Published:Updated:

சென்னை: `என்னோட ராட்சஷிக்கு தகவல் சொல்லிடுங்க!' - ஆன்லைன் விளையாட்டால் மாணவன் தற்கொலை

`என்னை மன்னிச்சிரு. அடுத்த ஜென்மத்துல நானே உனக்கு புருஷனா கிடைப்பேன் அழாதே. உனக்கு நல்ல லைஃப் கிடைக்கும்' எனக் கடிதம் எழுதிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார் கல்லூரி மாணவன் நித்திஷ்குமார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`ஹலோ நான் பேங்க் மேனேஜர் பேசுறேன், உங்களுடைய ஏடிஎம் கார்டு எக்ஸ்ப்ரியாகிவிட்டது. அத ரினிவல் பண்ணணும். கார்டுல இருக்கிற 14 நம்பர சொல்லுங்க ’என்ற போன் கால் வராதவர்கள் இருக்க மாட்டார்கள். இது ஓல்டு ஸ்டைல். இப்போதெல்லாம், `ஹலோ சார், லாக்டௌனில் உங்களுக்கு ஹெல்ப் பண்ண எங்களிடம் சில பிளான்கள் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் 2 நிமிஷத்தில் அதைச் சொல்கிறேன்’ என்று பெண் குரலில் செல்போன்களுக்கு வரும் அழைப்புகள் அதிகரித்துள்ளன. அந்தப் பெண்ணிடம் `ஓகே’ என்று கூறினால், அந்தப் பிளான் குறித்த தகவல்களை சரவெடியாக அவர் கூறி முடிப்பார்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி
vikatan

`நீங்கள் டாக்குமென்ட்டை கொடுத்துவிட்டால் அடுத்த சில தினங்களுக்குள் லோன் ரெடியாகிவிடும். அதன் பிறகு லோன் தொகைக்கு ஏற்ப பிராசசிங் பீஸ் கட்டணும். பார் எக்ஸாம்புள், 5 லட்சம் ரூபாய் லோனுக்கு 5 சதவிகிதம் பிராசசிங் பீஸ், 10 லட்சம் ரூபாய் என்றால் 2 சதவிகிதம் பிராசசிங் பீஸ்’ எனச் சொல்வார்கள். `முதலில் ஆவணங்களுடன் பிராசசிங் பீஸை, நாங்கள் சொல்லும் வங்கி அக்கவுன்டில் செலுத்திவிடணும். அடுத்த மூன்று நாளைக்குள் உங்கள் அக்கவுன்டுக்கு பணம் வந்துவிடும்’ என்று அந்தப் பெண் விரிவாகக் கூறுவார்.

அவரை நம்பி லோன் தொகைக்கு ஏற்ப பிராசசிங் பீஸை செலுத்திய பிறகுதான், நீங்கள் ஏமாற்றப்பட்டிருப்பதை உணருவீர்கள். அந்தளவுக்கு புத்திச்சாலித்தனமாகப் பிளான் பண்ணி ஒரு கும்பல் ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இயங்கும் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸாருக்கு நாள்தோறும் ஆன்லைனில் புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. போலீஸாரும் புகார்களுக்கு ஏற்ப உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர்.

fraud
fraud

புற்றீசல் போல போலி கால் சென்டர்களின் மோசடி தொடர்கதையாகிவருகிறது. அதில் பலர் கைது செய்யப்பட்டாலும் புதுப்புது போலி கால்சென்டர்கள் தமிழகம் முழுவதும் முளைத்துக்கொண்டே இருக்கின்றன. சென்னையில் மட்டும் இதுவரை போலி கால் சென்டர்களால், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணத்தை இழந்துள்ளதாக சைபர் க்ரைம் போலீஸாருக்கு புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தநிலையில் சென்னை டி.பி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் நித்திஷ்குமார் (20). ஆன் லைன் விளையாட்டால் தற்கொலை செய்துள்ளார். இவர், செனாய் நகர் மூன்றாவது குறுக்கு பகுதியில் டாட்டூ கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார். வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து கடைக்குச் சென்ற நித்திஷ்குமார் வீடு திரும்பவில்லை. செல்போனையும் எடுக்காததால், அவரின் தம்பி கடைக்கு வந்து பார்த்தபோது நித்திஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் தெரியவந்தது.

கல்லூரி மாணவன் நித்திஷ்குமார்
கல்லூரி மாணவன் நித்திஷ்குமார்

இதுகுறித்து அமைந்தகரை போலீஸார், வழக்கு பதிவு செய்து நித்திஷ்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்வதற்கு முன், நித்திஷ் குமார் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதில் ``கேஸ்டோ கிளப் என்கிற ஆன்லைன் விளையாட்டு விளையாடி வந்தேன். அதில், நான் சேமித்து வைத்த பணத்தை இழந்துவிட்டேன். என்னோட இந்த முடிவுக்கு காரணம் வேறு யாரும் இல்லை. நான் வேலைபார்க்கும் கடையில் இருந்தும் 20,000 ரூபாய் எடுத்து விளையாடி தோற்றுவிட்டேன். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியமாகிவிட்டேன.

நான் எடுக்கிற முடிவு தப்புதான். எனக்கு வேற வழி தெரியல என்னை மன்னிச்சிடுங்க சேகர் அண்ணா. உங்களைக் கேட்காம உங்க பணத்தை எடுத்து தப்பு பண்ணிட்டேன். அம்மா, அப்பா உங்களை எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும் மன்னிச்சிடுங்க. திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னோட காதலி, என் உயிரே அவள்தான். என்னை மன்னிச்சிரு திவ்யா. அடுத்த ஜென்மத்துல நானே உனக்கு புருஷனா கிடைப்பேன் அழாதே. உனக்கு நல்ல லைஃப் கிடைக்கும். என்னோட போன் பாஸ் வேர்டும் இதுதான். எல்லோருக்கும் தகவல் கொடுங்க. முக்கியமாக திவ்யாவுக்கு... என்னுடைய போனில் அவள் பெயரை ராட்சஷின்னு பதிவு செய்திருக்கேன். கடைசியா திவ்யா என்னை பார்த்த பிறகு என்னை தூக்கிட்டுப் போங்க. எல்லாருக்கும் ஸாரி, என் தம்பியை நல்லா பாத்துக்கங்க’’ என எழுதியுள்ளார்.

தற்கொலை கடிதம்
தற்கொலை கடிதம்

இதுகுறித்து நம்மிடம் பேசிய சைபர் க்ரைம் போலீஸ் உயரதிகாரி ஒருவர், ``மற்ற மாவட்டங்களைவிட சென்னையில் போலி கால் சென்டர் தொடர்பான குற்றங்கள் அதிகம். சென்னையில் போலி கால் சென்டர் குறித்த தகவல்கள் கிடைத்தும் அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்தோம். இந்தக் குற்றங்களுக்கு மூளையாகச் செயல்பட்டவனையும் அவனின் கூட்டாளிகளையும் கைது செய்த பிறகு, அதே ஸ்டைலில் போலி கால் சென்டர்கள் குற்றங்கள் தொடர்ந்து நடந்தன. அதுகுறித்த புகார்கள் வந்து கொண்டே இருந்தன.

போலி கால் சென்டர்களை நடத்துவதற்கு பத்துக்கு பத்து அறையும் செல்போன்களும் நுனி நாக்கு ஆங்கிலத்தோடு மற்றவர்களை மூளைச்சலவை செய்யும் பேச்சுத்திறமை இருந்தால் போதும். அனைவரையும் ஏமாற்றிவிடலாம். இதுஒருபுறம் என்றால், ஊரடங்கில் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் மாணவர்கள், இளைஞர்கள், ஏன் இளம்பெண்கள் கூட ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அதில் பணத்தை இழந்தவர்கள் பலர் உள்ளனர். சென்னை டி.பி சத்திரத்தில் ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த கல்லூரி மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். எனவே, ஊரடங்கில் இணையதள வசதியைக் கவனமாக அனைவரும் கையாள வேண்டும்" என்றார்.

சென்னை:`சீக்ரெட் கோடு; சிக்கிய நடிகர் ஷாம்!' - நள்ளிரவில் பரபரப்பான அப்பார்ட்மென்ட்
மனநல ஆலோசகர் அபிசங்கரி
மனநல ஆலோசகர் அபிசங்கரி

இதுகுறித்து மனநல ஆலோசகர் அபிசங்கரி கூறுகையில், ``ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடியே பெரும்பாலானவர்கள் ஆன்லைன் மூலம் வேலை செய்துவருகின்றனர். அதனால் இணையதளத்தை அதிக நேரம் பயன்படுத்துகின்றனர். வேலை நேரத்திலேயே ரிலாஸிக்காக சமூகவலைதளம், ஆன் லைன் கேம்களில் கவனத்தை திசைதிருப்புகின்றனர். இது, அவர்களுக்குத் தெரியாமல் ஆன்லைனுக்கு பலர் அடிமையாகின்றனர். அதன்பிறகு நீண்ட நேரம் சமூகவலைதளங்களிலும் கேம்களிலும் நேரத்தைச் செலவிடுகின்றனர். அப்போது ஆன்லைனில் பதிவு செய்யப்படும் பதிவுகளுக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லையெனில் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அதைப்போலதான் ஆன்லைன் கேம்களும் ஒவ்வொருவரையும் அடிமைப்படுத்திவிடுகிறது. அதன்விளைவால் தற்கொலை செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். அதை ஆரம்பத்திலேயே கவனிக்கவில்லை என்றால் சிக்கலை ஏற்படுத்திவிடும். இணையதள பயன்பாட்டின் நேரத்தைக் குறைத்து புத்தகம் வாசிப்பது, குடும்பத்தினருடன் உரையாடுதல், சமூக சேவை ஆகியவற்றில் கவனத்தை திசைதிருப்ப வேண்டும். தேவைப்படின் மனநல ஆலோசகரிடம் கவுன்சலிங்கும் பெறலாம்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு