சென்னை எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (எ) வெள்ளை பிரகாஷ் (31). ஏ பிளஸ் வகை ரெளடியான வெள்ளை பிரகாஷ் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா கடத்தல், வெடிகுண்டு வழக்கு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றச் செயலுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுப்பதில் கைதேர்ந்த வெள்ளை பிரகாஷ், தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துவந்தார்.
இந்நிலையில், வெள்ளை பிரகாஷ் தனது கூட்டாளிகளுடன் பூந்தமல்லி அருகே பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அங்கு விரைந்த போலீஸார் வெள்ளை பிரகாஷ் மற்றும் அவரின் கூட்டாளி செங்குன்றம் அப்பு என்பவரைச் சுற்றிவளைத்து கைது செய்தனர்.

மேலும், அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து, ஒரு கைத்துப்பாக்கி, 12 தோட்டாக்கள், 34 நாட்டு வெடிகுண்டுகள், 35 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதோடு, அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களையும், ஒரு காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், "கடந்த 2015-ம் ஆண்டு தாமரைப்பாக்கம் பகுதியில் தென்னரசு என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலைக்கு வெள்ளை பிரகாஷ்தான் ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தென்னரசுவின் சகோதரன் பாம் சரவணன் என்பவருக்கும் வெள்ளை பிரகாஷுக்கு முன்விரோதம் நீடித்து வந்துள்ளது.

பாம் சரவணன் தன்னை கொலை செய்யும் முன்பு அவரை கொலை செய்ய வெள்ளை பிரகாஷ் சதித்திட்டம் தீட்டிவந்துள்ளனர். இதற்கான தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து பாம் சரவணன் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறார்" என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திடக் காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.