Published:Updated:

தூக்க மாத்திரை; 6 மணி நேர பயணம்!- சென்னை தொழிலதிபர் மனைவி கொலையில் சிக்கிய புரோக்கர்

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியை நம்பவைத்துக் கொலை செய்த பெங்களூரு புரோக்கர் மற்றும் அவரின் நண்பர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

Vijaya lakshmi
Vijaya lakshmi

சென்னை மடிப்பாக்கம் ராஜராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் சங்கர். கிரானைட் தொழில் செய்துவந்தார். கடந்த 2006-ம் ஆண்டு சங்கர் இறந்துவிட்டார். இவருக்குச் சொந்தமான வீடு பெங்களூரில் உள்ளது. சங்கர் இறந்தபிறகு அவரின் மனைவி விஜயலட்சுமி (60) சென்னை மடிப்பாக்கத்தில் சொந்தமாக வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். இந்தநிலையில், பெங்களூரு வீட்டை விற்க விஜயலட்சுமி முயற்சி செய்தார். அப்போது பெங்களூரைச் சேர்ந்த நிலபுரோக்கர் பாஸ்கர் என்பவரை விஜயலட்சுமி வீடு விற்பது தொடர்பாக சந்தித்துள்ளார். இதற்காக அடிக்கடி விஜயலட்சுமி பெங்களூருக்குச் சென்றுவந்தார்.

murder
murder
Representational Image

கடந்த 4-ம் தேதி வீட்டைவிட்டு வெளியில் சென்ற விஜயலட்சுமி வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் அண்ணன் சுகுமாறன், மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் துணை கமிஷனர் பிரபாகர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சவுரிநாதன், இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. காணாமல் போன விஜயலட்சுமியின் செல்போன் அழைப்புகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது மயிலாப்பூரில் உள்ள வழக்கறிஞரைச் சந்திக்க விஜயலட்சுமி சென்றது தெரியவந்தது. இதனால் மயிலாப்பூர் வழக்கறிஞரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போதும் விஜயலட்சுமி குறித்த தகவல் போலீஸாருக்கு கிடைக்கவில்லை.

இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார், விஜயலட்சுமி வீடு மற்றும் மயிலாப்பூர் வழக்கறிஞர் வீடு ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது விஜயலட்சுமி காரில் ஏறிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. அந்த கார் தொடர்பாக போலீஸார் விசாரித்தனர். அப்போது பெங்களூருரைச் சேர்ந்த நிலபுரோக்கருடன் விஜயலட்சுமி காரில் சென்றதை போலீஸார் கண்டறிந்தனர். அதன்பிறகு பாஸ்கரிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், விஜயலட்சுமி குறித்து எந்தத் தகவலும் தனக்குத் தெரியாது என்று கூறினார். அதை நம்பாத மடிப்பாக்கம் போலீஸார், பாஸ்கரின் செல்போனை ஆய்வு செய்தனர். அதில் விஜயலட்சுமி காணாமல் போன தினத்தன்று பாஸ்கர் அவருடன் போனில் பேசியது தெரியவந்தது. இதனால் பாஸ்கரிடம் போலீஸார் மீண்டும் விசாரித்தனர். அப்போதும் விஜயலட்சுமி குறித்த தகவலை பாஸ்கர் கூறாமல் அமைதியாக இருந்தார்.

cctv camera
cctv camera
Representational Image

இதனால், போலீஸார் தங்களின் பாணியில் பாஸ்கரிடம் விசாரித்தனர். அப்போது அவர், பெங்களூரு வீட்டை அபகரிக்க விஜயலட்சுமியை எரித்துக் கொலை செய்துவிட்டதாகக் கூறினார். இந்தத் தகவல் விஜயலட்சுமியின் உறவினர்களுக்குத் தெரிந்ததும் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன்பிறகு பாஸ்கரிடம் தனிப்படை போலீஸார் விசாரித்தபோது அவர் கூறிய தகவல்களை போலீஸார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

``பெங்களூரில் உள்ள வீட்டை விற்க விஜயலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறிமுகமானார். விஜயலட்சுமியின் கணவர் சங்கர், தொழில் தேவைக்காக பெங்களூரைச் சேர்ந்த பெண் பைனான்ஸியரிடம் கடனாகப் பணம் வாங்கியுள்ளார். அதற்காக பெங்களூரு வீட்டின் ஆவணங்களை அவரிடம் கொடுத்திருந்தார். சங்கர் இறந்ததும் அந்த வீட்டை பெங்களூரு பெண் பைனான்சியர் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தீர்ப்பு விஜயலட்சுமிக்கு சாதகமாக வந்தது. அதன்பிறகு அந்த வீட்டை விற்பது தொடர்பாக என்னை அடிக்கடி விஜயலட்சுமி சந்தித்தார். விஜயலட்சுமியின் குடும்பப் பின்னணி குறித்து எனக்கு முழுமையாகத் தெரியும். இதனால் விஜயலட்சுமியை ஏமாற்றத் திட்டமிட்டேன்.

Death
Death
Representational image

இதற்கிடையில், பெங்களூரு வீட்டை வாங்க விருப்பம் தெரிவித்த சிலரிடம் நான் முன்பணம் வாங்கினேன். அதற்காக விஜயலட்சுமியின் கையொப்பத்தை போலியாக நானே போட்டேன். பணம் கொடுத்தவர்கள் எனக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால்தான் விஜயலட்சுமியைக் கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்பிறகு பெங்களூரு வீட்டை நானே விற்றுவிட முடிவு செய்தேன். இதற்காக கடந்த 4-ம் தேதி நானும் என்னுடைய நண்பர் சதீஷ் ஆகியோர் சென்னை வந்தோம். சென்னையில் விஜயலட்சுமியை சந்தித்து வீட்டை ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு விலை பேசியதாகக் கூறினேன். அதை அவரும் நம்பினார். பிறகு பெங்களூரு வீட்டை விற்க விஜயலட்சுமியை அங்கு காரில் அழைத்துச் சென்றேன். 6 மணி நேர பயணத்தின்போது குளிர்பானத்தில் தூக்க மாத்திரைகளைக் கலந்து அவருக்குக் கொடுத்தேன்.

காரின் பின்னால் இருக்கையில் மயங்கிக் கிடந்த விஜயலட்சுமியை பெங்களூருக்கு அழைத்துச் சென்றேன். அங்கு சென்றபிறகு விஜயலட்சுமியை எழுப்பினேன். ஆனால், அவர் கண்விழிக்கவில்லை. இதனால் அவர் இறந்துவிட்டதாகக் கருதி பெங்களூரு பேத்மங்கலம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு காரில் விஜயலட்சுமியைக் கொண்டு சென்றேன். அங்கு அவரின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தேன். பிறகு அங்கிருந்து சதீஷும் நானும் தப்பிச் சென்றுவிட்டோம். விஜயலட்சுமி உயிரோடு இல்லாததைப் பயன்படுத்தி பெங்களூரு வீட்டை விற்க முயற்சி செய்தேன். ஆனால் போலீஸார் விஜயலட்சுமி தொடர்பாக என்னிடம் விசாரித்தனர். முதலில் அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. இதனால் அவர்களின் கேள்விகளுக்குத் தைரியமாக பதிலளித்தேன். இந்தச் சமயத்தில் விஜயலட்சுமியை நான் காரில் அழைத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள், போனில் பேசிய ஆதாரங்களை என்னிடம் காண்பித்த சென்னை போலீஸாரின் கிடுக்குப்பிடி கேள்விகளால் சிக்கிக்கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

காதல் விவகாரத்தில் தீ வைத்து இளைஞர் கொலை!- அதிர்ச்சியில் தாய் மரணம்

சம்பவம் நடந்த இடம் பெங்களூரு பேத்மங்கலம் பகுதி என்பதால் அங்குள்ள போலீஸாருக்கு மடிப்பாக்கம் போலீஸார் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சென்னை வந்த பேத்மங்கலம் போலீஸாரிடம் பாஸ்கரை மடிப்பாக்கம் போலீஸார் ஒப்படைத்தனர். விஜயலட்சுமியை எரித்துக் கொலைசெய்த இடத்தை பாஸ்கர் அடையாளம் காட்டினார். அதைப்பார்த்த விஜயலட்சுமியின் உறவினர்கள் கதறி அழுதனர். பிறகு விஜயலட்சுமியின் அஸ்தியை பெங்களூரிலிருந்து எடுத்துவந்த உறவினர்கள், தங்களின் சொந்த ஊரான கும்பகோணத்துக்கு கொண்டுசென்றுள்ளனர். விஜயலட்சுமி கொலையில் கைதான பாஸ்கர், சதீஷ் ஆகிய இருவரும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.