Published:Updated:

சென்னை: பூட்டிய வீட்டுக்குள் ரத்தக்கறை.... சிக்கிய காதல் ஜோடி!

கொலை
கொலை ( Representational Image )

சென்னையில் பிசினஸ்மேனைக் கத்தியால் குத்திவிட்டு விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற காதல் ஜோடியை போலீஸார் ஒரு மணி நேரத்தில் பிடித்துள்ளனர்.

சென்னை ஜாபர்கான்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கத்திக் குத்து காயங்களுடன் இளைஞர் ஒருவர் உயிருக்குப்போராடுவதாக அடையாறு துணை கமிஷனர் விக்ரமனுக்குத் தகவல் கிடைத்தது. உடனே இரவுப் பணியிலிருந்து போலீஸ் டீமுக்கு துணை கமிஷனர் விக்ரமன் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு உதவி கமிஷனர் சுப்புராயன், இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சவுரிராஜன் மற்றும் போலீஸார் விரைந்துச் சென்றனர். அங்கு உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பு
அடுக்குமாடி குடியிருப்பு

இதையடுத்து இளைஞர் குறித்து போலீஸார் விசாரித்தபோது அவரின் பெயர் தீபக் (22), வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. வடமாநிலங்களிலிருந்து பட்டுப்புடவைகளை வாங்கி வந்து சென்னையில் விற்று வந்த தீபக், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். உடனடியாக போலீஸார் தீபக் குடியிருந்த வீட்டுக்கு சென்றனர். வீடு பூட்டப்பட்டிருந்தது. பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது ரத்தக்கறைகள் இருந்தன.

இதையடுத்து தீபக்குடன் தங்கியிருந்தது யாரென்று போலீஸார் விசாரித்தபோது ஹம்தன் (26) என்ற வடமாநில இளைஞர் எனத் தெரியவந்தது. அதனால் அவர் குறித்து போலீஸார் விசாரித்தனர். இதற்கிடையில் அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, அரை மணி நேரத்துக்கு முன் வாடகைக் காரில் இளைஞரும் இளம்பெண்ணும் ஏறிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. உடனடியாக போலீஸார் அந்தக் கார் எங்கு செல்கிறது என்பதை சிசிடிவி மூலம் கண்காணித்தனர். கார், விமான நிலையத்தை நோக்கிச் செல்வதை போலீஸார் கண்டுபிடித்தனர்.

காதலி ரசியாபேகம்
காதலி ரசியாபேகம்

உடனடியாக இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தலைமையிலான டீம், சைரன் வைத்தக் காரில் இளைஞனும் இளம்பெண்ணும் விமான நிலையத்துக்குள் செல்வதற்கு முன் வேகமாக சென்றது. பின்னர் விமான நிலையத்தில் அவர்களுக்காக போலீஸார் காத்திருந்தனர். இந்தச் சமயத்தில் காரை விட்டு இறங்கிய அவர்கள் விமான நிலையத்துக்குள் நுழைந்தனர். அப்போது அவர்களைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விமான நிலையத்தில் நள்ளிரவில் போலீஸார் இருவரைப் பிடித்தச் சம்பவத்தை அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியோடு பார்த்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``பிசினஸ்மேன் தீபக் வீட்டில் சமையல் வேலை செய்து பார்த்து வந்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த ஹம்தன். இவரின் காதலி நிலா அக்தர் என்கிற ரசியா பேகம் (22). இவர், கொல்கத்தாவைச் சேர்ந்தவர். காதலனைப் பார்க்க ரசியா பேகம் அடிக்கடி சென்னை வருவார். அப்போது நிலாவுக்கும் தீபக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் சென்னை வந்த நிலா, தீபக் வீட்டில் தங்கியிருந்துள்ளார். சம்பவத்தன்று இரவு தீபக், ஹம்தன் ஆகியோர் மதுஅருந்தியுள்ளனர். அப்போது ஹம்தன், தன்னை பட்டுப்புடவை பிசினஸில் பார்ட்னராகச் சேர்த்துக் கொள்ளும்படி தீபக்கிடம் கூறியுள்ளார்.

ஹம்தன்
ஹம்தன்
சென்னை: `பிரச்னை இல்லாத உலகத்துக்குச் செல்கிறேன்!' -  துப்பாக்கியால் சுட்டு அதிகாரி  தற்கொலை

அதற்கு தீபக், கொரோனாவால் பிசினஸ் டல்லாக இருப்பதாகத் தெரிவித்ததோடு நிலா குறித்து தவறாகப் பேசியதால் ஆத்திரமடைந்த ஹம்தன், சமையல் அறையிலிருந்து கத்தியை எடுத்துக் கொண்டு வந்து தீபக்கை சரமாரியாக வெட்டியுள்ளார். பின்னர் பெட்ரோலை ஊற்றி தீபக்கின் வயிற்றுப் பகுதியில் தீ வைத்துள்ளார். அடுத்து மாடியிலிருந்து தீபக்கை கீழே தள்ளி விட்ட ஹம்தன், காதலி ரசியா பேகத்தை அழைத்துக் கொண்டு விமானம் மூலம் சொந்த ஊருக்குச் தப்பிச் செல்லும்போது பிடித்துவிட்டோம்" என்றார்.

காவல் நிலையத்தில் காதல் ஜோடியிடம் நடந்த விசாரணையில் பாலியல் தொழிலில் கிடைத்த பணத்தைப் பங்குபோடுவதில் தகராறு ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதுதொடர்பாக இருவரிடமும் தீவிர விசாரணை நடந்தது. மேலும் சிகிச்சையிலிருக்கும் தீபக்கிடம் விசாரித்தால்தான் உண்மையில் என்ன நடந்தது என்நு தெரியவரும் என்கின்றனர் போலீஸார்.

தொடர்ந்து காதல் ஜோடியிடம் போலீஸார் தீபக்கைக் கொலை செய்ய முயற்சி செய்தது தொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணைக்குப்பிறகு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இரவு பணியிலிருந்த போலீஸ் டீம் சம்பவம் நடந்த ஒருமணி நேரத்துக்குள் துரிதமாக செயல்பட்டு ஹம்தன், அவனின் காதலி ரசியா பேகத்தை பிடித்ததற்கு துணை கமிஷனர் விக்ரமன் பாராட்டியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு