Published:Updated:

சென்னை: தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவர்! - சிறுமியின் வீரத்தைப் பாராட்டிய முதல்வர்

ஆட்டோ டிரைவர் ஹரிபாபு
ஆட்டோ டிரைவர் ஹரிபாபு

சென்னையில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவரின் கையைக் கடித்துவிட்டுத் தப்பிய சிறுமியின் வீரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.

வடசென்னையைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமி, 14-ம் தேதி 8 மணியளவில் தனியாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக ஆட்டோ ஒன்று வந்தது. அந்த ஆட்டோ டிரைவர், தனியாக சிறுமி வருவதைக் கவனித்தார். உடனே சிறுமியின் அருகே ஆட்டோவை ஓட்டிச் சென்ற டிரைவர், சிறுமியிடம் பேச்சுக் கொடுத்தார். அப்போது சிறுமியின் துப்பட்டாவில் ஏதோ ஒன்றைத் தடவினார். பின்னர் அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்ற முயன்றிருக்கிறார்.

`தங்கக் கடத்தல்' ஸ்வப்னாவுடன் பேசத் தனி பிளாட்! - அதிர்ச்சி கொடுத்த 9 மணிநேர விசாரணை

அதனால் சிறுமி, `ஹெல்ப், ஹெல்ப்' என்று சத்தம் போட்டார். ஆனால், சிறுமியின் குரல் யாருக்கும் கேட்கவில்லை. அடுத்து, ஆட்டோ டிரைவரிடமிருந்து தப்பிக்க முடிவெடுத்த சிறுமி, தன்னைப் பிடித்திருந்த ஆட்டோ டிரைவரின் கையைப் பிடித்துக் கடித்தார். இதனால், வலிதாங்க முடியாத டிரைவர், கையை எடுத்தார். டிரைவரின் பிடியிலிருந்து தப்பித்து ஓடினார் அந்தச் சிறுமி.

பின்னர், வீட்டுக்குச் சென்ற சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் நடந்த விவரத்தை அதிர்ச்சியோடு கூறினார். அதைக்கேட்டு சிறுமியின் அம்மா, தன்னுடைய மகளின் செயலுக்கு பாராட்டைத் தெரிவித்ததோடு சம்பந்தப்பட்ட டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் திவ்யகுமாரி, சிறுமியிடம் விசாரித்தார். அப்போது, இப்படித்தான் புத்திச்சாலித்தனமாகவும் வீரமாகவும் இருக்க வேண்டும் எனச் சிறுமியை இன்ஸ்பெக்டர் பாராட்டினார். பின்னர், இந்தத் தகவலை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் ஜெயலட்சுமியிடம் தெரிவித்தார் இன்ஸ்பெக்டர்.

துணை கமிஷனர் ஜெயலட்சுமி
துணை கமிஷனர் ஜெயலட்சுமி

உடனடியாகத் துணை கமிஷனர் ஜெயலட்சுமியும் சிறுமியைப் பாராட்டினார். அதோடு சிறுமியைக் கடத்த முயன்றதோடு அவரிடம் அநாகரிகமாக நடக்க முயன்ற ஆட்டோ டிரைவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். இதுகுறித்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கும் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோ பதிவு நம்பர் அடிப்படையில் விசாரணை நடத்தி சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றது திருவிக நகரைச் சேர்ந்த ஹரிபாபு (24) எனத் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸார் ஹரிபாபுவைப் பிடித்து விசாரித்தனர். அவரும் உண்மையை ஒப்புக்கொண்டார். அதனால் ஹரிபாபு மீது 341, 323, 364, 511 ஆகிய சட்டங்களின் கீழும், போக்ஸோ சட்டத்தின் கீழும் போலீஸார் வழக்கு பதிந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹரிபாபுவை போலீஸார் சிறையில் அடைத்தனர். இந்தத் தகவல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்ததும் சிறுமியை நேரில் அழைத்து பாராட்டும்படி போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்கு உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
சென்னை:`கவலைப்படாதீங்க, நாங்க இருக்கோம்'- சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய இன்ஸ்பெக்டர், காவலர்

இதையடுத்து சிறுமியைச் சந்தித்த கமிஷனரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை ஈரோட்டில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டியதோடு, அந்தச் சிறுமிக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு