Published:Updated:

சென்னைத் தொழிலதிபர் வலையில் வெளிநாட்டு மாணவி வீழ்ந்தது எப்படி?- அதிர்ச்சி தகவல்

சென்னைத் தொழிலதிபர் வலையில் தான் வீழ்ந்த கதையைக் காவல் நிலையத்தில் கண்ணீர்மல்க கூறியுள்ளார் வெளிநாட்டு மாணவி.

மாணவி
மாணவி

ஐரோப்பியாவைச் சேர்ந்த மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி ஏமாற்றிய வழக்கில் சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த தொழிலதிபர் ருமேஸ்அகமது (30) கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியை மிரட்டியதாக ருமேஸ் அகமதுவின் அப்பா அப்துல் கரீமையும் (65) போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

மாணவி
மாணவி

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஐரோப்பியாவைச் சேர்ந்த 22 வயதாகும் மாணவி, துபாயில் பிசினஸ் தொடர்பான மேல் படிப்பை படித்துவருகிறார். இவரை சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த தொழிலதிபர் ருமேஸ்அகமது துபாயில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சந்தித்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலர்களாக வலம் வந்துள்ளனர். இவர்கள் சென்னை, துபாய், கொச்சி ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளனர்.

ருமேஸ் அகமதுவுடன் மாணவி நெருங்கிப் பழகியதால் கர்ப்பமாகியுள்ளார். ருமேஸ் அகமதுவின் வற்புறுத்தலின்பேரில் ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குக் கடந்த மார்ச் மாதம் கருக்கலைப்பு நடந்துள்ளது. அதற்கான ஆதாரத்தை அவர் வைத்துள்ளார். அதுதொடர்பாக ருமேஸ்அகமதுவிடம் விசாரணை நடத்தினோம். அதன்பிறகு கொச்சிக்குச் சென்ற ருமேஸ்அகமதுவும் மாணவியும் ஹோட்டலில் ஒன்றாக தங்கியுள்ளனர். அப்போது மீண்டும் அவர் கர்ப்பமடைந்துள்ளார். அதையும் கலைக்க ருமேஸ் அகமது கூறியுள்ளார். அதற்குஅவர் மறுத்ததோடு திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.

ருமேஸ் அகமது
ருமேஸ் அகமது

இதனால்தான் ருமேஸ்அகமதுவுக்கும் மாணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதுதான் ருமேஸ்அகமதுவின் தந்தையான தொழிலதிபர் அப்துல் கரீம், மாணவியை மிரட்டியுள்ளார். அதுகுறித்தும் மாணவி தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனால்தான் அப்துல் கரீம் மீதும் வழக்குபதிவு செய்துள்ளோம். விசாரணை முடிவில் ருமேஸ்அகமது, அப்துல் கரீம் ஆகியோரை கைது செய்துள்ளோம்" என்றனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமியைச் சந்தித்த வெளிநாட்டு மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமைகளை ஆங்கிலத்தில் தெளிவாக விவரித்துக் கூறியுள்ளார். அதை போலீஸார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த போலீஸாரிடம், ``எங்கள் நாட்டில் இந்திய கலாசாரத்தைப் பெருமையாகப் பேசுவோம். ஆனால், ஒரு இந்தியரால் அதுவும் தமிழகத்தைச் சேர்ந்த நபரால் நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது' என்று கண்ணீர்விட்டுக் கதறி அழுதுள்ளார். அவருக்கு போலீஸார் ஆறுதல் கூறியுள்ளனர். ஆயிரம் விளக்கு காவல் நிலையத்துக்கு வந்த மாணவி, அங்கிருந்த ருமேஸ்அகமது, அவரின் தந்தை அப்துல் கரீம்மைப் பார்த்து ஆவேத்துடன் ஆங்கிலத்தில் திட்டினார். அப்போது மாணவியை போலீஸார் சமரசப்படுத்தியுள்ளனர்.

அப்துல் கரீம்
அப்துல் கரீம்

அப்துல் கரீம், ருமேஸ்அகமது ஆகியோர் ஆந்திராவில் இறால் பண்ணை மற்றும் கடல் உணவு பிசினஸ் செய்துவருகின்றனர். இவர்கள் மீது வெளிநாட்டு மாணவி புகார் கொடுத்ததும் காவல்துறையினருக்குப் பல தரப்பிலிருந்தும் பிரஷர் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி காவல் துறையினர் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளனர். மாணவிக்கு நடந்த கருக்கலைப்பு தொடர்பான மருத்துவ ஆதாரங்களும் மாணவிக்குத் தற்போது நடந்துள்ள மருத்துவப் பரிசோதனையும்தான் இந்த வழக்குக்கு முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளன. தற்போது மாணவிக்குத் தேவையான உதவிகளையும் பாதுகாப்பையும் போலீஸார் செய்து கொடுத்துள்ளனர்.