Published:Updated:

`ப்ளீஸ் வீரா... என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ!' -அழகுக்கலை நிபுணர் புகாரால் சிக்கலில் சென்னைக் காவலர்

காவலர் வீரமணியுடன் சரஸ்வதி
காவலர் வீரமணியுடன் சரஸ்வதி

``காவலர் பணியில் சேர பயிற்சிக்காகச் சென்ற சமயத்தில்தான் வீராவைச் சந்தித்தேன். பின்னர் அவரைக் காதலித்தேன். தற்போது அவர் என்னைத் திருமணம் செய்யாமல் ஏமாற்றிவருகிறார்" என்கிறார் சரஸ்வதி.

சென்னையைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், `நான் பி.எஸ்சி படித்துள்ளேன். கடந்த 2 ஆண்டுகளாக சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த வீரமணியும் நானும் காதலித்துவந்தோம். நான் 2017-ம் ஆண்டு காவலர் பணியில் சேர முயற்சி செய்துவந்தேன். அதற்கான உடற்பயிற்சி செய்யும் மைதானத்துக்குச் சென்றபோதுதான் வீரமணியைச் சந்தித்தேன். நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. வீரமணிக்குக் காவலர் பணி கிடைத்தது. ஆனால், எனக்குக் கிடைக்கவில்லை.

காவலர் வீரமணி, சரஸ்வதி
காவலர் வீரமணி, சரஸ்வதி

நாங்கள் இருவரும் தியேட்டர், பார்க், பீச் எனப் பல இடங்களுக்குச் சென்று எங்களின் காதலை வளர்த்தோம். 2018-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி, என்னை வீட்டுக்கு வரும்படி வீரமணி கூறினார். அப்போது தன்னுடைய பெற்றோரிடம் என்னை அறிமுகம் செய்து வைப்பதாகத் தெரிவித்தார். அதை நம்பி அவரின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டில் யாரும் இல்லை. அதுகுறித்து கேட்டபோது, அம்மாவும் அப்பாவும் கோயிலுக்குச் சென்றிருப்பதாக வீரமணி என்னிடம் கூறினார்.

வீட்டில் யாரும் இல்லாத அந்த நேரத்தில் என்னைத் திருமணம் செய்துகொள்வதாக வீரமணி கூறினார். அவரின் அம்மா மீதும் என் மீதும் பிறக்கப்போகும் குழந்தை ஆகியோர் மீதும் வீரமணி சத்தியம் செய்தார். அதன்பிறகு நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருந்தோம். பின்னர் வீரமணி என்னுடன் சரிவரப் பேசவில்லை. அதுகுறித்து அவரிடம் கேட்டபோது, `திருமணத்துக்கு வீட்டில் யாரும் சம்மதிக்கவில்லை. அதனால் நான் உன்னைத் திருமணம் செய்ய விரும்பவில்லை' என்று கூறியதோடு என்னுடைய செல்போன் நம்பரையும் `பிளாக்' செய்துவிட்டார்.

காவலர் வீரமணி
காவலர் வீரமணி

என்னைக் காதலித்து திருமணம் செய்துகொள்வதாக நம்ப வைத்து ஏமாற்றிய காவலர் வீரமணி மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

சரஸ்வதியிடம் பேசினோம். ``நான் கல்லூரியில் படிக்கும்போதே அழகுகலை நிபுணர் பயிற்சியையும் முடித்தேன். காவலர் பணியில் சேர வேண்டும் என்பது என் கனவு. 2017-ம் ஆண்டில் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். ஆனால், கட்ஆப் மார்க்கில் பணி கிடைத்தது. அதனால் அழகுகலை நிபுணராகப் பணியாற்றிவந்தேன்.

காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு பயிற்சியின்போதுதான் வீரமணியைச் சந்தித்தேன். வீரமணியுடன் படித்த பெண் ஒருவரும் பயிற்சிக்கு வந்திருந்தார். பயிற்சியில் வீரமணி, சூப்பரா ஓடுவார் என்று அனைவரும் பேசுவோம். அப்போதுதான் வீரமணியிடம் அவருடன் படித்த பெண், என்னுடைய செல்போன் நம்பரைக் கொடுத்துள்ளார். அந்த நம்பரில் வீரமணி எனக்கு போன் செய்தார். காவலர் தேர்வு தொடர்பாகப் பேச ஆரம்பித்தோம். அப்போது அவர் என் மீது அன்பாகவும் அக்கறையாகவும் பேசுவார். அது எனக்குப்பிடித்திருந்தது.

காவலர் வீரமணி, சரஸ்வதி
காவலர் வீரமணி, சரஸ்வதி

இருவரும் காதலித்தோம். காவலர் பணிக்குச் சேர்ந்த வீரமணி, பயிற்சியில் இருந்தார். அப்போது, அவரிடம் எனக்கு வீட்டில் வரன் பார்ப்பதாகக் கூறினேன். உடனே அவர், என்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். தன்னுடைய நண்பர்களிடம் என்னை மனைவி என்றுதான் வீரமணி அறிமுகப்படுத்திவைத்தார். இந்தச் சமயத்தில் எனக்கு வீட்டில் வரன் பார்த்தனர். அந்தத் தகவலை வீராவிடம் கூறி, என்னைப் பெண் பார்க்க வரும்படி கூறினேன். ஆனால் அவர் வரவில்லை.

இதனால் நான் விஷம் குடித்தேன். வீட்டில் உள்ளவர்கள் என்னைக்காப்பாற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது வீரா என்னிடம், தற்கொலை முயற்சிக்குக் காதல் காரணமல்ல என்று கூறும்படி கட்டாயப்படுத்தினார். அதன்படி நானும் கூறினேன். இதையடுத்து வீராவின் அப்பா, எங்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால் அவர் நடந்துகொண்ட விதம் எங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது. அதுதொடர்பாக வீராவுக்குப் போன் செய்தேன். அப்போது வீரா, தன்னுடைய அப்பா, பிளாக்மெயில் செய்வதாகக் கூறினார்.

காவலர் வீரமணி அடையாள அட்டை
காவலர் வீரமணி அடையாள அட்டை

அதன்பின்னர் அவர் என்னுடன் போனில் பேசுவதில்லை. இதனால்தான் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். அதுதொடர்பாக போலீஸார் எங்கள் இருவரிடமும் விசாரித்தனர். விசாரணையின்போது என்னைத் திருமணம் செய்துகொள்வதாக வீரமணி எழுதிக் கொடுத்தார். போலீஸாரிடம் 2 மாதம் காலஅவகாசம் கேட்டார் வீரமணி. `என்னைத் திருமணம் செய்துகொள்' என்று வீராவிடம் கூறியது அவருக்குப்பிடிக்கவில்லை.

இதையடுத்து என் வீட்டுக்கு வீராவின் குடும்பத்தினர் வந்திருந்தனர். அப்போது அவர்கள் அனைவரும் தங்களின் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்தார்கள். வீராவுக்கும் எனக்கும் திருமணம் செய்துவைக்க அந்தக் குடும்பத்தினர் விரும்பவில்லை. அதற்காக ஜாதியைக் குறிப்பிட்டு எங்களின் காதலைப் பிரிக்க முயற்சி செய்துவருகின்றனர். வீராவை முழுமையாக நம்பினேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார்" என்றார் கண்ணீருடன்

`சாலையில் கிடந்த பையைத் திறந்து பார்த்தால் தங்கநகைகள்!'- காவல்நிலையத்தை நெகிழவைத்த சென்னைக் காவலர்

சரஸ்வதியின் குற்றச்சாட்டுகள் குறித்து காவலர் வீரமணியிடம் கேட்டதற்கு, ``என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சரஸ்வதி வீட்டுக்குச் சென்று பெண் பார்த்துவிட்டு வந்துவிட்டனர். மாப்பிள்ளை பார்க்க சரஸ்வதி வீட்டினர் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும். ஆனால் அவர்கள் வரவில்லை. என்னையும் என் குடும்பத்தையும் அசிங்கப்படுத்த சரஸ்வதி புகார் கொடுத்துள்ளார். புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின்போது சுமுகதீர்வு எட்டப்பட்டது. நான் சரஸ்வதியைத் திருமணம் செய்ய 200 சதவிகிதம் தயாராக இருக்கிறேன். ஆனால் சரஸ்வதி யாருடைய தூண்டுதலின் பேரிலோ தவறுக்கு மேல் தவறு செய்துவருகிறார்" என்றார்.

வீரமணியும் சரஸ்வதியும் பேசும் ஒரு ஆடியோவில்``ப்ளீஸ் வீரா... என்னைக் கல்யாணம் பண்ணிக்கோ" என்று கண்ணீர்மல்க கெஞ்சுகிறார் சரஸ்வதி. அதற்கு வீராவும் சரஸ்வதியைச் சமரசப்படுத்தும் வகையில் பேசுகிறார்.

காவல்துறையில் மட்டுமல்லாமல் சரஸ்வதி, மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு