Published:Updated:

சென்னை: `இரவு, பகல் என மாறி மாறி வேலை' - திருமணமான ஓராண்டுக்குள் வங்கி மேலாளர் தற்கொலை

தற்கொலை செய்துகொண்ட பிரியதர்ஷினி
தற்கொலை செய்துகொண்ட பிரியதர்ஷினி

சென்னை விருகம்பாக்கத்தில் குடியிருந்த வங்கி மேலாளர், வீட்டிலிருந்தபடியே வேலை செய்துவந்துள்ளார். பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை, விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் ஹரிகணேஷ். இவரின் மனைவி திவ்யா என்கிற திவ்யதர்ஷினி ( 29). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கி மேலாளராகப் பணியாற்றி வந்தார். இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. கடந்த 29-ம் தேதி இரவு பிரியதர்ஷினி அறைக்குள் சென்றவர், பின்னர் கதவைத் திறக்கவில்லை. 30-ம் தேதி அறைக்கதவை உடைத்துப் பார்த்தபோது அவர், துப்பட்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

தற்கொலை
தற்கொலை
Representational Image

இதுகுறித்து தகவல் கிடைத்ததும், கே.கே.நகர் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று திவ்யாவின் சடலத்தை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திவ்யாவுக்கு திருமணமாகி ஓராண்டே ஆவதால், ஆர்.டி.ஓ விசாரணையும் நடந்துவருகிறது. திவ்யா மரணம் குறித்து அவரின் கணவரிடம் போலீஸார் விசாரித்தனர். மேலும், திவ்யாவின் அறை மற்றும் அவரின் செல்போனை ஆய்வு செய்துவருகின்றனர். அதில் அவர் தன்னுடைய இறப்புக்கு ஏதாவது காரணத்தைக் குறிப்பிட்டுள்ளாரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திவ்யாவின் மரணம் குறித்து அவரின் சின்ன தாத்தா கிருஷ்ணமூர்த்தி கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதில், ``நான் சென்னை கோயம்பேடு பிருந்தாவனம் நகரில் குடியிருந்து வருகிறேன். சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். என் அண்ணனுடைய மகள் மாலதியின் மகளான திவ்யா என்பவர் 2014-ம் ஆண்டு முதல் சேத்துப்பட்டில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்தார்

எப்.ஐ.ஆர்
எப்.ஐ.ஆர்

அப்போது எங்கள் சொந்த ஊரான ஊட்டியில் அன்னிகொலை என்ற ஊரைச் சேர்ந்த ஹரிகணேஷ் என்பவர் கீழ்ப்பாக்கத்தில் உள்ள வங்கியில் வேலைபார்த்தார். அப்போது இருவரும் காதலித்துள்ளனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2019-ம் ஆண்டு மே மாதம் இருவீட்டினர் சம்மதத்துடன் எங்களது சொந்த ஊரான ஊட்டியில் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு, திவ்யாவும் அவர் கணவரும் சென்னையில் கோடம்பாக்கத்தில் ஆறுமாதம் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில், என் பேத்தியான திவ்யாவுக்கு வேலை மாற்றலாகி நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கி தொடர்பான நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வந்தார் அதனால் கடந்த 8 மாதங்களாக விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருந்து வந்தனர். ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்தபடியே திவ்யா வேலைபார்த்து வந்தார். அப்போது அவருக்கு அலுவலகப் பணிச்சுமை அதிகமாக இருந்து வந்ததாகவும் இரவு பகலும் மாறி மாறி தூக்கமின்றி வேலை செய்து வந்ததாகவும், அவரின் கணவர் ஹரிகணேஷ் எங்களிடம் கூறினார். வேலைப்பளுவால் திவ்யா கடும் மன அழுத்தத்துடன் இருந்து வந்ததாகவும் ஹரிகணேஷ் தெரிவித்தார்.

தற்கொலை
தற்கொலை

கடந்த 30-ம் தேதி மாலை 5 மணியளவில் நான் வீட்டிலிருந்தபோது ஊட்டியிலிருந்து என் அண்ணன் மகளான மாலதி என்பவர் எனது தொலைபேசிக்கு போன் செய்தார். அப்போது திவ்யா தூக்கு மாட்டியுள்ளதாக மாலதி கூறிய தகவலின் பேரில், நான் உடனே திவ்யாவின் வீட்டுக்கு வந்தேன். அப்போது திவ்யா இறந்த நிலையிலிருந்தார். திவ்யாவின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு எங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் 174 (3) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

ஊரடங்கில் வீட்டிலிருந்தபடியே வேலைபார்த்த வங்கி மேலாளர் திவ்யா உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு