Published:Updated:

``அலைக்கழிக்கிறாங்க... நான் பெண்ணா பிறந்தது தப்பா!"- சென்னைக் காவலரால் ஏமாற்றப்பட்ட பெண் கண்ணீர்

காவலர் வீரமணியுடன் பெண் சரஸ்வதி
காவலர் வீரமணியுடன் பெண் சரஸ்வதி

நான் காதலித்ததும் பெண்ணாக பிறந்தததும் தப்பா என்று அழகுக்கலை நிபுணரான இளம்பெண் சரஸ்வதி கண்ணீர்மல்க கூறினார்.

சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் சரஸ்வதி, கமிஷனர் அலுவலகம், மகளிர் ஆணையம், காவல் நிலையம் ஆகிய இடங்களில் காவலர் வீரமணி மீது தொடர்ச்சியாக புகார்களைக் கொடுத்துவருகிறார். சரஸ்வதி நம்மிடம் சில முக்கியத் தகவல்களைத் தெரிவித்தார்.

``என்னுடைய அப்பா கூலித் தொழிலாளி. காவலர் தேர்வுக்கான பயிற்சியின்போது எனக்கு அறிமுகமான வீரமணியின் பேச்சை நம்பி அவரைக் காதலித்தேன். முதலில் அவர்தான் காதலை என்னிடம் கூறினார். அவருக்கு காவலர் பணி கிடைத்ததும் சந்தோஷப்பட்டேன்.

காவலர் வீரமணியுடன் சரஸ்வதி
காவலர் வீரமணியுடன் சரஸ்வதி

திருமணத்துக்குப்பிறகு சந்தோஷமாக வாழப் போகிறோம் என்ற கனவில் இருந்தேன். மே 27-ம் தேதி நடந்த சம்பவத்துக்குப்பிறகு வீரமணியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. காதலிக்கும்போதே நாங்கள் இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்துவிட்டோம். இப்போது எங்கள் வீட்டில் வசதி இல்லை என்ற ஒரே காரணத்துக்காக திருமணத்துக்கு வீரா வீட்டில் தடைபோடுகிறார்கள். தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்குகிறார்கள்.

என்னைக் காதலித்த வீரா என் மனம் வேதனைப்படும் வகையில் பேசுவதை என்னால் நம்ப முடியவில்லை. வீராவும் நானும் எந்தளவுக்கு காதலித்தோம் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிக்குச் சேர்ந்த பிறகு வீரா, என்னோடு போனில்கூட பேசுவதில்லை. அதுதான் எனக்கு மனவருத்தம். காதலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு வந்தாலும் காதலித்த பெண்ணை கைவிடக் கூடாது. என்னைப் பதிவுத் திருமணம் செய்துகொள்ளும்படி வீராவிடம் கூறியபோது அதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

காவலர் வீரமணி
காவலர் வீரமணி

வீராவின் அப்பாவும் தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி வீராவும் அவரின் குடும்பத்தினரும் நடவடிக்கைகளிலிருந்து தப்பிவருகின்றனர். வீரா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த பிப்ரவரி மாதம் முதல் சட்டரீதியாக நான் போராடிவருகிறேன். குறிப்பாக ஆயுதப்படை பிரிவில் என் புகார் மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆயுதப்படை பிரிவு அலுவலகத்தில் உள்ளவர்கள் என்னை அலைக்கழித்தனர்.

நான் 31.5.2019-ல் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வீராவிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது என்னைத் திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்த வீரா, மகளிர் ஆணையத்தில் வேறுவிதமாக பேசியுள்ளார்.

31.8.2019-ல் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நான் சென்றபோது என்னை வழிமறித்த வீரமணி, `இனிமேலும் நீ புகார் கொடுத்தால் ரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவேன்' என்று மிரட்டினார். அதனால் வீரா மற்றும் அவரின் குடும்பத்தினரால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. நான் மருத்துவ பரிசோதனைக்கும் தயாராக உள்ளேன்" என்றவர் `திடீரென நான் காதலித்ததும் பெண்ணாக பிறந்ததும் தப்பா' என்று மனம் உடைந்து கதறி அழத் தொடங்கினார்.

சிறிது நேர அமைதிக்குப்பிறகு அவர், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு ``நாகை மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. காவல்துறையில் பணியாற்றும் சிலர், காதல் வலையில் பெண்களை விழ வைத்து ஏமாற்றிவருகின்றனர். அதற்கு காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

`ப்ளீஸ் வீரா... என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ!' -அழகுக்கலை நிபுணர் புகாரால் சிக்கலில் சென்னைக் காவலர்
காவலர் வீரமணி
காவலர் வீரமணி

சரஸ்வதியை திருமணம் செய்ய தயார் என்று காவலர் வீரமணி கூறினாலும் சரஸ்வதி, காவல்துறையினரிடம் முக்கிய வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதில் வீரமணி என்னை திருமணம் செய்தாலும் என் வாழ்க்கைக்கு அவர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சரஸ்வதி, காவலர் வீரமணி குறித்த செய்திகள் வெளியானதும் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திலிருந்து சரஸ்வதியிடம் பேசிய போலீஸார் மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு