Published:Updated:

ஒரு வாரம் பயிற்சி; ரூ.1,000 சம்பளம்; 2 நாள் விடுமுறை!- ஆந்திரா டு சென்னை வந்த 10 செல்போன் திருடர்கள்

தேர்வுக்குப் பயிற்சி அளிப்பதுபோல செல்போன் திருட ஒருவாரம் பயிற்சி, தினமும் ஆயிரம் ரூபாய் சம்பளம், வாரத்தில் 2 நாள் விடுமுறை என அறிவித்த செல்போன் திருட்டுக் கும்பலின் தலைவன் ரவி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

cell phone accused
cell phone accused

சென்னையில் செல்போன் திருட்டுச் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்துவருகின்றன. நடந்து செல்பவர்கள், பேருந்துகளில் செல்பவர்கள், விலைஉயர்ந்த செல்போன்களை வைத்திருப்பவர்களைக் குறிவைத்து திருட்டுக் கும்பல் கைவரிசை காட்டிவருகிறது. சென்னை மாநகரம் முழுவதும் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும் செல்போன் திருட்டுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.

cell phone accused
cell phone accused

சென்னை பூக்கடை சரக உதவி கமிஷனர் லட்சுமணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜாபர், சீனிவாசன், தலைமைக் காவலர்கள் யாகியா, முரளி, நவ்சத், முகமது ஆகியோர் கொண்ட டீம், சென்னையில் தொடர்ந்து செல்போன்களைத் திருடும் கும்பலைக் கைது செய்துள்ளது. விசாரணையில் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த வெங்கடேஷ் (27), ராஜேஷ், ஹெச் சாய் (24), மேகல் ஞானி (19), நாகதுர்கா ராவ் (24), ஜேசு (25), விஜயவாடாவைச் சேர்ந்த தொண்ட சீனு எம்.எல்.ஏ (28), மற்றும் பிண்டிராஜ், ராகுல் ரவி, மகேஷ் ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது. இந்தக் கும்பலுக்குத் தலைவனாக ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த ரவி செயல்பட்டுள்ளார். இந்தக் கும்பலிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``சென்னையில் செல்போன் திருட்டு தொடர்பாக தினமும் 10க்கும் மேற்பட்ட புகார்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 3 மாதங்களுக்கு முன் செல்போன் திருட்டு தொடர்பாக ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரைப் பிடித்தோம். அவரிடம் விசாரித்தபோது செல்போனைத் திருடி ஆந்திராவைச் சேர்ந்த ரவியிடம் கொடுப்பதாகக் கூறினார். அதன்பிறகு இன்னொரு செல்போன் திருடனைப் பிடித்தோம். அவரும் ரவியின் பெயரைக் கூறினார். இதனால் ரவி மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரவி தொடர்பான அனைத்துத் தகவல்களையும் சேகரித்தோம்.

cellphone accused
cellphone accused

ஆந்திராவைச் சேர்ந்த ரவி, கூலி வேலை செய்துவந்தார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் வேலை தேடி சில ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்தார். சென்னையிலும் அவருக்கு வருமானம் இல்லை. இதனால் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். திருடிய செல்போனை விற்றுள்ளார். செல்போன் திருட்டில் எளிதாக பணம் கிடைப்பதால் தொடர்ந்து செல்போன் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இதனால் ரவிக்குத் தேவையான பணம் செல்போன் திருட்டு மூலம் கிடைத்துள்ளது.

சென்னையிலிருந்து சொந்த ஊருக்குச் சென்ற ரவி, ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார். அவரின் நண்பர்கள் ரவியிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர், தன்னுடைய நெருங்கிய நண்பர்களிடம் சென்னையில் செல்போன் திருடினால் என்னைப் போல சந்தோஷமாக வாழலாம் என்று கூறியுள்ளார். இதையடுத்து ரவியின் தலைமையில் 10 பேர் சென்னை வந்துள்ளனர். அவர்களை சோழவரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து ரவி தங்க வைத்துள்ளார். அங்கு, செல்போனை எப்படித் திருடுவது என ஒரு வாரம் பயிற்சி அளித்துள்ளார். கூட்டமாக இருக்கும் பஸ்களில் எப்படி செல்போன் திருடுவது என்பது தொடர்பாக இந்தக் கும்பல் வீட்டிலேயே ஒத்திகையும் பார்த்துள்ளது.

pindi vengatesh
pindi vengatesh

இதையடுத்து ரவியின் தலைமையிலான கும்பல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் சென்றுள்ளனர். சென்னை சென்ட்ரலிருந்து புறப்படும் பஸ்களில் எந்த பஸ்சில் அதிக கூட்டம் இருக்கிறதோ அந்த பஸ்சை ரவி தலைமையிலான கும்பல் தேர்வு செய்யும். பிறகு ஒரு பஸ்சுக்கு மூன்று பேர் வீதம் பஸ்சில் ஏறி படியிலேயே பயணம் செய்வார்கள். பஸ்சின் படியில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சட்டை, பேன்ட் பைகளில் செல்போனை வைத்திருப்பவர்களின் கவனத்தை ஒருவர் திசைதிருப்புவார். செல்போனை வைத்திருப்பவரின் அருகில் நிற்கும் இன்னொருவர் நைசாக செல்போனைத் திருடி படியில் நிற்கும் கூட்டாளியிடம் கொடுத்துவிடுவார். ஓடும் பஸ்சிலேயே செல்போனை வாங்கியவர் இறங்கிவிடுவார். இதுதான் ரவி, தன்னுடைய டீமுக்குக் கற்றுக் கொடுத்த டெக்னிக். அடுத்து முக்கியமாக செல்போன் கைக்கு வந்ததும் சிம்கார்டு, மெமரி கார் ஆகியவற்றை செல்போனிலிருந்து எடுத்து தூக்கி எறிந்துவிட வேண்டும் என்று ரவி பயிற்சியின்போது கூறியுள்ளார். இதையடுத்து செல்போனைத் திருடிய கும்பல் அடுத்த பஸ்நிறுத்தத்தில் இறங்கி அடுத்த பஸ்சில் ஏறி அடுத்த செல்போனுக்கு ஸ்கெட்ச் போடுவார்கள்.

தினமும் 30க்கும் மேற்பட்ட செல்போன்களைத் திருடியதும் ரவியிடம் அதைக் கொடுப்பார்கள். செல்போன்களைத் திருடியவர்களுக்கு தினமும் தலா ஆயிரம் ரூபாய் சம்பளமாக ரவி கொடுப்பார். 3 செல்போன்களுக்கு மேல் திருடிக் கொடுப்பவர்களை ரவி சிறப்பாகவும் கவனிப்பார். இதனால் தினமும் 3 செல்போன்களுக்கு மேல் ஒரு கும்பல் திருடுவதை டார்க்கெட்டாக வைத்துள்ளது. மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் நாள்களில் காலை முதல் இரவு வரை செல்போன் கிடைக்கும் வரை திருட்டில் இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது.

திங்கள் முதல் வெள்ளி வரை திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடும் இந்தக் கும்பலுக்கு சனி, ஞாயிற்றுக் கிழமை விடுமுறை. இதனால் அந்த நாள்களில் இவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவிடுவார்கள். திருடிய செல்போன்கள் அனைத்தையும் ரவி, ஆந்திராவுக்குக் கொண்டு செல்வார். பிறகு அங்கு அதை விற்று பணமாக்கிவிட்டு திங்கள்கிழமை கும்பலுடன் சென்னை வந்துவிடுவார். இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஒரு இடத்தில் 2 மாதங்கள் மட்டுமே தங்கியிருப்பார்கள். அதன்பிறகு உடனடியாக இருப்பிடத்தை மாற்றிவிடுவார்கள். ஆவடி, நெற்குன்றம் என சென்னையில் பல பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.

ravi
ravi

கடந்த மூன்று நாள்களில் மட்டும் இந்தக் கும்பல் 40 செல்போன்களைத் திருடியுள்ளது. விலை உயர்ந்த செல்போன்களை மட்டுமே திருட வேண்டும் என்பது ரவியின் பிரதான கட்டளை. இந்தக் கும்பலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 40 செல்போன்களில் 25 செல்போன்களின் உரிமையாளர்களைக் கண்டறிந்துவிட்டோம். ஐஎம்இஐ நம்பர் மூலம் உரிமையாளர்களின் விவரங்களைத் தேடிவருகிறோம். இதனால் ரவி தலைமையிலான செல்போன் திருட்டுக் கும்பல் கைது செய்யப்பட்ட பிறகு சென்னையில் செல்போன் திருட்டு குறையும் என எதிர்பார்க்கிறோம்" என்றார்.