Published:Updated:

சென்னை: 'சக மாணவனுடன் நட்பு? திடீர் திருமண ஏற்பாடு - கல்லூரி மாணவி தற்கொலை!'

 தற்கொலை
தற்கொலை ( Representational Image )

தன்னுடைய மகளுக்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்தோம். இந்தச் சூழலில் அவள் தற்கொலை செய்து கொண்டதாக கல்லூரி மாணவியின் அம்மா காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.

சென்னை குன்றத்தூர், கொல்லச்சேரி, மாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் சிங்காரம். கூலித் தொழிலாளி. இவரின் மனைவி கலைச்செல்வி. இவர் குன்றத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``எனது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம், அத்திப்பாக்கம் கிராமம். எனக்கு 4 பிள்ளைகள். மூத்த மகன், மகளுக்கு திருமணமாகிவிட்டது. மூன்றாவது மகள் ப்ரியா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) (20). அவள் சென்னையில் உள்ள கல்லூரியில் பி.ஏ பொலிட்டிக்கல் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

மாணவி தற்கொலை
மாணவி தற்கொலை
Representational Image

எனது கணவர் சிங்காரமும் மூத்த மகனும் சொந்த ஊரில் கூலி வேலை செய்து வருகிறார்கள். எனது மகள் ப்ரியா அவள் படிக்கும் கல்லூரியில் ஒரு மாணவனுடன் பேசிப் பழகுவதாக எங்களுக்குத் தெரியவந்தது. அந்த மாணவனும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வான். அதனால் சொந்தத்தில் ப்ரியாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தோம். ஆனால் திருமணம் தொடர்பாக ப்ரியா எந்த பதிலையும் எங்களிடம் சொல்லவில்லை. என்னிடமும் அதிகமாக பேசுவதில்லை.

`காதல் தோல்வி; கஞ்சா போதை!' -சட்டப்பேரவை செயலரின் காரை சேதப்படுத்திய சென்னை இளைஞர்கள்

இரண்டு நாள்களாக மனகுழப்பத்தில் இருந்தாள். சில நாள்களில் சரியாகி விடுவாள் என இருந்தோம். நான் காலையில் பூ வியாபாரத்துக்கு வெளியில் சென்று விட்டேன். வீட்டில் ப்ரியாவும் அவளின் தங்கையும் இருந்தனர். ப்ரியா வீட்டில் இருந்தபோது அவளின் தங்கை மாடியில் காய வைத்த துணியை எடுத்துவர மேலே சென்றிருக்கிறாள். பின்னர் அவள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டியிருந்திருக்கிறது. உடனடியாக அக்கம் பக்கத்தினரின் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ப்ரியா, மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தாள்.

 தற்கொலை
தற்கொலை
Representational Image

பின்னர் ப்ரியாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவளைப் பரிசோதித்த டாக்டர்கள், ப்ரியா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். எனவே ப்ரியாவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குப் பிறகு ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாய பாரத் வழக்கு பதிவு செய்து ப்ரியாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திடீர் திருமண ஏற்பாட்டால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு