Published:Updated:

சென்னை: மயக்க மருந்து ஸ்பிரே; டிக் டாக் பேண்ட்! - சிறுமி விவகாரத்தில் சிக்கிய ஆட்டோ டிரைவர்

ஆட்டோ டிரைவர் ஹரிபாபு
ஆட்டோ டிரைவர் ஹரிபாபு

தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவரிடமிருந்து தப்பியது எப்படி என்று போலீஸாரிடம் நடந்ததை முழுமையாக விவரித்துள்ளார் சென்னைச் சிறுமி.

வடசென்னையைச் சேர்ந்த சிறுமி, தனியாகக் கடைக்கு நடந்து சென்றார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்த ஹரிபாபு (24), சிறுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் பிளேயிங் ஸ்கூல் எங்கு இருக்கிறது என்று சிறுமியிடம் விசாரித்துள்ளார். அதற்கு சிறுமி, தெரியவில்லை அங்கிள் என்று கூறியுள்ளார். அப்போது தெருவில் ஆள்நடமாட்டம் இல்லை. அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட டிரைவர் ஹரிபாபு, சிறுமியின் கைகளைப் பிடித்து இழுத்துள்ளார்.

ஆட்டோ
ஆட்டோ

அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். சிறுமி சத்தம் போடாமலிருக்க அவரின் வாயிலேயே ஆட்டோ டிரைவர் குத்தியுள்ளார். வலி தாங்க முடியாத சிறுமி இன்னும் அதிகமாக சத்தம் போட்டுள்ளார். அதன்பிறகுதான் ஆட்டோ டிரைவரின் கையைக் கடித்துவிட்டு சிறுமி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் சிறுமியின் அம்மா புகார் கொடுத்துள்ளார். சிறுமியின் அம்மாவிடமும் விசாரித்த போலீஸார் கடத்தல் வழக்கு என்றே பதிவு செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்பிறகு சிறுமியிடம் எம்.கே.பி.நகர் உதவி கமிஷனர் பொறுப்பு கோ.அரிக்குமார் விசாரித்தபோதுதான் இது கடத்தல் வழக்கு இல்லை, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற வழக்கு எனத் தெரியவந்தது.

இதையடுத்து உதவி கமிஷனர் கோ.அரிக்குமார், துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு தகவல் தெரிவித்தார். அடுத்து இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் அருண், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் என அடுத்தடுத்து தகவல் பகிரப்பட்டுள்ளது. வழக்கின் தன்மையை உணர்ந்த கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உடனடியாக ஆட்டோ டிரைவரைப் பிடித்து போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு செம்பியம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திவ்யகுமாரி வசம் ஒப்படைப்பட்டது.

சிசிடிவியில் சிக்கிய ஆட்டோ
சிசிடிவியில் சிக்கிய ஆட்டோ

உதவி கமிஷனர் கோ.அரிக்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் வேலுமணி, திவ்யகுமாரி மற்றும் போலீஸார் உடனடியாகக் களமிறக்கப்பட்டனர். சம்பவம் நடந்த இடத்துக்கு ஒரு போலீஸ் டீம் சென்று விசாரித்தது. மகளிர் போலீஸார் சிறுமியின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள ஜெராக்ஸ் கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் ஆட்டோ ஒன்று வரும் காட்சி பதிவாகியிருந்தது. அந்த ஆட்டோவின் நம்பர் அடிப்படையில் விசாரித்தபோது டிரைவர் ஹரிபாபுவின் சகோதரி வீட்டின் முகவரி தெரிந்தது. அங்கு சென்று எதையும் கூறாமல் போலீஸார் விசாரித்தனர். அப்போது, பெரம்பூர் ரயில் நிலைய பகுதியில் ஹரிபாபு ஆட்டோ ஓட்டும் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.

ஆட்டோ டிரைவர் ஹரிபாபுவைப் பிடிக்க உதவி கமிஷனர் அரிக்குமார், இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோர் பெரம்பூர் ரயில் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு நின்றுகொண்டிருந்த ஹரிபாபு, `நான் எந்தச் சிறுமியிடமும் தவறாக நடக்கவில்லை. காலை முதல் சவாரி இல்லாமல் இங்குதான் நிற்கிறேன்' என்று கூறினார். உடனே போலீஸார் தங்களுடைய செல்போனில் ஹரிபாபுவின் புகைப்படத்தை எடுத்து சிறுமியின் அம்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தனர். அதைச் சிறுமியிடம் காண்பித்தபோது ஹெல்மெட் அணிந்திருந்ததால் டிரைவரின் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை. மேலும், என்னிடம் தவறாக நடக்க முயன்றபோது கறுப்பு நிற சட்டை அணிந்திருந்தார். ஆனால், தற்போது வெள்ளை நிற சட்டை அணிந்துள்ளார் என்று கூறியுள்ளார் சிறுமி.

ஹரிபாபுவிடம் விசாரணை நடத்தும் உதவி கமிஷனர் அரிக்குமார்
ஹரிபாபுவிடம் விசாரணை நடத்தும் உதவி கமிஷனர் அரிக்குமார்

சிறுமியின் பதிலைக் கேட்ட போலீஸாரும் ஹரிபாபுவை விட்டுவிட முடிவு செய்தனர். இந்தச் சமயத்தில் படத்தை உற்றுநோக்கிய சிறுமி, போலீஸாரிடம் அங்கிள், இவன்தான் என்னிடம் தவறாக நடக்க முயன்றான். காலையில் வரும்போது கறுப்பு நிற பேண்ட்டுதான் அணிந்திருந்தான். அதில் டிக்டாக் என்று எழுதியிருந்தது என்று அடையாளத்தைக் கூறினார். இதையடுத்து ஹரிபாபுவை போலீஸார் பிடித்தனர். அப்போது அவர் ஆட்டோவில் தப்பி ஓட முயன்றார். அதனால் போலீஸார் தங்களின் வாகனத்தைக் கொண்டு ஆட்டோவை வழிமறித்து ஹரிபாபுவை செம்பியம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா, உதவி கமிஷனர் அரிக்குமார் ஆகியோர் ஹரிபாபுவிடம் விசாரித்தபோது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். விசாரணையில் ஹரிபாபு குறித்து முக்கிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் அதிகாரி ஒருவர், ``ஹரிபாபுவின் சொந்த ஊர் வந்தவாசி. டிப்ளோமா எலக்ட்ரிக் இன்ஜினீயரிங் படித்துக்கொண்டிருந்த ஹரிபாபு, அங்கு நடந்த சில கசப்பான சம்பவத்துக்குப் பிறகு படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். ஹரிபாபுவின் சகோதரி வீடு சென்னையில் உள்ளது. அங்கு வந்து தங்கியவர், வேலை எதுவும் செய்யாமல் ஊரைச் சுற்றி வந்துள்ளார்.

துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா
துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா

அதைப்பார்த்த ஹரிபாவுவின் சகோதரிதான் ஆட்டோ ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். ஆட்டோ ஓட்டி வந்த ஹரிபாபுவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அதனால் பெரம்பூர் ரயில் நிலைய ஸ்டாண்டில் இருந்தபடியே அவ்வழியாகச் செல்லும் பெண்களுக்கு காதல் வலை வீசிவந்துள்ளார். ஆனால், அவரின் காதல் வலையில் யாரும் விழவில்லை. மேலும் ஆட்டோவில் தனியாக இளம்பெண்கள் ஏறினால் ஹரிபாபு, ஆட்டோ ஓட்டும் ஸ்டைலே தனியாக இருந்துள்ளது. இப்படி வாழ்ந்து வந்த ஹரிபாபுவின் கண்ணில் தனியாக வடசென்னை சிறுமி சிக்கியுள்ளார்.

அவரைப் பார்த்ததும் சிறுமியிடம் தவறாக நடக்க திட்டமிட்ட ஹரிபாபு, வலுக்கட்டாயமாக சிறுமியை ஆட்டோவில் ஏற்ற முயன்றுள்ளார். அதற்காக மயக்க மருந்து ஸ்பிரேயையும் பயன்படுத்தியுள்ளார். ஆனால், ஹரிபாபுவிடமிருந்து சிறுமி தப்பிவிட்டாள்" என்றார்.

என்ன நடந்தது என்பதை போலீஸாரிடம் சிறுமி விவரித்துள்ளார். அதில் ``காலையில் 7 மணியளவில் மாவு வாங்க கடைக்குச் சென்றேன். அப்போது உடைத்த கடலை வாங்க மறந்துவிட்டேன். அதனால் வீட்டிலிருந்து மீண்டும் கடைக்குச் சென்றுகொண்டிருந்தேன். அப்போதுதான் ஆட்டோ டிரைவர் அங்கிள் என்னிடம் ஒரு முகவரியை விசாரித்தார். நான் தெரியவில்லை என்றதும் அவர் என் கையைப்பிடித்து இழுத்தார். உடனே நான், எதற்கு இப்படிப் பண்ணுகிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர், சத்தம் போடாதே என்று கூறியபடி என்னை ஆட்டோவுக்குள் ஏற்ற முயற்சி செய்தார்.

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்
சென்னை: தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவர்! - சிறுமியின் வீரத்தைப் பாராட்டிய முதல்வர்

உடனே நான் கைகளைத் தட்டிவிட்டு தப்பிக்க முயன்றேன். அப்போது என் தலைமுடியை அவர் பிடித்துக்கொண்டார். அதனால் என்னால் தப்பிக்க முடியவில்லை. திடீரென சட்டை பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்து என் முகத்தில் தெளித்தார். நான் சுதாரித்துக்கொண்டேன். அது, என்னுடைய துப்பட்டாவில் விழுந்தது. தண்ணீர் போல இருந்தது. பின்னர்தான் நான் கையைக் கடித்துவிட்டு தப்பினேன். அப்போது, உன்னை நான் விடமாட்டேன் என்று கூறியபடி ஆட்டோ டிரைவர் என்னை துரத்தினார். நான் வேகமாக ஓடிவந்து அம்மாவிடமும் அத்தையிடமும் மட்டும் கூறினேன்" என்றார்.

சிறுமியின் துணிச்சலைப் பாராட்டி அவருக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பணப் பரிசு கொடுத்துள்ளார். மேலும், இந்த வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவல்துறையினருக்கு முதல்வர் விருது வழங்க பரிசீலிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இந்தத் தகவலைப் பெருமையாக ஈரோட்டில் குறிப்பிட்டு கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு