Published:Updated:

`பூஜையில் நடந்த தவறால் இறந்துவிட்டார்’ -ரூ.7 லட்சம் கேட்டு சென்னை ஜோதிடரைக் கடத்திய கும்பல்

ஜோதிடர் கோபிநாதன்
ஜோதிடர் கோபிநாதன்

சென்னையில், ஜோதிடர் கோபிநாதனைக் கடத்திய கும்பல், 7 லட்ச ரூபாய் கேட்டு அவரின் குடும்பத்தினரை மிரட்டியுள்ளது.

சென்னை அம்பத்தூர் பானுநகர், 22-வது அவென்யூ குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாதன். இவரின் மனைவி ஷோபனா (51). அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, `நான் மேற்கண்ட முகவரியில் எனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் 5 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். எனது கணவர் வெங்கடாபுரம், மௌனசாமி மடம் தெருவில் `டிகேஜி பணிக்கர்' என்ற பெயரில் அலுவலகம் வைத்து ஜோதிடம் பார்த்துவருகிறார்.

ஜோதிடம்
ஜோதிடம்
மாதிரி படம்

மேலும், ஜாதகம் பார்ப்பது மற்றும் பூஜை செய்யும் வேலைகளையும் செய்துவந்தார். எனக்கு மூன்று மகள்கள். இருவருக்குத் திருமணமாகி கேரளாவில் வசித்துவருகின்றனர். எனது கடைசி மகள் என்னுடன் வசித்துவருகிறாள். எங்களது சொந்த ஊர் கேரள மாநிலம் மலப்புரம் ஆகும். எனது கணவர் தினமும் காலை 10.30 மணிக்கு ஆபீஸுக்கு சென்றுவிட்டு, மதியம் 2.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவார்.

`பூஜைக்குச் செல்கிறேன்!’

16.6.2020 அன்று காலை, வழக்கம்போல அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். மதியம் சுமார் 12.45 மணிக்கு தொலைபேசியில் என்னிடம் பேசினார். அப்போது அவர், போரூருக்கு பூஜை செய்வதற்காக காரில் செல்வதாகவும், அங்கு சென்று போன் செய்கிறேன் என்றும் கூறினார். கணவரிடமிருந்து எந்த போனும் வராததால், நான் மதியம் 2.30 மணிக்கு போன் செய்தபோது யாரோ ஒரு நபர் போனை எடுத்து, எனது கணவர் பூஜையில் இருப்பதாகக் கூறினார். மீண்டும் நான் 5.30 மணிக்கு கணவருக்கு போன் செய்தபோதும் கணவர் பூஜையில் இருப்பதாகக் கூறினார்.

56 பக்க மாந்திரீகக் கையேடு; ஃபோர்டு கார்!-புதுக்கோட்டை போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் மந்திரவாதி

மாலை 6 மணியளவில் நானும் எனது மகளும் வீட்டில் இருக்கும்போது, 2 பேர் வந்தார்கள். அவர்கள் எங்களிடம், `உங்கள் கணவர் கோபிநாதனை நாங்கள்தான் மதியம் ஆபீஸிலிருந்து அழைத்துச் சென்றோம். உங்கள் கணவர் தவறு செய்துவிட்டார். அவர் பூஜை செய்ததால் ஒருவர் இறந்துவிட்டார். அதனால் நாங்கள்தான் உங்கள் கணவரை எங்கள் கஸ்டடியில் வைத்திருக்கிறோம். இதைப் பற்றி நீங்கள் வெளியில் யாருக்கும் சொல்லக்கூடாது. பிறகு, நாங்கள் போன் செய்கிறோம்' என்று கூறிச் சென்றார்கள். மீண்டும், இரவு சுமார் 8.30 மணிக்கு கணவர் போனில் பேசிய நபர், உங்கள் கணவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 லட்சம் ரூபாயும் எங்களுக்கு 2 லட்சம் ரூபாயையும் ரெடி பண்ணி நாளை காலை 8.30 மணிக்குள் தர வேண்டும்.

கடத்தப்பட்ட கணவர்!

நீங்கள் பணத்தை தந்தால் நாங்களே உனது கணவரை வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுவிடுவோம்' எனக் கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார்கள். பணத்திற்காக யாரோ சிலர் எனது கணவரை கடத்திச் சென்றுள்ளார்கள். எனவே, எனது கணவரை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சையது முபாரக் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். இந்தத் தகவல் துணை கமிஷனர் ஈஸ்வரனுக்குத் தெரிந்ததும், அம்பத்தூர் உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் ஜோதிடர் கோபிநாதனின் மகள், மனைவி ஆகியோர் மூலம் கடத்தல் கும்பலைப் பிடிக்க வியூகம் அமைத்தனர்.

Vikatan

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``ஜோதிடர் கோபிநாதனைக் கடத்திய தகவல் எங்களுக்கு தெரிந்ததும் அவரைப் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்தோம். ஜோதிடரின் மனைவி ஷோபனா, அவரின் மகள் ஆகியோரிடம் விசாரித்தபோது, வீட்டுக்கு வந்த 2 பேர், தங்களை போலீஸ் எனக்கூறிய தகவல் தெரியவந்தது. உடனே ஜோதிடரின் மகள் மூலம் கடத்தல் கும்பலைப் பிடிக்க திட்டமிட்டோம். நாங்கள் கூறியதுபோல ஜோதிடரின் மகளும் கடத்தல் கும்பலிடம் போனில் பேசினார். அப்போது, செல்போன் சிக்னல் மூலம் கடத்தல் கும்பல் வானகரம் ராஜீவ் நகர் பகுதியில் இருப்பதைக் கண்டறிந்தோம்.

ஜோதிடரின் மகள்

இதையடுத்து தனிப்படை போலீஸார் ஜோதிடரின் மகள், மனைவியை அழைத்துக்கொண்டு வானகரத்துக்குச் சென்றனர். கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஜோதிடரின் செல்போனிலிருந்தே பேசிக் கொண்டிருந்தனர். கடத்தல் கும்பலிடம் ஜோதிடரின் மகள், `நீங்கள் கேட்ட பணத்தை ரெடி பண்ணிவிட்டேன். எங்கு கொண்டு வர வேண்டும்' என்று கேட்டார். அப்போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், `போலீஸாருக்கு தகவல் கொடுத்தால் உங்க அப்பாவை யாரும் காப்பாற்ற முடியாது. பூஜையால் இறந்த நபரின் குடும்பத்தினர் கொடுத்த புகாரால் கைது செய்யப்பட்டு ஜெயிலுக்கு செல்வது உறுதி' என மிரட்டினர்.

கோபிநாதன்
கோபிநாதன்

அதற்கு ஜோதிடரின் மகள், `நீங்களே போலீஸ் என்பதால் நாங்கள் ஏன் காவல் நிலையத்துக்கு செல்ல வேண்டும்?' என்று கூறினார். இந்தச் சமயத்தில் போலீஸ் வாக்கி டாக்கி சத்தமும் அங்கு கேட்டது. அதனால், ஜோதிடரைக் கடத்தியது யாரென்று கண்டறிய ரகசியமாக செல்போன் சிக்னல் மற்றும் கடத்தல் கும்பல் குறித்து விசாரித்தோம். இந்தச் சமயத்தில் திடீரென கடத்தல் கும்பல் பயன்படுத்திய ஜோதிடரின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. அதனால், செல்போன் சிக்னல் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து சென்றோம்.

விடுவிக்கப்பட்ட ஜோதிடர்

இந்தச் சமயத்தில் ஜோதிடர் கோபிநாதன், அவரின் மனைவி மகளிடம் பேசினார்.` என்னை அந்தக் கும்பல் விட்டுவிட்டார்கள். நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்' என்று தெரிவித்தார். அதைக்கேட்டதும் அவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் ஜோதிடர் கோபிநாதனிடம் விசாரித்தபோது, 2 பேர் தன்னை டூவிலரில் அழைத்துச் சென்று கடத்தி பணம் கேட்டு மிரட்டிய தகவலைத் தெரிவித்தார்.

முதலிரவில் கொல்லப்பட்ட மணமகள்! - திருவள்ளூர் மணமகனின் அதிர்ச்சிப் பின்னணி

ஜோதிடர் மற்றும் அவரின் குடும்பத்தினர் அளித்த தகவலின்படி கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களைத் தேடிவருகிறோம். அந்தக் கும்பல் குறித்த ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அதனால் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்றார்.

ஜோதிடர் கோபிநாதன் கடத்தப்பட்ட சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு