
சென்னையில் மாடிக்கு மனைவியை அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்த கணவர், திடீரென மனைவியைக் கொலை செய்துவிட்டு, தப்பி ஓடிவிட்டார்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி, சுமித்ரா நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (30). மாங்காட்டில் அரிசி வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கும் குன்றத்தூரைச் சேர்ந்த கீர்த்தனா (27) என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியருக்குக் குழந்தை இல்லை. அதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்னர் கீர்த்தனா, தாய் வீட்டுக்கு வந்தார். அவரைப் பார்க்க பன்னீர்செல்வம் வந்திருந்தார்.

இருவரும் கீர்த்தனாவின் வீட்டின் மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது கணவன் - மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அதில் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம், மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து கீர்த்தனாவின் கழுத்தை அறுத்தார். அதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். கீர்த்தனாவின் அலறல் சத்தம் கேட்டு அவரின் பெற்றோர் மாடிக்கு ஓடி வந்தனர்.
அதைப் பார்த்த பன்னீர்செல்வம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து உயிருக்குப் போராடிய கீர்த்தனாவை மீட்டு குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவரின் பெற்றோர் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா இன்று உயிரிழந்தார். இது குறித்துத் தகவலறிந்த குன்றத்தூர் போலீஸார் கீர்த்தனாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த போலீஸார் பன்னீர்செல்வத்தைத் தேடிவருகின்றனர். இந்தத் தம்பதியருக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மனைவியை ஏன் பன்னீர்செல்வம் கொலை செய்தார் என்று தெரியவில்லை. அவரிடம் விசாரித்தால் மட்டுமே அதற்கான விடை கிடைக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.
மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்ட மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.