சென்னை: விஸ்வரூபம் எடுக்கும் வடசென்னை சிறுமி வழக்கு! - போக்சோ சட்டத்தில் நிருபர் கைது

வடசென்னையில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர், பா.ஜ.க பிரமுகர் கைதான நிலையில் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
கோவளத்தைச் சேர்ந்த பெண்ணின் மகளுக்கு வயது 15. வடசென்னையிலுள்ள உறவினர் வீட்டில் சில மாதங்களுக்கு முன்னர் அந்தச் சிறுமி தங்கியிருந்தார். சிறுமியின் உறவினர்கள் பாலியல் தொழில் புரோக்கர்களாக இருந்ததனர். அதனால் சிறுமியைக் கட்டாயப்படுத்தி ஒரு வார பேக்கேஜ் என்ற முறையில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கின்றனர். இந்தத் தகவல் தெரிந்ததும் சிறுமியின் அம்மா, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி மற்றும் போலீஸார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி சிறுமியின் சகோதரியின் உறவினர்கள் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மதன்குமார், அவரின் மனைவி பானு, மதன்குமாரின் அம்மா செல்வி, மதன்குமாரின் தங்கை சந்தியா, திருவொற்றியூரைச் சேர்ந்த மகேஷ்வரி (29), வனிதா (35), பூந்தமல்லியைச் சேர்ந்த விஜயா (45), புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன் (25) ஆகிய எட்டுப் பேரை 11.11.2020-ல் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தபோது பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் ராசேந்திரன் (46) என்பவர் கைதுசெய்யப்பட்டார்.
ராசேந்திரன் அளித்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி (45) கைதானார். சிறுமி பாலியல் வழக்கில் எண்ணூர் காவல் நிலைய சட்டம், ஒழுங்கு இன்ஸ்பெக்டர் புகழேந்தி கைதான சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ராயபுரத்தைச் சேர்ந்த காதேஸ்வரராவ் (33) என்பவர் கைதானார். தொடர்ந்து நடந்த விசாரணையில் சிறுமியைப் பாலியல் தொழில் மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மண்ணடியைச் சேர்ந்த பசுலுதீன் (32), ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது அசாருதீன் (35) ஆகியோர் 24-ம் தேதி கைதுசெய்யப்பட்டனர்.


Also Read
“வலிச்சா நீயும் கொஞ்சம் குடி!”
சிறுமி வழக்கில் தோண்டத் தோண்ட புற்றீசல்கள்போல தகவல்கள் வெளியானதால், துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் டீம் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. இந்தநிலையில் வடசென்னையில் தனியார் தொலைகாட்சி ஒன்றில் நிருபராக வேலை பார்த்த வினோபா ஜி (39) என்பவரை போலீஸார் இன்று கைதுசெய்தனர். இந்த வழக்கில் பா.ஜ.க பிரமுகர், போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறுமியின் உறவினர்கள் கைதாகியிருக்கும் நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தனியார் தொலைக்காட்சி நிருபர் வினோபா ஜி இந்த வழக்கில் சிக்கியது எப்படி எனப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு, ``சிறுமியின் உறவினரான பெண் ஒருவருக்கும், நிருபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகப் பழக்கம் இருந்துவந்திருக்கிறது. இந்தச் சமயத்தில்தான் சிறுமி குறித்த தகவல் நிருபருக்கு கிடைத்திருக்கிறது. அதன் பிறகே சிறுமியை நிருபர் சந்தித்திருக்கிறார். பாதிக்கப்பட்ட சிறுமியும், நிருபர் வினோபா ஜியை அடையாளம் காட்டியதையடுத்து அவரைக் கைதுசெய்திருக்கிறோம். நிருபர் வினோபா ஜியும் சிறுமியின் உறவுக்கார பெண்ணும் செல்போனில் பேசியதற்கான ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தேவையான கவுன்சலிங் மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்து கொடுத்திருக்கிறோம். இந்த வழக்கில் சிறுமி, அவரின் அம்மா ஆகியோருக்குக் கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியிருப்பதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திருக்கிறோம். சிறுமி கூறிய தகவல்களின்படி கடந்த இரண்டு மாதங்களில் அவர் பலருக்கு விருந்தாக்கப்பட்டிருக்கிறார். அதனால் அவரின் மனமும் உடலும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன. சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குறித்த பட்டியலைச் சேகரித்திருக்கிறோம். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துவருகிறோம். காவல்துறை, மருத்துவத்துறை என சமூகத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு சிறுமியின் வழக்கில் தொடர்பு இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அது, உண்மையல்ல. தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றார்.
சிறுமியின் பாலியல் வழக்கு சென்னை அயனாவரம் சிறுமி வழக்கைவிட விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கிறது.