`தோழிகளின் ஆடம்பரத்தால் திசைமாறினேன்!' -திருட்டுக்குக் காரணம் சொன்ன சென்னைக் கல்லூரி மாணவி
சென்னை ரயில்வே போலீஸாரிடம் சிக்கிய கல்லூரி மாணவி மோகனப்பிரியா, எதற்காகத் திருடினேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில் வழித்தடத்தில் பயணிகளின் உடைமைகளைத் திருடிய வழக்கில் கல்லூரி மாணவி மோகனப்பிரியாவை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர் போலீஸாரிடம், ``எனக்கு அப்பா இல்லை. அம்மா மீன் வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்திவருகிறார். அம்மாதான், என்னைக் கஷ்டப்பட்டு கல்லூரியில் படிக்க வைத்துவருகிறார். நானும் ஓரளவு நன்றாகப் படிப்பேன்.
என்னுடன் படிக்கும் மாணவிகள், தோழிகள் அனைவரும் கல்லூரிக்கு மாடலாக உடையணிந்து வருவார்கள். அதைப்பார்த்து பலநாள் ஏமாற்றமடைந்துள்ளேன். அதுபோல உடையணிய எனக்கு ஆசை. ஆனால் பணம் இல்லை. என்னைப் படிக்க வைக்கவே அம்மா கஷ்டப்பட்டு வருகிறார். அவர்களிடம் பணம் கேட்டாலும் கிடைக்காது.
இதனால் தோழிகளைப் போல ஆடம்பரமாக வாழ வேண்டும் என்பதற்காகத் திருட முடிவு செய்தேன். கல்லூரிக்குச் சென்றுவிட்டு மீதமுள்ள நேரத்தில் மின்சார ரயில்களில் செல்வேன். கடற்கரை - தாம்பரம் மின்சார வழித்தட ரயிலில் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, மாம்பலம் ரயில் நிலையத்துக்கு தினமும் ஏராளமானவர்கள் வந்து செல்வார்கள்.
கல்லூரி இல்லாத நாள்களில் அம்மாவிடம் தோழிகளைப் பார்க்கச் செல்வதாகக்கூறி மாம்பலத்துக்கு ரயிலில் வருவேன். என்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமலிருக்க முகத்தை துணியால் மூடிக்கொள்வேன். தாம்பரத்திலிருந்து நான் ஏறுவதால் எனக்கு சீட் கிடைத்துவிடும். இதனால், சீட்டில் இருந்தபடி சக பயணிகளை நோட்டமிடுவேன். தாம்பரத்திலிருந்து மாம்பலத்துக்கு ரயில் வருவதற்குள் கூட்டம் அதிகமாகிவிடும். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பவர்களுக்கு உதவி செய்வதுபோல அவர்களின் உடைமைகளை வாங்கி வைத்துக் கொள்வேன். பெரும்பாலும் பெண்களின் உடைமைகளைத்தான் வாங்குவேன். அவர்கள் கவனிக்காத நேரத்தில் அதிலிருக்கும் நகை, பணம், செல்போன்களைத் திருடிவிட்டு அடுத்த ரயில் நிலையத்தில் இறங்கிவிடுவேன்.
திருடிய பணத்தைக்கொண்டு ஷாப்பிங் செய்து ஆடம்பரமாக வாழ்ந்துவந்தேன். கையில் தாராளமாக பணம் புழங்கியதால் என்னுடைய லைஃப் ஸ்டைலும் மாறியது. என்னுடன் படிக்கும் மாணவிகள், தோழிகளைப் போல நானும் ரிச்சாக கல்லூரிக்குச் சென்றேன். என்னுடைய இந்தச் செயல், வீட்டில் உள்ளவர்களுக்குத் தெரியாது. சம்பவம் நடந்த அன்று மாம்பலம் ரயில் நிலையத்தில் சக பெண் பயணியின் ஹேண்ட் பேக்கிலிருந்து நகை, பணத்தை எடுக்கும்போது சிக்கிக் கொண்டேன்" எனக் கூறியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
திருட்டு வழக்கில் கல்லூரி மாணவி சிக்கிய தகவலை அவரின் அம்மாவுக்கு போலீஸார் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன அவர், காவல் நிலையத்துக்கு வந்தார். `என் மகள் செய்தது தவறுதான், இந்த ஒருமுறை மன்னித்துவிட்டுவிடுங்கள். அவளுக்கு நான் புத்திமதி சொல்லுகிறேன்' என போலீஸாரிடம் கெஞ்சியுள்ளார்.
அதற்கு போலீஸார், `உங்கள் மகள் இதற்கு முன் ஒருதடவை திருடும்போது எங்களிடம் சிக்கிக் கொண்டார். அப்போது அவர் கல்லூரி மாணவி என்று தெரிந்ததும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவளை மன்னித்து விட்டுவிட்டோம். ஆனால் அவள் திருந்தவில்லை. இதனால் இந்த முறை அவளைவிட முடியாது' எனக் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.