Published:Updated:

சென்னை: பெண்ணிடம் ஹேண்ட் பேக் பறிப்பு! - குத்துச் சண்டை வீரரிடம் சிக்கிய இளைஞர்கள்

ஹேண்ட் பேக் பறிப்பு
ஹேண்ட் பேக் பறிப்பு ( Representational image )

சென்னை நுங்கம்பாக்கத்தில் பெண்ணிடமிருந்து ஹேண்ட்பேக்கை பறித்துக் கொண்டுச் சென்ற இளைஞர்களை தைரியமாக குத்துச் சண்டை வீரர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரின் மனைவி கலைவாணி. இவர்களின் மகன் கார்த்திக்குமார். இவர் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கார்த்திக்குமார் குத்துச் சண்டை வீரர். இவர் காவல் துறையில் சேர வேண்டும் என்ற லட்சத்தியத்தோடு அதற்கான பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

குற்றம்
குற்றம்
representational image

இந்தநிலையில் கடந்த 16-ம் தேதி மாலை கார்த்திக்குமார், நுங்கம்பாக்கம் ஜோசியர் தெருவில் தனது பைக்கை நிறுத்தினார். அப்போது கைக் குழந்தையுடன் ஒரு பெண் பதற்றத்துடன் ஒரு பைக்கை துரத்தியபடி வேகமாக ஓடிவருவதை கார்த்திக்குமார் பார்த்தார். அந்தப் பெண் ஹெல்ப் ப்ளீஸ், திருடன்... திருடன் என்று சத்தம் போட்டார். அதைக் கேட்டதும் கார்த்திக் குமார் சமயோகிதமாக யோசித்தார். தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்த அவர், எதிர்திசையில் பெண் துரத்தி வந்தவரின் பைக்கின் மீது மோதினார். அதனால் பைக்கிலிருந்த கீழே விழுந்த இளைஞர்கள் கத்தியை எடுத்து கார்த்திக்குமாரை மிரட்டினர். அதை அதிர்ச்சியோடு அந்தப் பெண்ணும் அவ்வழியாக சென்றவர்களும் பார்த்தனர்.

ஹேண்ட் பேக்
ஹேண்ட் பேக்
representational image

இந்தச் சமயத்தில் கார்த்திக்குமார், அதிரடியாக இளைஞர்களைத் தாக்கினார். அதில் ஒருவரின் கையிலிருந்த கத்தி கீழே விழுந்தது. அதைப்பார்த்த இன்னொரு இளைஞன் அங்கிருந்து தப்பி ஓடினார். இதைப் பார்த்ததும் பொதுமக்கள் கீழே விழுந்த இளைஞனை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அந்த இளைஞனை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த இளைஞனின் பெயர் முக்தார் உசேன் என்றும் சைதாப்பேட்டையைச் சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது. முக்தார் உசேன் மீது வேளச்சேரி காவல் நிலையத்தில் வழிபறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. முக்தார் உசேனிடம் விசாரித்தபோது அவனுடன் வந்தது ஹாலித் எனத் தெரியவந்தது.

திருட்டு
திருட்டு

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஜோசியர் தெருவில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் நடந்து வந்திருக்கிறார். அவர் வங்கியிருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார். அப்போதுதான் பைக்கில் வந்த வழிபறி கொள்ளையர்கள் அந்தப் பெண்ணின் ஹேண்ட் பேக்கை பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர். அதைக் கவனித்த குத்துச் சண்டை வீரர் கார்த்திக் குமார், தைரியமாக தனியொருவனாக போராடி முக்தார் உசேனைப் பிடித்திருக்கிறார். அவரிடமிருந்த பணத்தையும் மீட்டிருக்கிறார்" என்றனர்.

பணத்தை மீட்டுக் கொடுத்த கார்த்திக் குமாருக்கு அந்தப் பெண் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு