Published:Updated:

சென்னை:`டயர் தொழிற்சாலை இடப்பிரச்னை!' - ரியல் எஸ்டேட் அதிபர் கொடூர கொலை

ரியல் எஸ்டேட் அதிபர் வீரமணி
ரியல் எஸ்டேட் அதிபர் வீரமணி

சென்னை அம்பத்தூரில் டயர் தொழிற்சாலை இடப்பிரச்னை காரணமாக ரியல் எஸ்டேட் அதிபர் வீரமணி, வீட்டின் வாசலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அடுத்த அத்திப்பட்டு மேட்டு 8-வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். வீட்டின் அருகில் வீரமணி இன்று காலை நின்றுகொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் வீட்டின் வாசலில் வைத்து கொடூரமாக வெட்டி கொலை செய்தது. வீரமணியின் அலறல் சத்தம் கேட்டு அவரின் குடும்பத்தினரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் அங்கு வந்தனர். அதைப் பார்த்த மர்ம கும்பல் ஆட்டோவில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றது.

வீரமணி
வீரமணி

இதையடுத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் வீரமணியின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், வீரமணி கொலை குறித்து அவரின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.

கொலை குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``அம்பத்தூரில் கடந்த 45 வருடங்களாக டயர் தொழிற்சாலை இயங்கி வந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொழிலாளர் பிரச்னை காரணமாகத் தொழிற்சாலை மூடப்பட்டது. இதுதொடர்பான வழக்கு மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தொழிற்சாலைக்குச் சொந்தமான இடத்தைக் கையப்படுத்துவதில் இரண்டு கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

சடலமாக வீரமணி
சடலமாக வீரமணி

ரியல் எஸ்டேட் அதிபர் வீரமணிக்கும் அவரின் எதிர் கும்பலுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுவந்துள்ளது. இந்தநிலையில் இன்று காலை 10 மணியளவில் வீரமணி, வீட்டின் முன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் சரமாரியாக அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இந்தக் கொலையில் தொடர்புடையவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் ஆட்டோவின் பதிவு நம்பரைக் கண்டறிந்துள்ளோம். அதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது" என்றார்.

அம்பத்தூர் அருகே பட்டப்பகலில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்யப்பட்டதும் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. உடனடியாக சம்பவ இடத்துக்கு காவல் துணை கமிஷனர் சுவாமிநாதன், ஆவடி உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, அம்பத்தூர் காவல் உதவி கமிஷனர் கண்ணன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் விஜயராகவன், பரணி, பொற்கொடி மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டனர். வீரமணி கடைசியாக யாருடன் போனில் பேசிக்கொண்டிருந்தார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சடலமாக வீரமணி
சடலமாக வீரமணி
சென்னை: 2-வது மனைவி மீதும் சந்தேகம்; கருக்கலைப்பு! - கொலை வழக்கில் சிக்கிய வாட்ச்மேன்

கொலை செய்யப்பட்ட வீரமணிக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் யஸ்வத் என்ற மகனும் கீர்த்தி என்ற மகளும் உள்ளனர். வீட்டின் வாசலில் வீரமணி கொலை செய்யப்பட்ட கிடந்ததைப் பார்த்த அவரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். வீட்டில் இருந்ததால் வீரமணி, சட்டை அணியவில்லை. வேட்டி மட்டுமே அணிந்திருந்தார். அதனால் அரைநிர்வாணமாகவே தெருவில் வீரமணி சடலமாக கிடந்தார். இதையடுத்து அங்குள்ளவர்கள் வீரமணிக்கு வேட்டியை அணிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலை அம்பத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு