Published:Updated:

சந்தனத்தால் மறைக்கப்பட்ட நம்பர் பிளேட், 7 கி.மீ சேஸிங்! - ஹெல்மெட்டால் சிக்கிய `லட்டு' விஜயகுமார்

எஸ்.மகேஷ்

சென்னையில் பெண்ணிடம் செயினைப் பறித்துவிட்டு பைக்கில் தப்பிய `லட்டு' விஜயகுமாரை 7 கி.மீட்டர் தூரம் வரை சிசிடிவி உதவியுடன் பின்தொடர்ந்து போலீஸார் பிடித்துள்ளனர்.

lattu vijayakumar
lattu vijayakumar

சென்னையை அடுத்த மதுரவாயல், ஆலப்பாக்கம், அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் கடந்த 2-ம் தேதி நடந்து சென்றபோது கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்கச் செயினை பைக்கில் வந்த மர்ம நபர் பறித்துச் சென்றார். இதுகுறித்து மதுரவாயல் காவல் நிலையத்தில் ஹேமலதா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் விசாரணை நடத்தினார். இந்தச் சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்லத்துரை, விஜயகுமார், தலைமைக் காவலர்கள் விஜயகுமார், சசிகுமார் காவலர் வினோத், சுந்தரமூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

lattu vijayakumar
lattu vijayakumar

சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது ஹெல்மெட் அணிந்தநபர், ஹேமலதாவிடம் செயின் பறித்த காட்சி பதிவாகியிருந்தது. ஆனால், வாகனத்தின் நம்பர் சிசிடிவியில் தெளிவாகத் தெரியவில்லை. இதனால் செயின் பறித்த நபரைக் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.

செயினை வழிப்பறி செய்துவிட்டு பைக்கில் தப்பிச் சென்றவரை சிசிடிவி மூலம் பின்தொடர்ந்தனர். சில இடங்களில் அவர் தெருவுக்குள் நுழைந்து சென்றதால் சிசிடிவி கேமராவில் அவர் சிக்கவில்லை. இருப்பினும் விடாமல் அடுத்தடுத்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். ஹேமலதா கூறிய அடையாளத்தின்படி தீவிரமாகத் தேடிய போலீஸாருக்கு ராமாவரத்தில் உள்ள வொர்க்ஸ் ஷாப்பில் அந்த பைக் நின்றது தெரியவந்தது.

இதையடுத்து வொர்க்ஸ் ஷாப் உரிமையாளரிடம் போலீஸார் விசாரித்தபோது பைக் ஓனர் குறித்த விவரம் தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, `சம்பவத்தன்று நான் பைக்கில் எங்கும் செல்லவில்லை' என்று முதலில் கூறினார். அதன்பிறகு அவர், கடந்த 2-ம் தேதி தன்னுடைய நண்பர் `லட்டு' விஜயகுமார், கடைக்குச் செல்வதாகக் கூறி பைக்கை வாங்கிச் சென்ற விவரத்தை போலீஸாரிடம் தெரிவித்தார். இதையடுத்து விஜயகுமாரின் முகவரியை சேகரித்த போலீஸார் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடமிருந்து 7 சவரன் தங்கச் செயின், பைக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

lattu vijayakaumar
lattu vijayakaumar

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஹேமலதாவிடம் இருந்து செயினை பறித்த லட்டு விஜயகுமார், போரூரைச் சேர்ந்தவர். இவர் மீது கொரட்டூர் காவல் நிலையத்தில் 2012-ம் ஆண்டு வழிப்பறி செய்த வழக்கு ஒன்று பதிவாகியுள்ளது. அதன்பிறகு ஆட்டோ ஒன்றைக் கடனுக்கு வாங்கி விஜயகுமார் ஓட்டிவந்துள்ளார். ஆனால், போதிய வருமானம் இல்லாததால் கடன் கொடுத்தவர்கள், விஜயகுமாருக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதனால் கடனை செலுத்துவதற்காக செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிசிடிவி கேமராவில் பைக் நம்பர் தெரியாமல் இருக்க சந்தனத்தால் அதை மறைத்துள்ளார். அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் ஆர்.எஸ் என்ற அடையாளம் இருந்தது. அதையும் ஹேமலதா எங்களிடம் ஒரு தகவலாகத் தெரிவித்திருந்தார். சிசிடிவி கேமரா மட்டும் இல்லையெனில் விஜயகுமார் எங்களிடம் சிக்கியிருக்க மாட்டார்" என்றனர்.

Vikatan

விஜயகுமாரை அவரின் மாமா செல்லமாக `லட்டு' என்று அழைப்பதுண்டு. அதனால்தான் அவரது பெயரோடு இந்த அடைமொழியும் சேர்ந்து கொண்டது. போலீஸார், விஜயகுமாரை தேடிச் சென்றபோது அவர் வீட்டில் இல்லை. இதனையடுத்து, அவரது செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு, `சவாரிக்கு ஆட்டோ வேண்டும்' எனக் கூறியுள்ளனர். அதை நம்பி வந்த விஜயகுமாரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.