Published:Updated:

` ஹெச்.ஆர் அர்ச்சனா பேசுவார்' என்பேன்! - 600 பெண்களை ஏமாற்றிய சென்னை இன்ஜினீயரின் வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

`16 மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி ஆசையில் விழ வைத்தேன்' என்று கைதான சென்னை இன்ஜினீயர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

clement raj
clement raj

தெலங்கானா மாநிலம், சைபராபாத் மெட்ரோ போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள மியாப்பூர் காவல் நிலையத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரபரப்பான புகார் ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த கிளெமென்ட் ராஜ் செழியன் என்கிற பிரதீப் (33) என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிளெமென்ட் ராஜ் செழியனிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் அதிர்ச்சிகரமான வாக்குமூலம் அளித்துள்ளார்.

clement raj
clement raj

போலீஸாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ``என்னுடைய வீடு சென்னை திருவொற்றியூரில் உள்ளது. சென்னையில் உள்ள பிரபலமான ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றி வருகிறேன். எனக்குத் திருமணமாகி குழந்தை உள்ளது. இரவுப்பணி என்பதால் பகலில் வீட்டில்தான் இருப்பேன். தனிமையில் இருந்த சமயத்தில்தான் எனக்கு ஒரு ஐடியா வந்தது. இதனையடுத்து, இணையதளத்தில் வேலைக்காகப் பதிவு செய்துள்ள இளம்பெண்களின் செல்போன் நம்பர்களைச் சேகரித்தேன். அந்த நம்பரைத் தொடர்புகொண்டு ஆங்கிலத்தில் பேசினேன். அப்போது, `பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளர் பணி காலியாக உள்ளது' என்று பெண்களிடம் பேசத் தொடங்கினேன். பிறகு, அவர்களின் பயோடேட்டா மற்றும் போட்டோக்களை குறிப்பிட்ட இ-மெயிலுக்கு அனுப்பச் சொல்வேன். அதை உண்மை என ஏராளமான பெண்கள் நம்பினர். பிறகு, `ஹெச்.ஆர் அர்ச்சனா ஜெகதீஷ் என்பவர் உங்களிடம் பேசுவார்' என்று போன் இணைப்பைத் துண்டித்துவிடுவேன்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு வாட்ஸ் அப் மூலம் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு வேற போன் நம்பரிலிருந்து மெசேஜ் அனுப்புவேன். அதற்குப் பதிலளிக்கும் பெண்களிடம் நிர்வாண புகைப்படங்களை அனுப்பச் சொல்வேன். அதற்குச் சில பெண்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். `எதற்காக அந்தமாதிரியான போட்டோக்களை கேட்கிறீர்கள்?' என்று கேள்வி கேட்பார்கள். அதற்கு அவர்களிடம், `பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பாளர் பணி என்பதால் நீங்கள் அழகாக இருக்க வேண்டும். அதன் பிறகுதான் உங்களுக்கு வேலை கொடுக்க முடியும்' என்று மெசேஜ் அனுப்புவேன். மேலும், `நானும் ஒரு பெண் என்பதால் உங்களின் நிர்வாண புகைப்படங்களை எனக்கு அனுப்புவதால் எந்த சிக்கலும் இல்லை' என்று மீண்டும் மெசேஜ் அனுப்புவேன். அதை நம்பி பலர் தங்களுடைய நிர்வாண புகைப்படங்களை எனக்கு அனுப்பி வைத்தனர். அதைப்பார்த்து தனிமையில் ரசிப்பேன்.

Miyapur police station
Miyapur police station

அதன் பிறகு சம்பந்தப்பட்ட பெண்களுக்கு வீடியோ கால் செய்து பேசுவேன். அப்போது சிலர் ஆணின் குரல் கேட்டு அதிர்ச்சியடைவார்கள். அவர்களிடம், `உங்களின் நிர்வாண புகைப்படம் என்னிடம் இருக்கிறது. முரண்டு பிடித்தால் இணையதளத்தில் படத்தை வெளியிட்டுவிடுவேன்' என்று மிரட்டுவேன். வீடியோ காலின்போது அதை அவர்களுக்குக் காண்பிப்பேன். இதனால் அதிர்ச்சியடையும் பெண்களில் பலர் நான் சொல்வதைக் கேட்பதாகக் கூறுவார்கள். இதனையடுத்து, அவர்களின் நிர்வாண வீடியோக்களையும் பதிவு செய்தேன்.

இதையடுத்து, நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் அடிப்படையில் பெண்களிடம் பணம் கேட்டு மிரட்டுவேன். இல்லையென்றால் குறிப்பிட்ட இடத்துக்கு வரச் சொல்வேன். 16 மாநிலங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் என்னிடம் இருந்தன. அதில் சில பெண்களை வெளிமாநிலங்களுக்குச் சென்று சந்தித்துள்ளேன். இந்தச் சமயத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண், என் மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததால் சிக்கிக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளதாகப் போலீஸார் கூறுகின்றனர்.

` 16 மாநிலங்கள், 600 பெண்கள்!' - 2,000 நிர்வாணப் படங்களோடு கைதான சென்னை இன்ஜினீயர்

மியாப்பூர் போலீஸார் கிளெமென்ட் ராஜ் செழியனின் செல்போன்களை பறிமுதல் செய்து அதை ஓப்பன் செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது செல்போன்களில் மூன்று லாக் போடப்பட்டு இருந்தது. இதனால் அவர் மூலமாகவே செல்போன்களை ஓப்பன் செய்த போலீஸார் உள்ளே இருந்த நிர்வாண போட்டோக்கள், வீடியோக்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹைதராபாத் பெண்ணைத் தவிர பாதிக்கப்பட்ட பெண்களில் யாரும் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

கைநிறைய சம்பளம் வாங்கிய கிளெமென்ட்டின் இந்த விபரீத ஆசையால் இன்று சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட தகவல் அவர் பணியாற்றும் ஐ.டி நிறுவனத்திலும் குடும்பத்தினரிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.