Published:Updated:

`ரயிலில் வந்த குண்டுகள்; மாதக்கணக்கில் கிடந்த பார்சல்!' - சென்னை சென்ட்ரல் அதிர்ச்சி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்த பார்சலை வாங்க யாரும் வரவில்லை. அதனால் அந்தப் பார்சலை ஏலம் விட முயன்றபோது அதில் கையெறி மற்றும் கண்ணிவெடி வகை குண்டுகள் இருந்தன.

பார்சலில் வந்த குண்டுகள்
பார்சலில் வந்த குண்டுகள்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து சென்னை டாக்டர் எம்.ஜி.ராமசந்திரன் மத்திய ரயில் நிலையத்துக்குக் கடந்த ஏப்ரல் மாதம் வந்த சங்கமித்ரா ரயிலில் ஒரு பார்சல் வந்தது. அந்தப் பார்சலை வாங்க சில மாதங்களாக யாரும் வரவில்லை. இதனால் அந்த பார்சலை யானைக் கவுனியில் உள்ள ரயில்வே பார்சல் குடோனுக்கு ஊழியர்கள் அனுப்பிவைத்தனர். குறிப்பிட்ட காலத்துக்குப்பிறகு ரயிலில் அனுப்பப்படும் பார்சலுக்கு யாரும் உரிமைக் கோரவில்லையென்றால், அதை ஏலம் விடுவது வழக்கம். அதன்படி சங்கமித்ரா ரயிலில் வந்த பார்சலையும் ஏலம் விட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.

டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்
டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்

அதைத் தொடர்ந்து அந்த பார்சலை அதிகாரிகள் முன்னிலையில் ரயில்வே ஊழியர்கள் பிரித்தனர். அப்போது பாதுகாப்பாக அந்தப் பார்சல் காணப்பட்டது. அதைப் பிரித்தபோது உள்ளுக்குள் ராணுவத்தினர் பயன்படுத்தும் குண்டுகள் இருந்தன. இதனால் ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். குண்டுகள் வெடித்துவிடுமோ என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டது. உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கும் ரயில்வே போலீஸாருக்கும் பார்சல் அலுவலகத்திலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் அந்த பார்சல் எங்கிருந்து வந்தது, யாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது போன்ற விவரங்களை ரயில்வே ஊழியர்கள் சேகரித்தனர். அப்போது, டெல்லி ராணுவ முகவரியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தகவல் தெரியவந்தது. ஆனால் தெளிவான பெறுநர் முகவரி இல்லை. இந்தக்குழப்பத்தால் அது, சென்னை பார்சல் அலுவலகத்திலேயே கேட்பாரற்று கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தியதில் பார்சலில் வந்த கையெறி மற்றும் கண்ணிவெடி வகைக் குண்டுகள் அனைத்தும் டம்மி என்பது தெரியவந்தது. இதையடுத்தே அனைவரும் நிம்மதியடைந்தனர்.

டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்
டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்

இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், ``டெல்லி ராணுவ முகாமிலிருந்து அந்தமானுக்கு அந்தப் பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் 172 பட்டாலியனான அந்தமான் என்ற முகவரிக்குப்பதில் 72 என்று தவறுதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 72வது பட்டாலியன் என்பது சென்னை ராணுவ முகாம் முகவரி. அதனால்தான் டெல்லியிலிருந்து அனுப்பப்பட்ட பார்சல் சென்னைக்கு வந்துள்ளது. ஆனால், அதுதொடர்பான எந்தத் தகவல்களும் சென்னை ராணுவ முகாம் அலுவலகத்துக்கு வரவில்லை.

இதனால்தான் அந்த பார்சலை எடுக்க யாரும் வரவில்லை. அதே நேரத்தில் அந்தமான் ராணுவ முகாமினரும் பார்சலைக் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் சென்னையில் நீண்ட காலமாக அந்த பார்சல் தேங்கியது. தற்போது அந்தமான் ராணுவ முகாமிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தப் பார்சலை பெற்றுக் கொள்வதாகக் கூறியுள்ளனர்.

பார்சலில் வந்த டம்மி குண்டுகள்
பார்சலில் வந்த டம்மி குண்டுகள்

இதையடுத்து அந்த பார்சல் அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும் அதில் 10 குண்டுகள் இருந்தன. அவை கையெறி குண்டுகள் மற்றும் கண்ணிவெடிகள் வகைகளைச் சேர்ந்தவை. ராணுவத்தில் புதியதாகச் சேரும் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்க இந்த டம்மி குண்டுகள் பயன்படுத்தப்படும்" என்றனர்.

பார்சலில் வந்த கையெறி மற்றும் கண்ணிவெடி குண்டுகளால் சென்னையில் நிலவிய பதற்றத்துக்கு ரயில்வே போலீஸாரும் சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரிகளும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.