Published:Updated:

சென்னை: ஐ.சி.எஃப்-ல் வேலை வாங்கித் தருவதாக ரூ.12 லட்சம் மோசடி; 7 பேர் கைதான பின்னணி!

டில்லிபாபு
டில்லிபாபு

ஐடிஐ படித்த புருஷோத்தம்மனிடம் சென்னை ஐ.சி.எஃப்-ல் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 12 லட்சம் மோசடி செய்ததோடு போலி நியமன ஆர்டரைக் கொடுத்த 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

சென்னை அன்னனூர் சிவசக்தி நகரைச் சேர்ந்த புருஷோத்தம்மன் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

``நான் என்னுடைய தந்தை தாமரைக்கண்ணன், அம்மா கிரிஜா, தங்கை கீதா ஆகியோருடன் வசித்து வருகிறேன். நான் ஐடிஐ படித்துள்ளேன். என்னுடைய தந்தை தாமரைக்கண்ணன், கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ரயில்வே ஐ.சி.எஃப்பில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்றவர். எனக்கு சரியான வேலை இல்லை. அதனால் ஐ.சி.எஃப் ஊழியர் டில்லிபாபுவிடம் எனக்கு ரயில்வேயில் ஏதாவது வேலை வாங்கித் தரமுடியுமா என அப்பா தாமரைக்கண்ணன் கேட்டார். அதற்கு டில்லிபாபு 12 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று கூறினார்.

கைது
கைது

அந்தப் பணத்தை கொடுக்க அப்பா ஒப்புக் கொண்டார். அதன்பிறகு என்னிடம் ஐ.சி.எஃப்-ல் மேலாளரின் பி.ஏ என்று பவுலின் டாமினிக் என்கிற ஜெயசீலி என்பவரை ஐ.சி.எஃப் பஸ் நிலையத்தில்வைத்து எனக்கு டில்லிபாபு அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பணம் கொடுத்து ரயில்வேயில் நிறைய பேருக்கு வேலைவாங்கிக் கொடுத்திருப்பதாக ஜெயசீலியும் டில்லி பாபுவும் கூறினார். அவர்கள் கூறிய ஆசைவார்த்தைகளை நம்பி ஜெயசீலியின் வங்கி கணக்கில் பணத்தை அனுப்பினோம். கடந்த 16.102019-ம் தேதி ஐ.சி.எஃப் பஸ் நிலையத்தில் வைத்து 20 ஆயிரம் ரூபாயை அட்வான்ஸாக கொடுத்தேன். அப்போது தங்கையின் கணவர் பிரபு, குமார் ஆகியோர் இருந்தனர்.

அதன்பிறகு 21.10.2019-ம் தேதி 2,80,000 ரூபாயும் 26.10.2019- ல் 2,00,000 ரூபாயும் 8.11.20219-ல் 4,00,000 ரூபாயும் 21.11.2019-ல் 50,000 ரூபாயும் 13.12.2019-ல் 50,000 ரூபாயும் என பல கட்டங்களாக டில்லிபாபு, ஜெயசீலியிடம் ரூ.12 லட்சம் ரூபாயை கொடுத்தேன். அதன்பிறகு எனக்கு ரயில்வேயில் மெக்கானிக்கல் அசிஸ்ட்டென்ட் வேலைக்கான ஆர்டரை ஜெயசீலி வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தார். அந்த ஆர்டரை எடுத்துக் கொண்டு ஐ.சி.எஃப்-க்குச் சென்றேன். அப்போது அந்த ஆர்டர், போலி எனத் தெரியவந்தது. உடனே நானும் என்னுடைய அப்பாவும் டில்லிபாபு, ஜெயசீலியிடம் விவரம் கேட்டோம். அதற்கு அவர்கள் 10 நாளில் பணத்தை திரும்ப தந்துவிடுவதாகக் கூறினர். ஆனால் பணம் தரவில்லை. எனவே ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றியதோடு போலி நியமன ஆர்டரைக் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
சென்னை: லோன் தருவதாக போலி கால் சென்டர் நடத்தி மோசடி - ஆண் நண்பருடன் சிக்கிய பெண்!

இந்தப் புகாரை விசாரிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அந்தப் பிரிவின் உதவி கமிஷனர் சுரேந்தரன், இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 406, 420, 465, 468, 34 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தார். மேலும் இந்தப் புகாரை இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சென்னை அம்பத்தூர் சோழம்பேடு ரோடு பல்லவா பிளாட்ஸில் குடியிருக்கும் ஜெயசீலி (47), கொளத்தூர் முருகன் நகரில் குடியிருக்கும் டில்லிபாபு (47), தண்டையார்பேட்டை காந்திநகரைச் சேர்ந்த பிரிதிவிராஜ் (36), மதுரை நரிமேடு பகுதியைச் சேர்ந்த சுந்தரம் (38), கேரளமாநிலம் ஆல்பி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜா (46), கேரளாவைச் சேர்ந்த சுரேந்திரன் (59ஸ்ரீ, திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கனவாபீர் (39) ஆகியோர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 7 பேரையும் போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து போலி பணி நியமன ஆர்டர்கள், மோசடி செயலுக்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு