
திருமண நாளில் மணமகன் மாயமானதால் மணமகள் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை, புழல் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண்ணுக்கும், அண்ணாநகரைச் சேர்ந்த டில்லிபாபு என்கிற ஆனந்தன் (32) என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை திருப்போரூர் முருகன் கோயிலில் திருமணத்துக்கான ஏற்பாடு செய்யப்பட்டது. திருமண அழைப்பிதழ்கள் உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு இரு வீட்டினரும் கொடுத்திருந்தனர். திருப்போரூர் முருகன் கோயிலில் மணமகளின் குடும்பத்தினர் வந்தனர். ஆனால், மணமகன் வீட்டினர் வரவில்லை.

அதனால், மணமகள் வீட்டினர், மணமகனின் வீட்டினருக்கு போன் செய்தனர். அப்போது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் மணமகள் வீட்டினர் அதிர்ச்சியடைந்தனர். இந்தநிலையில் மணமகனின் வீட்டினர் மாப்பிள்ளையைக் காணவில்லை என திருமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்தத் தகவல் கிடைத்ததும், மணமகளின் வீட்டினர் திருமங்கலம் காவல் நிலையத்துக்கு வந்தனர்.
மணமகன் வீட்டினரிடம் விவரத்தை மணமகள் வீட்டினர் கேட்டனர். ஆனால், சரியான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து மணமகள் வீட்டினர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், மணமகன் வீட்டினர் தங்களை ஏமாற்றிவிட்டதாகப் புகாரளித்தனர். ஆனால், அந்தப் புகாரை போலீஸார் வாங்கிவில்லை என்று தெரிகிறது. அதைக் கண்டித்து காவல் நிலையம் முன்பு மணமகள் வீட்டினர் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். அவர்களிடம் போலீஸார் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு சுமார் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு மணமகள் வீட்டினர் மறியலைக் கைவிட்டனர்.

இந்தநிலையில், மணமகன் டில்லிபாபு உறவினர் வீட்டில் இருக்கும் தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது. உடனடியாக போலீஸார் அங்கு சென்று மணமகனை அழைத்து வந்தனர். மணமகனிடம் போலீஸார் விசாரித்துவருகின்றனர். மணமகன் வீட்டினரும், மணமகள் வீட்டினரும் ஒருவொருக்கொருவர் மாறி மாறி போலீஸாரிடம் குற்றம்சாட்டினர். அதனால் போலீஸார் இரு வீட்டினரிடமும் விசாரித்து வருகின்றனர். அதன் காரணமாக திருப்போரூர் முருகன் கோயிலில் நடக்கவிருந்த திருமணமும் கொரட்டூரில் நடக்கவிருந்த வரவேற்பு நிகழ்ச்சியும் நின்றது. திருமணத்துக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.