Published:Updated:

இரட்டை குழந்தைக்கு நான்தான் தந்தை!- பெண் வங்கி அதிகாரியை மிரட்டிய சென்னை தொழிலதிபர் சிக்கிய பின்னணி

கைது
கைது ( மாதிரிப் படம் )

சென்னை அண்ணாசாலையில் உள்ள வங்கியில் மேலாளராகப் பணியாற்றும் பெண் வங்கி அதிகாரிக்கு டெஸ்ட் டியூப் மூலம் இரட்டை குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு நான்தான் தந்தை எனக்கூறி பணம் கேட்டு மிரட்டிய தொழிலதிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (31) (பெயர் மாற்றம்). இவர் சென்னை அண்ணா சாலையில் உள்ள வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2008ம் ஆண்டு திருமணம் நடந்தது. 9 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், 2017- ம் ஆண்டு கணவரைப் பிரிந்த சந்தியா, தனியாக வாழ்ந்துவருகிறார். 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சென்னை கெல்லீஸ் பகுதியில் உள்ள கிளையில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது அந்த வங்கிக்கு பெரியமேடு பகுதியைச் சேர்ந்த ரபியா (38) என்பவர் வந்தார். வாடிக்கையாளர் என்ற முறையில் மேலாளர் சந்தியாவை ரபியா சந்தித்தார். அதன்பிறகு இருவரும் தோழிகளாகினர்.

எட்டி உதைக்கப்பட்ட பைக்; கெத்துகாட்டிய லோடுமேன்! -சமாதானத்துக்குச் சென்ற இடத்தில் நேர்ந்த கொடூரம்
Representational Image
Representational Image

ரபியாவிடம் தனது கடந்த கால வாழ்க்கை குறித்தும் குழந்தை இல்லாத வருத்தம் குறித்தும் சந்தியா கண்ணீர்மல்க கூறினார். அதைக்கேட்ட ரபியா, கவலைப்படாதீங்க, எனக்கு தெரிந்த டாக்டர் ஒருவர் திண்டுக்கல்லில் இருக்கிறார். அவர் மூலம் டெஸ்ட் டியூப் மூலம் உங்களுக்குக் குழந்தை பிறக்க ஏற்பாடு செய்கிறேன் என்று ரபியா கூறியுள்ளார். அதற்கு சந்தியாவும் சம்மதித்துள்ளார். இந்தச் சமயத்தில் ரபியாவின் கணவர் நாகூர் மீரானும் குடும்ப நண்பர் போல சந்தியாவிடம் பழகத் தொடங்கினார்.

நாகூர் மீரான், ரபியா ஆகியோர் சந்தியாவைப் பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று விவரத்தைக் கூறினர். டெஸ்ட் டியூப் குழந்தைக்கு லட்சக்கணக்கில் செலவாகும் எனப் பெண் மருத்துவர் கூறியுள்ளார். அதற்கும் சந்தியா ஓகே என்றதும் டெஸ்ட் டியூப் மூலம் கரு உருவாக்கப்பட்டு சந்தியாவின் கர்ப்பபைக்குள் செலுத்தப்பட்டது. இதையடுத்து ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளை சந்தியா பெற்றெடுத்தார். அதனால் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை.

Representational Image
Representational Image
pixabay
`எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை வரக்கூடாது' -திருமணமான 11 மாதத்தில் விபரீத முடிவெடுத்த மனைவி

இந்தநிலையில் குடும்ப நண்பரான நாகூர் மீரான், சந்தியாவைச் சந்தித்துப் பேசினார். அப்போது குழந்தை பிறந்ததற்கு என்னுடைய உயிர் அணுக்கள்தான் காரணம். அதனால் 25 லட்சம் ரூபாய் எனக்கு நீ தர வேண்டும் என்று கூறி மிரட்டியிருக்கிறார். அதைக்கேட்ட சந்தியா அதிர்ச்சியடைந்தார். பணமெல்லாம் தர முடியாது என்று முதலில் பேசிப்பார்த்தார். ஆனால் நாகூர்மீரான், பணம் கேட்டு மிரட்டியதோடு சந்தியாவிடம் அவதூறாகப் பேசத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

நாகூர் மீரானின் தொல்லைக் குறித்து சந்தியா, கடந்த சில தினங்களுக்கு முன் எழும்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சேட்டு, சந்தியாவிடம் விசாரணை நடத்தினார். பின்னர், சந்தியாவின் புகாரின் பேரில் சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த நாகூர்மீரானிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து நாகூர் மீரானை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாகூர் மீரான்
நாகூர் மீரான்

இதுகுறித்து எழும்பூர் போலீஸார் கூறுகையில், ``வங்கி அதிகாரி சந்தியா கொடுத்த புகாரின்பேரில் பெரியமேடு பகுதியைச் சேர்ந்த நாகூர் மீரான் மீது 294(பி) (தரக்குறைவாகத் திட்டுதல்), 354 (மானபங்கப்படுத்துதல்), 448 (அத்து மீறி உள்ளே நுழைதல்), 506(2l) கொலை மிரட்டல் மற்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமைத்தடுப்புச் சட்டப்பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம்.

எத்திராஜ் சாலையில் உள்ள சந்தியாவின் வீட்டுக்குச் சென்ற நாகூர் மீரான், நான் கேட்கும் பணத்தைத் தரவில்லை என்றால் இரட்டை குழந்தைகளைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக சந்தியா தன்னுடைய புகாரில் குறிப்பிட்டுள்ளார். விசாரணைக்குப்பிறகு நாகூர்மீரான் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தோல் பிசினஸ் செய்துவருகிறார். நீதிமன்றத்தில் நாகூர்மீரானை ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளோம்"என்றனர்.

Representational Image
Representational Image

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``குற்றம் 23- என்ற படத்திலும் விந்தணுவை டெஸ்ட் டியூப் குழந்தைக்கு தானம் செய்துவது போலக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். குழந்தை பிறந்தபிறகு அந்தப் பெண்ணை மிரட்டும் காட்சியும் அந்தப்படத்திலிருக்கும். அதைப்போலத்தான் சென்னை எழும்பூரில் குடியிருக்கும் வங்கி அதிகாரி சந்தியாவை தொழிலதிபர் நாகூர்மீரான் மிரட்டியதாக புகாரளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு