Published:Updated:

ராஜஸ்தான் கம்பெனி; 20 பட்டம் ரூ.1,400 - போலீஸில் சிக்கிய பட்டதாரியின் சோகக் கதை

பறிமுதல் செய்யப்பட்ட காற்றாடிகள்
பறிமுதல் செய்யப்பட்ட காற்றாடிகள்

ஆன்லைனில் காற்றாடிகளையும் மாஞ்சாநூலையும் மொத்தமாக வாங்கி ஆவடி பகுதியில் விற்றுவந்த பட்டதாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு பலரது வாழ்க்கையைப் புரட்டிபோட்டுள்ளது. வாழ்வாதாரத்தை பலர் இழந்துள்ளனர். தனியார் இன்ஜினீயரிங் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்த ஒருவர், முறுக்கு சுட்டு விற்றுவருகிறார். இன்னும் சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு போலீஸாரிடம் சிக்கி சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

சென்னையை அடுத்த ஆவடியில் பட்டதாரியான ஒருவர் மாஞ்சா நூல், காற்றாடிகளை விற்ற குற்றத்துக்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காற்றாடிகளை விற்ற அன்பரசு
காற்றாடிகளை விற்ற அன்பரசு

சென்னை ஆவடி காமராஜர் நகர், புதுநகரைச் சேர்ந்தவர் அன்பரசு (42). இவர், சென்னை மாநிலக்கல்லூரியில் புள்ளியியல் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார். ஆனால், படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் கிடைத்த வேலைகளை அவர் செய்து வந்தார். ஊரடங்கு காரணமாக அந்த வேலையும் பறிபோனது. அதனால், குடும்பத்தைக் காப்பாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் அன்பரசு திகைத்தார்.

என்ன வேலை செய்யலாம் என செல்போனில் தேடிக் கொண்டிருந்தபோது அன்பரசுவின் கண்ணில் சில வீடியோக்கள் சிக்கின. ஊரடங்கு நேரத்தில் பொழுதைப் போக்க பலர் கேரம் போர்டு, செஸ், காற்றாடி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடும் வீடியோக்களைப் பார்த்த அன்பரசு, ஏன் நாமும் காற்றாடிகளை விற்கக்கூடாது என்று யோசித்துள்ளார்

பின்னர், காற்றாடிகளை எங்கு வாங்கலாம் என இணையதளத்தில் தேடியுள்ளார். அப்போது ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் முகவரியில் காற்றாடிகள் இங்கு விற்கப்படும் என்ற விளம்பரத்தை அன்பரசு பார்த்துள்ளார். உடனே அந்த இணையதளத்துக்குள் சென்றபோது காற்றாடிகளின் விலை, மாஞ்சா நூல் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து பணம் செலுத்தினால் கூரியர் மூலம் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. உடனே அன்பரசு, காற்றாடிகளை வாங்கி விற்க முடிவு செய்து தனக்குத் தேவையான காற்றாடிகளை ஆன்லைனில் ஆர்டர் செய்திருக்கிறார்.

உயர் அதிகாரியின் அழைப்பு: உயிரிழந்த பி.டி.ஓ? - கொரோனா அதிர்ச்சியில் திருவள்ளூர் தி.மு.க
காற்றாடிகள்
காற்றாடிகள்

ஆர்டர் செய்த காற்றாடிகள் அன்பரசுவின் வீட்டுக்கு ஜெய்ப்பூரிலிருந்து வந்து சேர்ந்தன. அதைத் தனக்கு தெரிந்தவர்களிடம் விற்கத் தொடங்கினார். ஒரு காற்றாடிக்கு 50 ரூபாய் லாபம் என்று வைத்து அன்பரசு விற்றார். காற்றாடிகளை ஏராளமானவர்கள் போட்டிபோட்டு வாங்கினர். அதனால் ஆர்டர் செய்த காற்றாடிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. அதனால், மறுபடியும் காற்றாடிகளை ஆர்டர் செய்து விற்று வந்தார்.

சென்னையில் மாஞ்சா நூல் மூலம் காற்றாடிகளைப் பறக்கவிட தடைஉள்ளது. ஆனால் அந்தத் தடை உத்தரவு காற்றில் பறந்தநிலையில், ஆவடி சுற்றுவட்டார பகுதியில் காற்றாடிகள் அதிகளவில் பறக்கத் தொடங்கின. இதுகுறித்த புகார்கள் காவல் நிலையத்தில் குவிந்தன. உடனடியாக உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் காளிராஜ் தலைமையிலான போலீஸ் டீம் காற்றாடிகள் பறந்த இடங்களுக்குச் சென்று விசாரித்தது. காற்றாடிகளைப் பறக்க விட்டவர்களிடம் விசாரித்தபோது அன்பரசுவிடமிருந்து வாங்கிய தகவல் போலீஸாருக்கு தெரியவந்தது.

அன்பரசு
அன்பரசு

இதையடுத்து, அன்பரசு வீட்டுக்குச் சென்ற போலீஸார் விசாரித்தபோது அவர் காற்றாடிகளை விற்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்த போலீஸார், வீட்டிலிருந்த காற்றாடிகள், மாஞ்சா நூல்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அன்பரசுவிடம் விசாரித்தபோது அவர் கூறிய தகவல் அடிப்படையில் அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து ஆவடி போலீஸார் கூறுகையில், ``மாஞ்சா நூலைப் பயன்படுத்தி காற்றாடிகளைப் பறக்க விட தடை உத்தரவு அமலில் இருக்கும்போது அதை மீறி ஆவடி பகுதியில் காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன. ஏற்கெனவே மாஞ்சா நூல்களால் உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. ஆவடியில் அப்படியொரு அசம்பாவித சம்பவம் நடப்பதற்கு முன், அன்பரசு மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

போலீஸ் டீம்
போலீஸ் டீம்
`திடீரென கத்தினான்; வண்டியை நிறுத்துவதற்குள்..!'- மாஞ்சா நூலால் உயிரிழந்த குழந்தையின் தந்தை கதறல்

இவர் இணையதளத்தில் காற்றாடிகள், மாஞ்சா நூலை வாங்கியுள்ளார். அந்த குறிப்பிட்ட இணையதள முகவரியில் பட்டங்கள், மாஞ்சா நூல் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளார். 20 காற்றாடிகள் 1,400 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. மாஞ்சா நூல்கண்டுகள் 1,199 ரூபாய் முதல் 2,499 ரூபாய் வரை விற்கபட்டுள்ளது. அன்பரசு ஒரு காற்றாடியை 100 ரூபாய்க்கு விற்றுவந்துள்ளார். இவரிடமிருந்து 40,000 ரூபாய் மதிப்பிலான 110 பட்டங்கள், மாஞ்சா நூல்கண்டுகளைப் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு