சென்னை: முதல்வருக்குக் கடிதம்; கமல் ட்வீட் - இளம் தொழிலதிபரின் தற்கொலைக்கு லஞ்சம் காரணமா?!

சென்னையில் திருமணமாகி இரண்டு மாதங்களுக்குள் இளம் தொழிலதிபர் விக்ரம் தற்கொலை செய்திருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு காவல்துறைக்கும், முதல்வருக்கும், குடும்பத்தினருக்கும் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
சென்னை எர்ணாவூர், அன்னை சிவகாமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரன். இவர் எண்ணூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது. ``நான், எம்.டி.சி-யில் நடத்துநராக வேலை செய்துவருகிறேன். என் அப்பா ராஜேந்திரன் இறந்துவிட்டார். அம்மா இந்திராணி, என் தம்பி விக்ரம் (29) மற்றும் என் குடும்பத்தினருடன் குடியிருந்துவருகிறேன். என் தம்பி விக்ரமுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சூர்யா என்பவருடன் திருமணம் நடந்தது. எனது தம்பி டிப்ளோமா வரை படித்திருக்கிறார்.
விக்ரம், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை வீச்சூரில் அவரின் நண்பர்கள் சதீஷ், மருதுபாண்டி, சிவா மற்றும் என் மனைவி பார்வதி ஆகியோருடன் சேர்ந்து கூட்டாக நடத்திவந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் என் தம்பியைத் தனியாக விட்டுவிட்டு அவரது நண்பர்கள் சென்றுவிட்டனர். என் தம்பி தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆரம்பிக்கக் கடனாக வெளியில் 15,00,000 ரூபாய் வரை வாங்கி முதலீடு செய்திருந்தார். பணம் கொடுத்தவர்கள் மற்றும் பங்குதாரர்கள், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டதால் எனது தம்பி மனஉளைச்சலில் இருந்துவந்தார்.
12.3.2021-ல் அவருடைய மின்னஞ்சலிலிருந்து என்னுடைய மின்னஞ்சலுக்கு தன் தற்கொலைக்கு காரணமானவர்கள் என சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பியிருந்தார். ஆனால் அந்த மின்னஞ்சலை நான் பார்க்கவில்லை. இந்தச் சமயத்தில் 14.3.2021-ல் பிற்பகல் 3 மணியளவில் விக்ரம், வீட்டைவிட்டு டூ வீலரில் வெளியில் சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. அதனால் இரவு 9:30 மணியளவில் என் தம்பியின் செல்போன் நம்பருக்கு தொடர்புகொண்டு பேசினோம். அப்போது உடனே வீட்டுக்கு வருவதாகக் கூறினார். ஆனால் வரவில்லை. அதனால் நானும் என் குடும்பத்தினரும் தம்பி விக்ரமைத் தேடினோம்.

இந்தநிலையில் 15.3.2021-ம் தேதி காலை 8:30 மணியளவில் தாழங்குப்பம் ஆற்றோரம் கரையிலுள்ள பழைய சுகாதார மையத்தில் விக்ரம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதாக எண்ணூர் போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு சென்று பார்த்தபோது விக்ரமின் உடல் கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்தது. உடனே ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். தம்பியின் செல்போன், டூ வீலர் அங்கு இருந்தன. எனவே எனது தம்பியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குப் பிறகு நல்லடக்கம் செய்ய ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார். இதற்கிடையில் விக்ரம் தற்கொலைக்குச் சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக தகவல் வெளியானது. அது தொடர்பாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்திருக்கிறார். அதில் ``தமிழக அரசு அதிகாரிகளின் லஞ்சக் கெடுபிடிகள் தாங்க முடியாமல் எண்ணூரைச் சேர்ந்த இளம் தொழில் முனைவர் விக்ரம் முதல்வருக்கு கடிதம் எழுதிவிட்டு பொது இடத்தில் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். நெஞ்சம் பதறுகிறது. நான் லஞ்சப் பட்டியல் வெளியிட்டபோது மக்கள்தான் திருந்த வேண்டுமென சொன்ன கேடுகெட்ட அமைச்சர்கள் விக்ரமின் சாவுக்கு பொறுப்பேற்பார்களா?" எனக் கேள்வி கேட்டிருக்கிறார்.
இது குறித்து எண்ணூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிளாஸ்டின் டேவிட்டிடம் கேட்டதற்கு, ``தொழிலதிபர் விக்ரம் தற்கொலை குறித்து விசாரித்துவருகிறோம். அவர் இறப்பதற்கு முன் மின்னஞ்சலில் முதல்வரின் தனிப்பிரிவு உள்ளிட்ட சில அதிகாரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடத்தப்படும்" என்றார்.
விக்ரமின் மரணத்துக்குக் காரணம் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதா அல்லது கடன் தொல்லையா என்பது போலீஸ் விசாரணையில் தெரியவரும்.