`சாகும்வரை சிறையிலேயே இருக்க வேண்டும்!' -அயனாவரம் சிறுமி வழக்கில் யார் யாருக்கு என்ன தண்டனை?

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 15 குற்றவாளிகளில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டுகள் தண்டனையும், மீதமுள்ளவர்களுக்கு 5 ஆண்டுகள் தண்டனையும் வழங்கியுள்ளார், நீதிபதி மஞ்சுளா.
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில், ரவிகுமார் ( 56) , சுரேஷ் (32), ராஜசேகர் (48), எரால்பிராஸ் (58), அபிஷேக் ( 28), சுகுமாரன் (60) , முருகேசன் (54), பரமசிவம் (60), ஜெய்கணேஷ் (23), பாபு(36) (இறந்துவிட்டார்), பழனி(40), தீனதயாளன் (50), ராஜா (32), சூர்யா(23), குணசேகரன் (55) , ஜெயராமன்(26) , உமாபதி (42) ஆகியோரை அயனாவரம் மகளிர் போலீஸார் கைதுசெய்தனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டது. `குற்றம் சுமத்தப்பட்ட 17 பேரில் 10-வது நபர் பாபு, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். அதனால் 16 பேரில் 15-வது நபரான தோட்டக்காரர் குணசேகரன், இந்த வழக்கில் விடுதலை செய்யப்படுகிறார். மீதமுள்ள 15 பேரும் குற்றவாளிகள்' என நீதிபதி மஞ்சுளா கடந்த 1-ம் தேதி தெரிவித்தார். அதன்படி, இவர்களுக்கான தண்டனை விவரத்தை இன்று பிற்பகலில் அறிவித்தார்.

இந்த வழக்கின் முதல் குற்றவாளி ரவிக்குமார் (56), 2-வது குற்றவாளி சுரேஷ் (32), 5-வது குற்றவாளி அபிஷேக் (28), 11-வது குற்றவாளி பழனி (40) ஆகிய 4 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. (இவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தண்டனையின்படி, அரசின் சலுகைகளைப் பெற முடியாது. சாகும்வரை சிறையிலேயேதான் இருக்க வேண்டும்).
3-வது குற்றவாளியான ராஜசேகருக்கு (48) ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. (இவர், தண்டனைக் காலம் முடிந்தபிறகு மாநில அரசின் சலுகைகளைப் பெற விண்ணப்பிக்க முடியும். நன்னடத்தை அடிப்படையில் ராஜசேகர் விடுதலையாக வாய்ப்புள்ளது). மீதமுள்ள குற்றவாளிகளில் 4-வது குற்றவாளியான ஏரால்பிராஸுக்கு 7 ஆண்டுகளும் மற்றவர்களுக்கு 5 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கின் சிறப்பு அரசு வழக்கறிஞர் ரமேஷ் அளித்த பேட்டியில், ``அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், தண்டனை விவரங்களை போக்ஸோ நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதி இருக்கையில் அமர்ந்த உடனேயே, இந்த வழக்கில் ஏற்கெனவே சொன்னபடி மரண தண்டனை விதிக்கத்தக்க குற்றங்களைப் புரிந்திருக்கிறீர்கள். இருந்தாலும் சூழலைக் கருத்தில்கொண்டு, அவர்கள் (குற்றவாளிகள்) கேட்டுக் கொண்டதற்கு ஏற்ப குறைந்தபட்ச தண்டனை வழங்குவதாக அறிவித்தார்.
அவர் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியதும், முதல் குற்றவாளி ரவிக்குமாருக்கு 2 பிரிவுகளின்கீழ் இரட்டை ஆயுள் தண்டனையும் மற்ற பிரிவுகளுக்கு 5 ஆண்டுகள், 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கினார். வாழ்நாள் முழுவதும் சிறை என்ற அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2-வது, 4-வது மற்றும் 11-வது குற்றவாளிகளுக்கும் வாழ்நாள் சிறை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில், மொத்தம் 5 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 4-வது குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றவர்களுக்கு மிகக் குறைந்தப்பட்ட தண்டனையான 5 ஆண்டுகளும் வழங்கப்பட்டன" என்றார்.
இதையடுத்து, அரசு வழக்கறிஞர் ரமேஷிடம் சில கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தால் என்னவாகும்?
``இருக்கின்ற சாட்சிகளின் அடிப்படையில், இந்த வழக்கில் அதிகபட்ச தண்டனையை வழங்கியிருக்கலாம் என்பதுதான் அரசுத் தரப்பின் கருத்து. உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என எந்த நீதிமன்றத்துக்குச் சென்று, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்தாலும், சாட்சிகள் அடிப்படையில் அரசுத் தரப்பு மிகச் சரியாக வழக்கை நிரூபித்துள்ளதால், தண்டனை மாறுவதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை."
வழக்குக்கு இடையூறு ஏற்படுத்த 50, 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையும் மீறி போக்ஸோ நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.அரசு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ்
இந்த வழக்கில், விசாரணை முழுமையாக நடத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?
``சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் விசாரணை முழுமையாக நடத்தப்படவில்லை என்பன போன்ற இடையூறுகள், மனுக்கள், நீதிமன்றத்தில் ஆரம்பத்திலேயே தாக்கல் செய்யப்பட்டன. அது சம்பந்தமாக நீதிமன்றம் பல்வேறு முடிவுகளை எடுத்துள்ளது. இந்த வழக்கை ஒரு வருடத்துக்குள் இந்த அரசு நடத்திமுடித்துள்ளது என்றால், கடந்துவந்த இடையூறுகள் ஏராளம். அது, வெளியில் வரவில்லை. வழக்குக்கு இடையூறு ஏற்படுத்த 50, 60 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையும் மீறி போக்ஸோ நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் முக்கியமான சாட்சியாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் சாட்சியோடு சேர்த்து அரசுத் தரப்பு தாக்கல் செய்திருந்தது மருத்துவ சாட்சிகளைத்தான். அரசு மருத்துவமனை துறைத் தலைவர்கள், மருத்துவர்கள், நிபுணர்கள் என ஒரு டீம், சிறுமியைப் பரிசோதித்தது. நீதிமன்றத்தில் 5 மருத்துவர்கள் சாட்சி அளித்தனர். மருத்துவ சோதனை முடிவுகள் அரசுக்கு சாதகமாக அமைந்தன. உரிய சாட்சிகளை பரிசீலித்துதான் இந்தத் தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார். எனவே, இந்த வழக்கு அரசுக்கு தோல்வியல்ல" என்றார்.