Published:Updated:

`காலையில் கல்லூரி; மாலையில் திருட்டு!' - ரயில்வே போலீஸாரிடம் சிக்கிய சென்னை மாணவி

சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், மின்சார ரயிலில் பார்ட் டைம்மாகத் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கல்லூரி மாணவியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவைகள்
கல்லூரி மாணவியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டவைகள்

சென்னை மின்சார ரயில்களில் திருட்டுச் சம்பவங்கள் வித்தியாசம் வித்தியாசமாக நடந்துகொண்டிருக்கின்றன. கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடுபவர்களைவிட அன்பாகப் பேசி திருடுபவர்கள் குறித்த தகவல்கள் ரயில்வே போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணிகளிடம் திருடுவதற்காகவே வேலூரிலிருந்து சென்னை வந்த தேவி என்ற பெண்ணை சமீபத்தில் எழும்பூர் போலீஸார் கைது செய்து 70 சவரன் தங்க நகைகளையும் 75,000 ரூபாயையும் பறிமுதல் செய்தனர். தேவி கைதுக்குப் பிறகும் திருட்டுச் சம்பவங்கள் குறையவில்லை

கைது செய்யப்பட்ட தேவி
கைது செய்யப்பட்ட தேவி

சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில்களில் காலை, மாலை நேரங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும். இந்தக் கூட்ட நெரிசலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தொடர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளார், சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர்.

இந்த வழித்தடத்தில் உள்ள ரயில்வே போலீஸாரிடம் தினமும் பயணிகள், தங்களின் உடமைகள் திருட்டுப் போனதாகப் புகார்கள் கொடுத்தனர். குறிப்பாக, மகளிர் ரயில் பெட்டியில்தான் திருட்டுச் சம்பவங்கள் அதிகமாக நடப்பதாக போலீஸாருக்குப் பெண்கள் புகார் கொடுத்திருந்தனர். இதனால் இந்த வழித்தடத்தில் மகளிர் பெட்டியில் ரயில்வே பெண் போலீஸார், சீருடை அணியாமல் சாதாரண உடையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தேவியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்
தேவியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள்

அப்போது ஒரு இளம்பெண்ணின் நடவடிக்கையில் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பெண்ணை ரயில்வே போலீஸார் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது அந்தப் பெண், கூட்டமான மகளிர் ரயில்பெட்டியின் இருக்கையில் அமர்ந்திருந்தபடி, நின்றுகொண்டிருக்கும் பெண்களிடம் `உங்களின் ஹேண்ட் பேக்கைக் கொடுங்கள், எதற்கு சிரமப்படுகிறீர்கள், நான் பத்திரமாக வைத்துக்கொள்கிறேன்' என்று அன்பாகக் கேட்டதை போலீஸார் கவனித்தனர். பிறகு அந்தப் பெண்ணையே போலீஸார் கண்காணித்தபோது, ஹேண்ட் பேக்கில் இருக்கும் பர்ஸ், செல்போன் ஆகியவற்றை எடுத்ததையும் போலீஸார் பார்த்தனர்.

இதையடுத்து அந்தப் பெண்ணை மடக்கிப்பிடித்த போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் மோகனப்பிரியா என்றும் சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது. பயணிகளின் உடமைகளைத் திருடிய குற்றத்துக்காக மோகனப்பிரியாவைக் கைது செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மோகனப்பிரியா
மோகனப்பிரியா

மோகனப்பிரியா, கல்லூரிக்கு காலையில் கடற்கரை - தாம்பரம் வழித்தட மின்சார ரயிலில் சீஸன் டிக்கெட் எடுத்து பயணம் செய்துவந்துள்ளார். கல்லூரி மாணவி என்பதால் டிப்டாப்பாக அவர் உடை அணிந்துள்ளார். இதனால் மோகனப்பிரியா மீது பயணிகள் யாருக்கும் சந்தேகம் வரவில்லை. மேலும், மகளிர் பெட்டியில் ஏறும் மோகனப்பிரியா, உதவி செய்வதுபோல இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டுவந்துள்ளார். காலையில் கல்லூரிக்கும் மாலையில் திருட்டுச் சம்பவத்திலும் ஈடுபட்டுவந்த மோகனப்பிரியாவின் பின்னணி குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் ஒருவர், ``எழும்பூர், மாம்பலம் ரயில்வே காவல் நிலையங்களில் கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் விசாரித்தபோது மகளிர்பெட்டியில்தான் அதிகளவில் திருட்டுச் சம்பவங்கள் நடந்தது தெரியவந்தது. இதனால்தான் இந்த வழித்தடத்தில் உள்ள மகளிர்பெட்டியில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டோம். அப்போது கறுப்பு நிற ஜீன்ஸ் பேன்ட்டும் மஞ்சள் நிற டி-சர்ட்டும் அணிந்திருந்த இளம்பெண் ஒருவரின் நடவடிக்கை ரோந்து மகளிர் போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

`திருடுவது யாருக்குமே தெரியாது; ஆனால்?!'-57 வழக்குகளில் சிக்கிய இளம்பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்

அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர்தான் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரிந்தது. அவர் தாம்பரம் பகுதியில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்பை படித்துவருகிறார். இவரிடமிருந்து 4 கிராம் தங்க நகைகள், ரொக்கப் பணம், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். வழக்கம்போல மோகனப்பிரியாவும் ஆடம்பரமாக வாழ திருடியதாகத் தெரிவித்தார்" என்றனர்.