
சென்னையில் ஆசையாக வளர்த்த கோழிகளைப் பக்கத்து வீட்டினர் கற்களைக் கொண்டு தாக்கியதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்துள்ளது.
கோழிகள்
சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் ஆரிக்கம்பேடு அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சசிகுமார். இவர் கார் டிரைவர். இவர் தன் மகனின் ஆசைக்காக கடந்த வாரம் வீட்டுக்கு மூன்று கோழிகளை வாங்கி வந்துள்ளார். கோழிகளை காலையில் சசிகுமார் குடும்பத்தினர் திறந்து விட்டுள்ளனர். தெருவில் நின்ற கோழிகள், சசிகுமார் வீட்டின் அருகில் உள்ள காலி நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்துள்ளன.

பின்னர் கோழிகள், சசிகுமாரின் வீட்டில் அருகில் குடியிருக்கும் அன்பழகனின் வீட்டுக்குள் சென்றன. அதனால் அன்பழகனின் மனைவி அழகுமீனா கோழிகளை கல்லால் அடித்து விரட்டியுள்ளார். அதைப் பார்த்த சசிகுமாரின் மனைவி துர்காதேவி, ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று அழகுமீனாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அழகுமீனா, `உங்கள் வீட்டு கோழிகள் இங்கு வந்ததால் விரட்டி விட்டேன்’ என்று கூறியுள்ளார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பின்னர், அந்தச் சண்டை முற்றியுள்ளது. மனைவிகளுக்கு ஆதரவாக இருவரின் கணவர்களும் சண்டை போட்டுள்ளார். அது, சசிகுமார் மற்றும் அன்பழகனுக்கும் இடையே மோதலாக மாறியுள்ளது.
ஒருவரை ஒருவர் சரமாரியாக கைகளால் தாக்கினர். இந்தச் சமயத்தில் அன்பழகன் மற்றும் அவரின் குடும்பத்தினர் சசிகுமாரை கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கீழே விழுந்த சசிகுமார் மூச்சு பேச்சு இல்லாமல் கிடந்துள்ளார். அதைப்பார்த்த அன்பழகன் மற்றும் அவரின் குடும்பத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். மயக்கமடைந்த சசிகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் சசிகுமாரின் சடலத்தைக் கைப்பற்றி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சசிகுமாரை கொலை செய்த வழக்கில் அன்பழகனை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஊரடங்கு என்பதால் சசிகுமாரின் மகன் வீட்டிலேயே இருந்துள்ளார். அவருக்கு பறவைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வம் உண்டு. அதனால் கோழிகளை வாங்கி வீட்டில் வளர்த்துள்ளார். அந்தக் கோழிகளால் ஏற்பட்ட தகராறு, சசிகுமாரின் உயிரைப் பறித்துள்ளது. சசிகுமாரை அன்பழகன் பிடித்து தள்ளியபோது கீழே விழுந்துள்ளார். அப்போது அவரின் தலை, அங்கு கிடந்த கல்லில் மீது மோதியது. அதனால்தான் அவர் உயிரிழந்துவிட்டார். பிரேத பரிசோதனைக்குப்பிறகு சசிகுமாரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம்" என்றனர்.
கோழிச் சண்டை கொலையில் முடிந்துள்ளது திருமுல்லைவாயலில் சோகத்தையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.