Published:Updated:

சென்னை: மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு! - கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்

கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் தொடர் போராட்டம்
News
கல்லூரியை முற்றுகையிட்டு மாணவர்கள் தொடர் போராட்டம்

சம்பந்தப்பட்ட ஆங்கிலத்துறைப் பேராசிரியரைக் கைதுசெய்ய வேண்டும் எனக் கோரி கல்லூரியை முற்றுகையிட்டு இரண்டு நாள்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டுவரும் புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி, அந்தக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சம்பந்தப்பட்ட ஆங்கிலத்துறைப் பேராசிரியரைக் கைதுசெய்ய வேண்டும் எனக் கோரி, கல்லூரியை முற்றுகையிட்டு, இரண்டு நாள்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரி
புனித தாமஸ் கலை அறிவியல் கல்லூரி

நேற்றைய தினம் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, தகவலறிந்து வந்த மதுரவாயல் காவல்துறையினர் பாதுகாப்புக்காகக் கல்லூரியில் குவிக்கப்பட்டனர். பின்னர், காவல்துறை உதவி ஆணையர் ரமேஷ் பாபு, விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறி உறுதியளித்ததும், மாணவர்கள் கலைந்து சென்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

இந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியரை சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்திருக்கிறது. ஆனால், இதை ஏற்காத கல்லூரி மாணவர்கள் அவரைக் கைதுசெய்ய வேண்டும் எனக் கோரி இன்றும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களிடம் பேசியபோது, ``குறிப்பிட்ட பேராசிரியர், ஆன்லைன் வகுப்பு நடக்கும்போதெல்லாம், மாணவிகளின் செல்போனைத் தொடர்புகொண்டு ஆபாசமாகப் பேசுவதும், ஆபாசமாக எஸ்.எம்.எஸ் அனுப்புவதுமாக இருந்திருக்கிறார்.

பாலியல் குற்றங்கள்
பாலியல் குற்றங்கள்

குறிப்பாக, ஆங்கிலத்துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கக்கூடிய ஒரு மாணவிக்கு இது போன்று தொடர்ச்சியாகப் பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். எனவே, அந்தப் பேராசியரைக் கண்டித்தும், அவரைக் கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டும் எனக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்" எனத் தெரிவித்தனர்.

ஆசிரியர் மாணவிகளுக்கு அனுப்பிய மெசேஜ்
ஆசிரியர் மாணவிகளுக்கு அனுப்பிய மெசேஜ்

மற்றொரு மாணவர், ``எங்கள் கல்லூரியில் இது போன்ற சம்பவங்கள் ஏற்கனவே பலமுறை நடந்திருக்கின்றன. அவையெல்லாம் கல்லூரிக்குள்ளாகவே பேசி முடித்துவைக்கப்பட்டிருக்கின்றன. காவல்துறை முறையாக விசாரித்தால், இவரைப் போன்று பல ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவுகள் வெளியில் வரும்" எனக் கூறினார்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

மேலும், இது குறித்து விளக்கம் கேட்பதற்காக கல்லூரி நிர்வாகத்தினரைத் தொடர்புகொண்டபோது, ``இங்கு போராட்டம் நடப்பதாக யார் சொன்னது... நீங்கள் வந்து பார்த்தீர்களா? இங்கு எந்தவிதத் தவறும் நடக்கவில்லை; எந்தவிதமான போராட்டத்திலும் மாணவர்கள் ஈடுபடவில்லை" எனக் கூறி தொடர்பை உடனடியாகத் துண்டித்தனர். மாணவர்களின் குற்றச்சாட்டு தொடர்பாக கல்லூரி நிர்வாகம் உரிய விளக்கம் அளித்தால் அதைப் பரிசீலனைக்குப் பின்னர் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

படங்கள் - முத்துக்குமார்.ப

(மாணவப் பத்திரிகையாளர்)