி செலுத்தியிருக்கிறேன். அந்தப் பணத்தில் கடன்களை அடைத்து விட்டு மீதியுள்ள பணத்தில் அயப்பாக்கத்தில் 2017-ம் ஆண்டு 2000 சதுர அடி உள்ள காலி இடத்தையும் செவ்வாய்பேட்டையில் 2018-ம் ஆண்டு 2000 சதுர அடியுள்ள ஒரு காலி இடத்தையும், அண்ணணூரில் 2018-ம் ஆண்டு 2520 சதுர அடியுள்ள காலி இடத்தையும் வாங்கினேன். மேலும் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தொழில் தொடங்க 1.25 கோடி ரூபாய் கொடுத்தேன்.

திருவள்ளூர்: ரெய்டில் சிக்கிய 18,550 லிட்டர் எரிசாராயம்! - கடத்தல் கும்பலை வளைத்த போலீஸ்

இந்தச் சமயத்தில் தொழில் தொடங்க எனக்கு 2 கோடி ரூபாய் கடன் தேவைப்பட்டது. அதனால் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவரிடம் 2 கோடி ரூபாய் கடன் வாங்கினேன். அந்தப் பணத்துக்கும் வருமான வரி செலுத்தியிருக்கிறேன். அதன்பிறகு 2018-ம் ஆண்டு அயப்பாக்கத்திலும், அண்ணணூரிலும் வீடு கட்ட ஆரம்பித்தேன். 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் விருகம்பாக்கத்தில் 2 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு கம்பெனியை தொடங்கினேன். அதற்கு முறையாக அரசிடம் அனுமதி வாங்கியிருக்கிறேன். அந்தக் கம்பெனியில் 20 பேர் வேலைப்பார்த்தனர். 2018-ம் ஆண்டு கம்பெனியை வெங்கடேஷிடம் கொடுத்துவிட்டேன். ஏப்ரல் 2019-ம் ஆண்டு என்னுடைய செல்போன் நம்பருக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசியவர் சி.பி.ஐ அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறினார். மேலும் சிவா என்பவரை வெங்கடேஷ் என்பவர் 20 கோடி ரூபாய் வரை ஏமாற்றிவிட்டதாகவும், வெங்கடேஷ் என்பவர் எனக்கு அதிக அளவில் பணத்தை தந்துள்ளதாகவும் அந்தப் பணத்தை என்ன செய்தீர்கள் என்றும் என்னிடம் கேட்டார்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம்

அதற்கு நான், சி.பி.ஐ அலுவலகத்துக்கு வந்து எல்லா தகவல்கயைம் தருகிறேன், உங்கள் அலுவலக முகவரியை கொடுங்கள் என்று கூறினேன். உடனே என்னிடம் பேசியவர் இணைப்பைத் துண்டித்துவிட்டார். அதன்பிறகு எனக்கு எந்த போன் அழைப்புகளும் வரவில்லை. மே 2019-ம் ஆண்டு என் வீட்டுக்கு சில போலீஸ்காரர்கள் வந்து என்னை வலுகட்டாயமாக திருமங்கலம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த இன்ஸ்பெக்டர் என்னை மிரட்டி என் பெயரில் உள்ள சொத்துவிவரங்களைக் கேட்டார். அப்போது என் பெயரில் உள்ள சொத்து விவரங்களைத் தெரிவித்தேன். உடனே இன்ஸ்பெக்டர் உத்தரவின்பேரில் வீட்டிலிருந்த சொத்துக்களின் அசல் ஆவணங்களை எடுத்துக் கொண்டு போலீஸார் காவல் நிலையத்துக்கு வந்தனர்.

பின்னர் அந்தச் சொத்துக்களை சிவா என்பவரின் பெயரில் பத்திரபதிவு செய்து கொடுத்துவிடுமாறு போலீஸார் கூறினர். அதற்கு `நான், ஏன் சிவாவுக்கு பத்திர பதிவு செய்து கொடுக்க வேண்டும். நான் சிவாவிடம் எந்தவித பணமும் வாங்கவில்லையே' என்று கூறினேன். உடனே போலீஸார் என் அம்மா முன்னிலையில் என்னை அடிக்க ஆரம்பித்தனர். அதைப்பார்த்த என்னுடைய அம்மா, `என் மகனை விட்டுவிடுங்கள் உங்களுக்கு அந்த இடத்தை பத்திரப்பதிவு செய்து கொள்ள என் மகனை சம்மதிக்கச் சொல்கிறேன்' என்று கூறினார். அதன்பிறகு என்னையும் என் அம்மாவையும் வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர். அப்போது அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வர தயாராக இருக்கும்படி இன்ஸ்பெக்டர் கூறினர். வீட்டுக்குச் சென்ற பிறகு நடந்த விவரங்களை வெங்டேஷிடம் போன் மூலம் தெரியப்படுத்தினேன்.

அதன்பிறகு சார் பதிவாளர் அலுவலகத்துக்கு என்னை வலுகட்டாயமாக அழைத்துச் சென்றனர். அங்கு வக்கீல்கள் சிலர் வந்திருந்தனர். அவர்களுடன் அண்ணாநகர் இன்ஸ்பெக்டரும் வந்திருந்தார். அவர் என்னிடம் விசாரணை நடத்தினார். அவரிடம் எனக்கு நடந்த கொடுமைகளைக் கூறினேன். உடனே அவர், எல்லா விவரங்களையும் எழுதி தரும்படி கூறினார். அதன்படி நானும் எழுதி கொடுத்தேன். பிறகு வேறு சில காரணங்களால் பத்திரப்பதிவு நடைபெறவில்லை. என்னையும் வீட்டில் இறக்கிவிட்டனர்.

10.6.2019-ல் திருமங்கலம் போலீஸார் எனக்கு போன் செய்து ஸ்டேஷனுக்கு வரும்படி கூறினர். அதன்படி நானும் அங்கு சென்றேன். அப்போது கோடம்பாக்கம் அடைமொழியை பெயரில் வைத்திருக்கும் பிரமுகர் ஒருவர் அங்கிருந்தார். அப்போது இன்ஸ்பெக்டர், `உன்னுடைய இரண்டு சொத்துக்களின் அசல் ஆவணங்கள் சிவாவிடம் இருக்கிறது. அவரின் பெயருக்கு சொத்தை எழுதிக் கொடுத்துவிடு. இல்லையென்றால் உன்னையும் உன் அம்மாவையும் அந்த டீம் கொலை செய்து விடும்' என்று மிரட்டும் தொனியில் கூறினார். காவல் நிலையத்தில் நடந்த இந்தப் பஞ்சாயத்து குறித்து நான் யாரிடமும் சொல்லவில்லை. அம்பத்தூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் வைத்து சிவாவின் பெயருக்கு என்னுடைய அயப்பாக்கம் சொத்தை பவராக எழுதி கொடுத்தேன். அதன்பிறகு அவர்கள் என்னை எந்தவித தொந்தரவும் செய்யவில்லை.

டி.ஜி.பி திரிபாதி
டி.ஜி.பி திரிபாதி

2.10.2019-ம் தேதி என்னுடைய வருங்கால மனைவியும் நானும் கோவையில் தங்கியிருந்தோம். அப்போது அங்கு வந்த போலீஸார் என்னை மிரட்டினர். அதனால் அவர்களுடன் நானும் என் வருங்கால மனைவியும் காரில் சென்னை வந்தோம். சென்னையை அடுத்த செங்குன்றத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் என்னை ஒரு அறையிலும் என் வருங்கால மனைவியை இன்னொரு அறையிலும் அடைத்து வைத்தனர்.

3.10.2019-ல் என் அம்மா, தம்பி ஆகியோரையும் அங்கு அழைத்து வந்தனர். அப்போது உதவி கமிஷனர் ஒருவர் அங்கு வந்தார். அவர், என்னிடம் `வெங்கடேஷ் உனக்கு 7.5 கோடி ரூபாய் தந்துள்ளார். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நீ என்ன செய்தாய் என்று கேட்டார்.' அதற்கு நான் பதிலளித்துக் கொண்டிருந்தபோது எஸ்.ஐ ஒருவர் என்னை ஓங்கி அடித்தார். பிறகு என்னை நாற்காலியில் கட்டிப்போட்டனர். உதவி கமிஷனர், என் கன்னத்தில் மாறி மாறி அறைந்தார். என்னால் வலி தாங்க முடியவில்லை.

அப்போது உதவி கமிஷனர், `உன் வருங்கால மனைவியை ஆந்திராவைச் சேர்ந்த கூலிப்படையினர் பாலியல் வன்கொடுமை செய்து விட்டு அவளையும், உன்ன் அம்மா தம்பியையும் கொலை செய்து புதைத்து விடுவார்கள். உன் மீது கஞ்சா கேஸ் போட்டு சிறையில் தள்ளிவிடுவோம்' என்று மிரட்டினார். இதையடுத்து வீட்டுக்குச் சென்று என் பெயரிலிருந்த சொத்தின் அசல் ஆவணங்களை போலீஸாரும் கூலிப்படையினரும் எடுத்து வந்தனர். 5 நாட்கள் எங்களை அங்கு அடைத்து வைத்திருந்தனர். ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே சாப்பாடு கொடுத்து கொடுமைப்படுத்தினார்கள். கூலிப்படையினரும் போலீஸாரும் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததால் அவர்கள் கட்டளைக்கு நான் ஒப்புக்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன்.

அதன்பிறகு என்னை மட்டும் அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று 6.10.2019-ல் ஒருவரின் பெயருக்கு சொத்தை பதிவு செய்து கொண்டார்கள். அதன்பிறகு திருவள்ளூர் பத்திரப் பதிவு அலுவலகத்துக்குச் சென்று செவ்வாய்ப் பேட்டையில் உள்ள சொத்தையும் எழுதி வாங்கிக் கொண்டார்கள்.

காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடனாக நான் கொடுத்த 1.25 கோடி ரூபாய் பணம் தொடர்பாக உதவி கமிஷனர் விசாரித்தார். அதன்பிறகு ஸ்டாம்ப் பேப்பர் மற்றும் பாண்ட் பேப்பர்கள் மற்றும் போலி ஆவணங்களை தயாரித்து எங்களிடம் கையெழுத்தி வாங்கிக் கொண்டார்கள். பின்னர் நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம் என்று மிரட்டிவிட்டு என்னை விட்டுவிட்டனர்.

டிஜிபி அலுவலகம்
டிஜிபி அலுவலகம்

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள், மற்றும் போலீஸார், சொத்தை எழுதி வாங்கியவர்கள், கூலிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் என்னுடைய சொத்தை மீட்டு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தப் புகார் மனுவை விசாரிக்கும்படி டி.ஜி.பி திரிபாதி, சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீஸார் அளித்த தகவல்களை சி.பி.சி..ஐடி போலீஸார் பதிவு செய்திருக்கின்றனர். அந்த தகவல் அடிப்படையில் அப்போது பணியிலிருந்த உயரதிகாரிகளிடம் விசாரணை நடத்தி அந்த அறிக்கையை டி.ஜி.பி-யிடம் ஒப்படைக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்துள்ளனர். உயிர்பயத்தில் புகார் கொடுத்தவர் குடும்பத்தோடு தலைமறைவாக இருந்துவருவதாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு